இந்த கார் மட்டும் இல்லைனா செடான் பிரிவுக்கே சமாதி கட்டியிருப்பாங்க.. நல்ல வேளை தப்பிச்சுது
இந்தியாவில் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வாங்க நினைப்பது எஸ்யூவி கார்களைத் தான். இதனால் அதிகம் அடி வாங்கியிருப்பது செடான் கார்களின் விற்பனை தான். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட செடான்களின் விற்பனை இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் எஸ்யூவிக்களை விரும்புவதால் ஆட்டோமொபைல் நிறுவனங்களே கூட புதிய செடான் கார்களை வெளியிடுவதில்லை. தற்போது ஒரு கையளவு செடான் மாடல்களே ஒட்டுமொத்தமாக மாஸ் மார்க்கெட் பிரிவில் விற்பனையில் இருக்கின்றன.
ஆனாலும் மற்ற எந்த காரை விடவும் அதிகம் விற்பனையாகியிருப்பது ஒரு செடான் கார் தான். அது வேறெதுவும் இல்லை, மாருதியின் டிசையர் தான். ஆட்டோமொபைல் துறையில் ஒட்டுமொத்தமாக எஸ்யூவி அலை அடித்து வரும் போதும் மாருதியின் செடானை அது துளியும் தாக்கவில்லை. எனவே தான் 23,580 யூனிட்டுகள் விற்பனையுடன் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக இருக்கிறது மாருதி டிசையர்.

இன்னும் சொல்லப்போனால் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஏப்ரல் மாதம் டிசையரின் விற்பனை உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 16,996 யூனிட்டுகளே டிசையர் விற்பனையாகியிருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை 38.74 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த மாஸ் மார்க்கெட் செடான் விற்பனையில் 66.95% டிசையர் தான். அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மூன்று செடான் கார்களில் ஒன்று டிசையராக இருக்கிறது.
மற்ற அனைத்து நிறுவனங்களின் செடான் விற்பனையையும் ஒன்றாக சேர்த்தால் கூட டிசையரின் விற்பனையில் 50 சதவீதத்தைக் கூட நிறைவு செய்யாது என்பது கசப்பான உண்மை. இது மாருதி டிசையர் வாடிக்கையாளர்களிடம் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் ஆரா இருக்கிறது. இந்த செடான் கார் வெறும் 4,587 யூனிட்டுகள் மட்டுமே கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையாகியிருக்கிறது. டிசையரை விட 80 சதவீதம் குறைவு.

கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது ஆராவின் விற்பனை 8.59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஹோண்டா அமேஸ் இருக்கிறது. கடந்தாண்டை விட 41.46 சதவீதம் அதிகமாக 2,856 யூனிட்டுகள் விற்பனையை கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்திருக்கிறது அமேஸ். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது கொஞ்சம் விற்பனை அதிகரித்த மூன்றே செடான் கார்கள் இவை மட்டும். இவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து செடான்களின் விற்பனையுமே வீழ்ச்சியையே சந்தித்துள்ளது.
நான்காவது இடத்தில் ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ் இருக்கிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 27.60 சதவீதம் குறைவாக 1,162 யூனிட்டுகள் விற்பனையை வெர்ட்டஸ் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்துள்ளது. மேலும் டாப் ஐந்து இடங்களில் இருக்கும் ஒரேயொரு மிட்-சைஸ் செடான் கார் இது தான்.
இதனைத் தொடர்ந்து டாடா டிகோர், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய செடான் கார்கள் இருக்கின்றன. அனைத்துமே 1000 யூனிட்டுகளுக்கும் குறைவான விற்பனையையே கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்திருக்கின்றன. தொடர்ந்து கடைசி இரண்டு இடங்களில் டொயோட்டா கேம்ரி மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய செடான் கார்கள் இருக்கின்றன. இரண்டும் முறையே 199 யூனிட்டுகள் மற்றும் 177 யூனிட்டுகள் மட்டுமே கடந்த மாதம் விற்பனையாகியிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி அலையைத் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்தியாவில் எந்த செடானும் இல்லை, மேலே கூறியது போல மாருதி டிசையரைத் தவிர. டிசையர் மட்டும் இல்லையென்றால் செடான் பிரிவிற்கே இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முடிவுரை எழுத்தியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக 13,000 செடான் கார்கள் கூட விற்பனையாகியிருப்பாது டிசையரைத் தவிர்த்துவிட்டால். இது ஒரேயொரு எஸ்யூவி அல்லது ஹேச்ட்பேக் விற்பனையாகும் அளவாகும்.


Click it and Unblock the Notifications