பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க இயலாது: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விளக்கம்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதில்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலையில் மாற்றமில்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள விளக்கம் தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.42,000 கோடி நிதி இழப்பைச் சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலனை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாத சூழல் இருப்பதாகக் கூறியுள்ளார்.

என்ன நடக்கிறது?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது கொள்முதல் செலவும் உயர்கிறது. ஆனால் உள்நாட்டில் சில்லறை விலையை உடனடியாக உயர்த்த முடியாத சூழலில் நிறுவனங்கள் தங்களது லாபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக Jefferies நிறுவனம் வெளியிட்ட மதிப்பீடு சில விஷயங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த மதிப்பீட்டின்படி, நவம்பர் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் சுமார் ரூ.12 இழப்பையும், டீசல் விற்பனையில் ரூ.27 இழப்பையும் சந்தித்து வந்தன. அக்டோபரில் இந்த இழப்பு முறையே ரூ.22 மற்றும் ரூ.28 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை லாபம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
வரிகளும் காரணமா?
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் கச்சா எண்ணெய் விலை மட்டுமே காரணியாக இருப்பதில்லை. மத்திய கலால் வரி, மாநில அரசுகளின் மதிப்புக் கூட்டு வரி, விற்பனையாளர் கமிஷன் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் இறுதி விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக பெட்ரோல், டீசல் தற்போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டுவரப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வரி விகிதங்கள் வேறுபடுகின்றன. இதன் காரணமாக ஒரே நிறுவனத்தின் பெட்ரோல் நிலையமாக இருந்தாலும், வெவ்வேறு மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் விலையில் வித்தியாசம் ஏற்படுகிறது.
வரி குறைத்தும் விலை குறையவில்லை
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்தது. இருப்பினும் இந்த நடவடிக்கையின் பலன் முழுமையாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவியது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எனவே சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்கள் இந்தியாவின் இறக்குமதிச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் இதில் முக்கியமான காரணியாக இருக்கிறது.
உதாரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதே நேரத்தில் ரூபாயின் மதிப்பு சரிந்தால் இறக்குமதிக்கான செலவு எதிர்பார்த்த அளவுக்குக் குறையாமல் போகலாம். இதனுடன் கப்பல் போக்குவரத்து, காப்பீடு, சுத்திகரிப்பு மற்றும் வினியோகச் செலவுகளும் சேரும்போது விலைக் குறைப்புக்கான வாய்ப்பு மேலும் சிக்கலாகிறது.
வாகன ஓட்டிகளுக்கு பலன் கிட்டுமா?
தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கான உறுதியான உத்தரவாதத்தை மத்திய அரசு கொடுக்க இயலாத நிலை உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைவாக இருப்பதுடன், எண்ணெய் நிறுவனங்களின் இழப்புகள் ஈடுகட்டும்போது, இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும். அரசுகளின் வரி தொடர்பான முடிவுகள் ஆகியவை அடுத்தகட்ட விலை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.
பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் உடனடியாக பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கும் வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலை முதல் அரசுகளின் வரிக் கொள்கை வரை பல காரணிகள் இதில் உள்ளன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சாதகமான சூழலில் இருந்தால் நிச்சயமாக இதுகுறித்து அடுத்து வரும் மாதங்களில் விலை குறைப்பு குறித்து அரசும், எண்ணெய் நிறுவனங்களும் பரிசீலிக்கும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications


