இந்தியர்களைப் பெருமைப்படுத்த டாடா செய்யும் செயல்.. இதுக்காகவே முழுசா சப்போர்ட் பண்ணலாம்!
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் இருந்து வருகிறது. இந்தியா ஆட்டோமொபைல் சந்தைக்கு பல்வேறு திட்டங்களை டாடா வைத்திருக்கிறது. அதில் நிறைய வாடிக்கையாளர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருப்பது அவின்யா பிராண்டு குறித்த திட்டத்திற்குத் தான். ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் என்ற பிராண்டின் கீழ் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், ஏன் புதிதாக அவின்யா என்ற புதிய பிராண்டை உருவாக்க வேண்டும் என்ற கேள்வி நிறைய பேர் மனதில் இருக்கிறது. அது ஏன் என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு துணை நிறுவனங்கள் (வேறு வேறு பிராண்டுகள்) இருக்கின்றன. இரண்டும் ஒரே குடையின் கீழ் தான் வரும் ஆனால் வேறு வேறு பண்புகளைக் கொண்டிருக்கும். உதாரணமாக ஹூண்டாய் - ஜெனிசிஸ், டொயோட்டா - லெக்சஸ் ஆகியவற்றைக் கூறலாம். ஜெனிசிஸ் என்பது ஹூண்டாய் தொடங்கிய மற்றொரு ஆட்டோமொபைல் பிராண்டு. ஏற்கனவே ஒரு பெயரில் கார்களை விற்பனை செய்து வரும் போது ஏன் இன்னொரு பெயரில் புதிய பிராண்டை மார்க்கெட் செய்ய வேண்டும்?

ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். ஹூண்டாய் கார்கள் மீதும், நிறுவனத்தின் மீதும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ஒரு கருத்து இருக்கும். ஹூண்டாய் என்றால் 7 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான கார்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் என வாடிக்கையாளர்கள் நினைத்து வைத்திருப்பார்கள்.
இந்த நேரத்தில் 70 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை ஹூண்டாய் வெளியிட்டால் என்னாகும். இந்தப் புதிய 70 லட்சம் ரூபாய் காரானது முற்றிலும் வேறான தன்மைகளைக் கொண்டிருக்கும். ப்ரீமியமான மூலப் பொருட்களை இந்தக் காரைத் தயாரிக்கப் பயன்படுத்தியிருப்பார்கள். தங்களுடைய குறைவான விலை கொண்ட காரில் செய்திடாத பல்வேறு தனித்துவமான விஷயங்களை ஹூண்டாய் அதில் செய்திருக்கும். ஆனால் வாடிக்கையாளர்களின் மனதில் அவை அவ்வளவு எளிதாகப் பதியாது. நம்மைப் பொறுத்தவரை அது விலை அதிகமான ஹூண்டாய் கார், அவ்வளவு தான்.

ஹூண்டாய் நிறுவனத்தாலும் இரண்டு கார்களில் விலை உயர்வான கார் ஏன் சிறந்தது என்பதை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க முடியாது. எனவே தான் தனி பிராண்டு ஒன்றை உருவாக்கி அதன் கீழ் இப்படி வேறு விதமான பண்புகளைக் கொண்டிருக்கும் கார்களை வெளியிடுகின்றன. இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் தங்களுடைய பிராண்டின் இமேஜை பாதிக்காமல், அதே நேரத்தில் புதிய காரையும் ஃபிரஷ்ஷான கண்ணோட்டத்தோடு வாடிக்கையாளர்களிம் கொண்டு சேர்க்க முடியும்.
மேலும், இரண்டு கார்களுக்கான வாடிக்கையாளர் வட்டமும் வேறு வேறாக இருக்கும். இரண்டு கார்களுக்கும் வெவ்வேறு திட்டங்களை ஹூண்டாய் செயல்படுத்த வேண்டியதாக இருக்கும். இரண்டையும் ஒரே நேரத்தில் ஹூண்டாயால் செய்ய முடியாது. எனவே இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்கும் போது அதனை நிர்வகிப்பதும் எளிதாக இருக்கும், வாடிக்கையாளர்களும் குழப்பம் இல்லாமல் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
இந்த காரணத்தினால் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அவின்யா என்ற புதிய பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறது. டாடா மோட்டார்ஸுக்கென்று இந்தியாவில் தனி இமேஜ் இருக்கிறது. அதில் பாஸிட்டிவ் அம்சங்களும் உண்டு நெகட்டிவ் அம்சங்களும் உண்டு. ஆனால் இவை எதுவும் தாங்கள் உருவாக்கும் ப்ரீமியமான காரை பாதிக்கக்கூடாது, அதனை ஃபிரஷ்ஷாக வாடிக்கையாளர்கள் அணுக வேண்டும் என்ற காரணத்தினால் தான் அதனை தனி பிராண்டாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.
மேலும் தற்போது டாடா மோட்டார்ஸ் பிராண்டின் கீழ் எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு வகையான கார்களையும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவின்யா பிராண்டை எலெக்ட்ரிக் கார்களுக்கு மட்டுமேயானதாக கட்டமைக்க விரும்புகிறது டாடா மோட்டார்ஸ். தற்போது மாஸ் மார்க்கெட் பிரிவில் நிறைய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருக்கின்றன. சொகுசு 70 லட்சம் ரூபாய்க்கு மேலான சொகுசு கார்கள் பிரிவிலும் நிறைய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு இடைப்பட்டு 30 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய்க்கு இடையிலான ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் பெரியளவில் போட்டியில்லை. அந்த இடத்தைக் குறிவைத்தே அவின்யா பிராண்டை டாடா மோட்டார்ஸ் களமிறக்கவிருக்கிறது. ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் டாடாவின் கைகளில் இருப்பதும் அவின்யாவின் உருவாக்கத்திற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக நாம் கூறலாம்.
ஜாகுவார் லேண்டு ரோவர் சொகுசு கார்கள் பிரிவைச் சேர்ந்தது என்பது நமக்குத் தெரியும். இதில் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு, எலெக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை டாடா மோட்டார்ஸின் கார்களில் அந்நிறுவனத்தால் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவையெல்லாம் பட்ஜெட் ரகத்தைச் சேர்ந்தவை. எனவே ஜாகுவார் லேண்டு ரோவரின் கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அவின்யா பிராண்டு உருவாக்கப்படுகிறது.
இந்தியாவில் அவின்யாவிற்கான வாடிக்கையாளர் வட்டம் குறைவு தான். இந்தியாவைக் கடந்து உலகெங்கும் அவின்யாவைக் கொண்டு செல்லும் திட்டத்துடனேயே அதனை உருவாக்கி வருகிறது டாடா. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு. இந்தியாவில் இருந்து ஒரு ப்ரீமியமான பிராண்டு உருவாகி வருவதால் வாடிக்கையாளர்களும் இதனை ஆர்வமாக எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகெங்கும் இருக்கும் சந்தைகளில் அவின்யா கால் பதிக்கும் போது அது டாடாவின் பெருமையாக மட்டும் இருக்காது, இந்தியாவின் பெருமையாகவும் இருக்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பை இந்தியர்களும் வாங்கி இதன் மூலம் பயன் பெறலாம். எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், டாடாவிற்கும் இந்தியாவிற்கும் நன்மை தரக்கூடிய விஷயமாகவே அவின்யாவின் அறிமுகம் இருக்கும்.


Click it and Unblock the Notifications