ஸ்மார்ட்போன் தயாரிச்சு வந்த நிறுவனம்.. இப்போ கார் தயாரிப்புலயும் கலக்குது!
சீனா, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஸ்மார்ட்போன்களுக்காக பெயர் போன ஒரு நிறுவனம், தற்போது கார் தயாரிப்பில், அதுவும் பெர்ஃபாமன்ஸ் மற்றும் சொகுசு கார் தயாரிப்பில் கலக்கி வருகிறது. எந்த நிறுவனம் என்று தெரிகிறதா, ஷாவ்மியே (Xiaomi) தான். Mi, ரெட்மீ போன்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள் இல்லையா. அதனை தயாரிக்கும் நிறுவனம் தான் ஷாவ்மி. அந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே கார் தயாரிப்பில் கலக்கி வருகிறது.
இந்த நிறுவனம் முதன் முதலாக வெளியிட்ட கார் SU7, ஒரு எலெக்ட்ரிக் செடான் கார். இந்தக் காரின் அம்சங்களைப் பார்த்து, இதனை வாங்க சீனாவில் வாடிக்கையாளர்கள் குவிந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் வெளியிட்ட YU7 எலெக்ட்ரிக் எஸ்யூவியும் அங்கே ஹிட் தான். இடையே SU7 காரை இந்தியாவில் வெளியிடுவது குறித்தும் ஷாவ்மி பரிசீலனை செய்தது. இதற்காக பெங்களூருவில் இந்த எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் காட்சிப்படுத்தவும் செய்தது.

சரி இப்போது அது செய்தியல்லை, பெர்ஃபமான்ஸை கார்களை உருவாக்கி விற்பனை செய்து வந்த ஷாவ்மி, தற்போது தனி கார் பிராண்டு ஒன்றையே அறிமுகம் செய்துள்ளது. ஷாவ்மி கார்களில் இருந்து தனித்த அடையாளங்களைக் கொண்டிருக்கும் வகையில் ஸ்கைநோமேடு (Skynomad) என்ற புதிய கார் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது.
ஷாவ்மி பிராண்டின் கீழ் பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யத் திட்டம் வைத்திருக்கும் நிலையில், நல்ல இடவசதி கொண்ட பிராக்டிகலான கார்களையும், ஹைபிரிட் கார்களையும் விற்பனை செய்யும் நோக்கத்தோடு ஸ்கைநோமேடு என்ற புதிய பிராண்டை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அது மட்டுமின்றி இந்த பிராண்டின் கீழ் N90 என்ற புதிய கார் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மி.

பார்ப்பதற்கு ப்ரீமியம், பாதுகாப்பான மற்றும் சொகுசு எஸ்யூவி போலான லுக்கைக் கொண்டுள்ளது இந்த ஸ்கைநோமேடு N90 எஸ்யூவி. மூன்று வரிசையாக ஏழு பேர் அமரும் வகையிலான எஸ்யூவியாக இதனை உருவாக்கியிருக்கிறது ஷாவ்மி. 5,285 மிமீ நீளம், 1,998 மிமீ அகலம், 1,825 மிமீ உயரம் மற்றும் 3,080 மிமீ நீள வீல்பேஸையும் இந்தக் கார் கொண்டிருக்கிறது.
2.8 டன்கள் எடையுடன் மிகவும் கணமான காராகவும் இது இருக்கிறது. 5.3 மீட்டர் நீளம் என்னும் போது ஏழு நபர்கள் உட்கார்ந்து என்ன படுத்தே உறங்கலாம். காம்பேக்ட் கார்களுடன் ஒப்பிடும் போது அவ்வளவு இடவசதி கொண்ட ஒன்றாக இது இருக்கும். இந்த N90 எஸ்யூவியை ஹைபிரிட் காராகவே வெளியிட ஷாவ்மி திட்டமிட்டுள்ளது.
ஹைபிரிட் என்னும் போது வழக்கமான பெட்ரோல் ஹைபிரிட்டை நினைக்க வேண்டாம். இது ரேஞ்சு எக்ஸ்டென்டர் ஹைபிரிட் எலெக்ட்ரிக் வகையைச் சேர்ந்தது. அதாவது இது பிரதானமாக ஒரு எலெக்ட்ரிக் கார் தான். எலெக்ட்ரிக் கார் போலவே பெரிய பேட்டரி பேக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் கூடுதலாக ஒரு பெட்ரோல் இன்ஜினும் கொடுக்கப்பட்டிருக்கும். இது ஒரு ஜெனரேட்டர் போல செயல்பட்டு காரின் பேட்டரிக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவி செய்யும்.
அதன் மூலம் காரின் ரேஞ்சையும் உயர்த்தும். இந்த பெட்ரோல் இன்ஜின் காரின் இயக்கத்திற்கு நேரடியாக எந்த வகையிலும் தொடர்பில் இருக்காது. இது போன்ற ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்களின் உருவாக்கத்திலேயே தற்போது மஹிந்திரா ஈடுபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இன்ஜின் முழு திறனுடன் இயங்கத் தேவையில்லை என்பதால், குறைவான அளவிலேயே எரிபொருள் செலவாகும். இது கூடுதல் மைலேஜைக் கொடுக்க உதவுவதுடன், எரிபொருள் காரை விட குறைவான காற்று மாசுவையே வெளியிடும்.
தொழில்நுட்ப ரீதியிலும் சரி, பயன்பாட்டு ரீதியிலும் சரி, பிரமாதமான காராகவே ஸ்கைநோமேடு N90 உள்ளது. பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபிசிக்கல் பட்டன்களே இல்லாத வகையிலான டிரைவிங் கேபின், பாதுகாப்பிற்காக LiDAR சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. விளக்குகள் அனைத்து LED-யாகவே கொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு வடிவிலும் வாங்க முடிகிற காராகவே இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வரிசையிலும், இரண்டாம் வரிசையிலும் நான்கு கேப்டன் சீட்கள் இந்தக் காரில் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இரண்டு வரிசை சீட்களையும் நேரெதிரே திருப்பிக் கொள்கிற வசதியையும் இதில் கொடுக்கப்படவிருப்பதை படங்கள் மூலமாகக் காட்டியிருக்கிறது ஷாவ்மி.
இந்த ப்ரீமியம் எஸ்யூவியில் கொடுக்கப்படவிருக்கும் பவர்ட்ரெயின் குறித்த விவரங்களை அந்நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினுடன், மேலே கூறியது போல ஜெனரேட்டர் போன்ற பயன்பாட்டிற்காக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை இந்த எஸ்யூவியில் அந்நிறுவனம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காரில் 76 kWh பேட்டரி பேக்கை ஷாவ்மி கொடுக்கலாம் எனக கூறப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்தமாக 421 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதிகபட்சமாக மணிக்கு 190 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் இந்தக் காரில் கொடுக்கப்படும் எனவும் தெரிகிறது.
பேட்டரியில் சார்ஜில் மட்டும் 370 கிமீ வரையிலான ரேஞ்சை இந்தக் கார் கொண்டிருக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன. ரேஞ்சு எக்ஸ்டென்டர் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார் என்பதால் இது குறைவான ரேஞ்சோ என்று அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இதன் டர்போ பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 16 கிமீ வரை மைலேஜ் கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்குமாம்.
இந்தியாவில் இந்தக் கார் வெளியிடப்பட வாய்ப்புகள் இருக்கிறதா? ஷாவ்மியின் கார்களே இன்னும் இந்தியாவில் வெளியாகுமா என்பது குறித்த உறுதி இல்லை. முதலில் சீனாவில் நிலையாக ஒரு இடத்தைப் பிடித்துவிட்டே, மற்ற நாடுகளுக்கு விரிவாக்கம் குறித்து யோசிப்போம் என ஷாவ்மி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஷாவ்மி ஆட்டோமொபைல் கால்பதிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது தான் என்றாலும், அது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பது தான் உண்மை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கைநோமேடின் இந்த N90 சிறப்பான ஒரு காராகவே இருக்கிறது. இந்தியாவில் ஆடி, BMW உள்ளிட்ட சொகுசு கார்களின் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்த ஸ்கைநோமேடு இருக்கலாம். ஆனால் மேலே கூறியது போல இந்தியாவில் இப்போதைக்கு இந்த பிராண்டு அறிமுகமாகாது. இந்திய எலெக்ட்ரிக்/ ஹைபிரிட் கார் சந்தை தற்போது தொடக்க நிலையிலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications