இப்போ மக்கள் இந்த எலெக்ட்ரிக் காரைத் தான் தேடிப் போய் வாங்குறாங்க.. ஏன் தெரியுமா?
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் எதுவென்று தெரியுமா. அது எம்ஜி மோட்டாரின் விண்ட்ஸர் EV தான். 2024 செப்டம்பரில் இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது எம்ஜி மோட்டார். அப்போதிலிருந்து இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் காராக விண்ட்ஸர் EV-யே இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 4,000 யூனிட்டுகள் முதல் 5,000 யூனிட்டுகள் வரை இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
சரி மக்கள் போட்டி போட்டு வாங்கும் அளவிற்கு இந்த எலெக்ட்ரிக் காரில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கும். அதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் தேடலாம். விண்ட்ஸர் EV-யின் சிறப்பம்சங்கள் என்ன, மக்கள் ஏன் இதனை அதிகம் விரும்பி வாங்குகிறார்கள், நீங்களும் ஒன்றை வாங்கலாமா ஆகிய கேள்விக்கான பதில்களை இங்கே நாம் பார்க்கலாம்.

கட்டுரை தொடங்குவதற்கு முன்பே ஒரு சிறிய தகவலை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் BaaS (Battery as a Service) என்ற வாடகை பேட்டரி திட்டம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்தத் திட்டத்தை முதன் முதலில் இந்த விண்ட்ஸர் EV-யில், எம்ஜி மோட்டார் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் போது அதனை எப்படி வேண்டுமானாலும் எம்ஜி மோட்டார் வெளியிட்டிருக்கலாம். ஆனால் விண்ட்ஸர் EV வடிவில் அதனை வெளியிட்டது எம்ஜி. 4,295 மிமீ நீளம் கொண்ட விண்ட்ஸர் EV-யை நீங்கள், ஹேட்ச்பேக் என்று சொல்ல முடியாது எஸ்யூவி என்றும் சொல்ல முடியாது. மாறாக இதனை CUV, அதாவது கிராஸ்ஓவர் யுட்டிலிட்டி வெஹிக்கிள் என அழைத்தது எம்ஜி.

இந்தக் காரின் அடிப்படை, பயணிகளுக்கு சொகுசான பயணத்தைக் கொடுக்க வேண்டும் அவ்வளவு தான். நல்ல இடவசதி கொண்ட ஒரு காராக இந்த விண்ட்ஸர் EV இருந்து வருகிறது. அதவும் இந்தக் காரின் இரண்டாம் வரிசையில் ஏரோ லாஞ்சு இருக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. 135 டிதிரி வரை சாய்ந்து கொள்ளும் வகையில் இருக்கும் இந்த இருக்கை நம் வீட்டில் இருக்கும் சோபா செட்டின் சொகுசை காரிலேயே வழங்குகிறது.
ஐந்து பேர் வரை தாரளமாக அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டிருந்தது. இத்துடன் 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் ரூஃப் என ஒரு கார் வாடிக்கையாளரை எந்த வகையில் எல்லாம் கட்டிப் போட வேண்டும் எனத் தெரிந்து ஒவ்வொரு அம்சத்தையும் கொடுத்திருக்கிறது எம்ஜி மோட்டார்.
இதற்கெல்லாம் மேலாக இந்த விண்ட்ஸர் EV-யின் விலை தான், இந்தக் காரை உடனடியாக வாங்கத் தூண்டும் ஒன்ராக மாற்றுகிறது. இத்தனை அம்சங்களையும் BaaS திட்டத்துடன் வெறும் 10 லட்சம் ரூபாய் என்ற என்ற விலையில் வழங்கி வருகிறது எம்ஜி மோட்டார். இதே அளவைக் கொண்டிருக்கும் மற்ற மிட்-சைஸ் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் 15 லட்சம் ரூபாய்க்கு மேலான விலையைக் கொண்டிருந்த நிலையில், தொடக்கத்தில் குறைவான விலையில் வாங்க முடிகிற வகையில் இருக்கிறத இந்தக் கார் வாடிக்கையாளர்களை கட்டி இழுத்து வருகிறது.
2025ம் ஆண்டு மட்டும் சுமார் 46,000 விண்ட்ஸர் EV கார்களை எம்ஜி மோட்டார் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. சிறிய 38 kWh பேட்டரி பேக் கொண்ட விண்ஸ்டர் EV-யை 9.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (BaaS திட்டத்துடன்) தொடங்கியும், 52.9 kWh என்ற பெரிய பேட்டரி கொண்ட விண்ட்ஸர் EV ப்ரோவை BaaS திட்டத்துடன் 12.25 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கியும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது எம்ஜி மோட்டார்.
இந்த சிறிய பேட்டரி பேக்கானது 332 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுப்பதுடன், 45 kW DC சார்ஜர் முலம் 0-80% வரை 45 நிமிடங்களில் அதிகவேகமாக சார்ஜ் ஆகும் திறனையும் கொண்டுள்ளது. பெரிய 52.9 kWh பேட்டரி பேக்கானது 440 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. மேலும், இதனை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 1 மணி நேரத்தில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக எலெக்ட்ரிக் காரை வாங்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த விண்ஸ்டர் EV-யையும் குடும்பத்துடன் டெஸ்ட் டிரைவ் செய்யாமல் வேறு கார்களை பரிசீலனை செய்யாதீர்கள். ஒரு எஸ்யூவி கார் கொடுக்கும் அனுபவத்தை இந்த விண்ட்ஸர் EV கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த விண்ட்ஸர் EV கொடுக்கும் சொகுசு அனுபவத்தை எந்த எஸ்யூவி காராலும் கொடுக்க முடியாது.


Click it and Unblock the Notifications