34 கிமீ மைலேஜ்! ஆனா விலை முழுசா 5 லட்ச ரூபா கூட இல்ல! 25 வருஷத்துக்கு மேல ஆகியும் இன்னும் நிக்காம ஓடுது!
இந்திய சந்தை கண்ட மிகச்சிறந்த ஹேட்ச்பேக் கார்களில் (Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). முதல் தலைமுறை வேகன் ஆர் கார் கடந்த 1993ம் ஆண்டே ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அதன் பின் 6 ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்த 1999ம் ஆண்டில்தான், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. ஆனால் இன்னமும் மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனையில் உள்ளது. உலகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான வேகன் ஆர் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுஸுகி நிறுவனம் கடந்தது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கலாம்.

இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 3,655 மிமீ ஆகவும், 1,620 மிமீ ஆகவும், 1,675 மிமீ ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,435 மிமீ ஆக இருக்கிறது. இதன் மூலம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் உள்ளே, பயணிகளுக்கு சௌகரியமான இடவசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 'டர்னிங் ரேடியஸ்' வெறும் 4.7 மீட்டராக மட்டுமே உள்ளது. இதன் மூலம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர பகுதிகளில் இயக்குவதும், பார்க்கிங் செய்வதும், யூ-டர்ன் எடுப்பதும் மிகவும் எளிமையான ஒரு விஷயமாக உள்ளது.

மறுபக்கம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. அதன் பெட்ரோல் வேரியண்ட்களும் கூட ஒரு லிட்டருக்கு 23.56 கிலோ மீட்டர் முதல் 25.19 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜை வழங்குகின்றன. பெட்ரோல் இன்ஜினின் மைலேஜ் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவை அனைத்துமே அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்தான். மேலும் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும் (Features) மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் வழங்கப்படுகின்றன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 6.95 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டின் தொடக்கம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு சரியாக அமையவில்லை. ஆம், விற்பனையில் மிகப்பெரிய சரிவை மாருதி சுஸுகி வேகன் ஆர் சந்தித்துள்ளது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனையில் 37.21 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏனெனில் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 8,960 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 24,078 ஆக இருந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,118 ஆக சரிவடைந்துள்ளது. ஹேட்ச்பேக் கார்களில் இருந்து எஸ்யூவி ரக கார்களுக்கு வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியிருப்பது இந்த சரிவிற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும் கூட, குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய, அதே நேரத்தில் பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் எளிமையான ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி வேகன் ஆர் நல்ல ஆப்ஷன்தான் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








