லிட்டருக்கு 20கிமீ மைலேஜ், 7 பேர் அமர்ந்தாலும் சவுகரியமான பயணம்... மாருதி எர்டிகாவை எல்லாரும் வாங்க காரணங்கள்!
ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து புதிய டிரைபர் (Triber) எம்பிவி கார் சமீபத்தில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த ரெனால்ட் காருக்கு மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் எர்டிகா (Ertiga) மற்றும் நிசான் கிராவைட் (Nissan Gravite) எம்பிவி கார்கள் போட்டியாக உள்ளன. இருப்பினும், இந்த மூன்றில் பலரும் வாங்கும் காராக இருப்பது, எர்டிகா ஆகும். அது ஏன், அதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பெரிய என்ஜின் & அதிக ஆற்றல்: ரெனால்ட் டிரைபர் மற்றும் நிசான் கிராவைட் கார்களை காட்டிலும் எர்டிகா சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணம், அதன் பெரிய மற்றும் பவர்ஃபுல்லான என்ஜின் ஆகும். எர்டிகாவில் 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதுவே, கிராவைட் மற்றும் டிரைபர் கார்களில் அளவில் சிறியதான 1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. எர்டிகாவில் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் என்ஜின் ஆனது அதிக ஆற்றலை வழங்குவதுடன் சிறந்த மைலேஜையும் வழங்குகிறது.

பெரிய பரிமாண அளவுகள்: கிராவைட் மற்றும் டிரைபர் கார்களுடன் ஒப்பிடுகையில், அளவில் பெரியதாக இருக்கும் காரணத்தினால் எர்டிகாவின் உட்புறத்தில் விசாலமான கேபின் கிடைக்கிறது. இதனால், எர்டிகா காருக்குள் மூன்றாவது இருக்கை வரிசையில் அமர்பவர்களால் நன்கு சவுகரியமாக அமர முடிகிறது. எனவே 7 பயணிகள் தாராளமாக அமர்ந்தப்படி எர்டிகாவில் பயணம் செய்யலாம்.
தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் சிஎன்ஜி கிட் (CNG kit): அதிக மைலேஜை பெற வழிவகுக்கும் சிஎன்ஜி கிட் ஆனது எர்டிகாவில் மாருதி சுஸுகி தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்கப்படுகிறது. ஆனால், டிரைபர் மற்றும் கிராவைட் கார்களில் சிஎன்ஜி கிட் ஆனது டீலர்கள் லெவலில் தான் பொருத்தி வழங்கப்படுகிறது. எர்டிகா சிஎன்ஜி காரில் அதிகப்பட்சமாக ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 26.09கிமீ மைலேஜ் பெற முடிகிறது.

முழுமையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது: எர்டிகாவில் ஒரு முழுமையான 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதுவே, டிரைபர் மற்றும் கிராவைட் கார்களில் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட்-மேனுவல் கியர்பாக்ஸ் தான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மேலும், இந்த கார்களில் ஏஎம்டி ஆனது 5 கியர்களை மட்டுமே கொண்டதாக உள்ளது.
எர்டிகாவில் வழங்கப்படும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது மென்மையான கியர் மாற்றத்திற்கும், சிறந்த நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்றதாக உள்ளது. அதுமட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் ஒப்பிடுகையில் சிறந்த செயல்படுதிறனை வழங்கக்கூடியதாகவும் விளங்குகிறது. இதனால், நெடுஞ்சாலை பயணங்களுக்கும், முன்னால் செல்லும் வாகனத்தை அதிவேகத்தில் முந்திச் செல்வதற்கும் எர்டிகாவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஏற்றதாக உள்ளது.
மாருதி சுஸுகியின் நெட்வொர்க்: எத்தனை புது, புது கார் பிராண்ட்கள் வந்தாலும் மாருதி சுஸுகிக்கு இருக்கும் பிராண்ட் மதிப்பே வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் டீலர்ஷிப் ஷோரூம் நெட்வொர்க் மற்றும் சர்வீஸ் மையங்களின் நெட்வொர்க்கை மாருதி சுஸுகி கொண்டுள்ளது. நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் இத்தகைய நிலையை அடைய இன்னும் பல வருடங்களாகும்; அல்லது அடையாமலும் போகலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை காரணங்கள் இருப்பதன் காரணமாகவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் எம்பிவி காராக எர்டிகா விளங்குகிறது. இருப்பினும், ரெனால்ட் டிரைபர் எம்பிவி கார் புதியதாக அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளதால் அதனை வாங்கவும் வரும் மாதங்களில் பலர் விரும்பலாம்.


Click it and Unblock the Notifications