3,000 எச்பி பவருடன் 500 கிமீ வேகத்தை கடந்து கின்னஸ் சாதனை படைத்த BYD எலெக்ட்ரிக் கார்

உலகின் அதிவேக கார்களின் பட்டியலில் இதுவரை பெட்ரோல், டீசல் சூப்பர் கார்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், அந்த வரலாற்றை மாற்றியமைத்துள்ளது சீனாவின் BYD நிறுவனம். அந்நிறுவனத்தின் யாங்வாங் U9 Xtreme எலக்ட்ரிக் ஹைப்பர் கார், மணிக்கு 500 கிமீ வேகத்தைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த அதிவேக சோதனை ஓட்ட முயற்சியில், யாங்வாங் U9 Xtreme கார் மணிக்கு 503.17 கிமீ வேகத்தை எட்டி மிரட்டியுள்ளது. இதன்மூலம் தயாரிப்பு நிலை கார்களில் மணிக்கு 500 கிமீ வேகத்தைக் கடந்த முதல் கார் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளது. இந்தச் சாதனை சர்வதேச மோட்டார் விளையாட்டு அமைப்பான FIA அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

BYD Car

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் சர்வதேச சாலையில் கடந்த 1ந் தேதி இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதற்காக சாலையின் குறிப்பிட்ட பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜெர்மனியைச் சேர்ந்த அனுபவமிக்க ரேஸிங் டிரைவர் மார்க் பாசெங் காரை ஓட்டினார்.

இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கு முன்பே யாங்வாங் U9 Xtreme கார் அதிவேக சோதனைகளில் பல முறை அதிகபட்ச வேக அளவுகளை மிஞ்சி அசத்தி வந்தது. கடந்த 2025 செப்டம்பரில் ஜெர்மனியின் ATP பாப்பன்பர்க் சோதனை மையத்தில் மணிக்கு 496.22 கிமீ வேகத்தை எட்டியிருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

3,000 எச்பி பவர்

இந்த காரில் நான்கு தனித்தனி எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து சுமார் 2,977 எச்பி பவரை வெளிப்படுத்துகின்றன. மேலும், 1,200 வோல்ட் மின்னழுத்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், அதிவேகத்தில் சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள நான்கு மோட்டார்களும் அதிகபட்சமாக நிமிடத்திற்கு 30,000 சுற்றுகள் வரை சுழலும் திறன் கொண்டதாக உள்ளன.

இதன் மூலம் ஒவ்வொரு சக்கரத்திற்கும் தனித்தனியாக சக்தியை நிர்வகிக்க முடியும். அதிவேகத்தில் காரின் கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மணிக்கு 500 கிமீ வேகத்தில் பயணிக்கும்போது காரின் ஏரோடைனமிக்ஸ், டயர்கள், சஸ்பென்ஷன் ஆகியவையும் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு யாங்வாங் U9 Xtreme காரில் பெரிய முன்பக்க ஸ்பிளிட்டர், பின்பக்க டிஃப்யூசர், பிரத்யேக பின்புற இறக்கை உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிவேகத்தில் காரின் பின்புற சக்கரங்களுக்கு தேவையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் பின்புற இறக்கையின் கோணமும் மாற்றப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் மென்பொருள், டயர் அழுத்தம் ஆகியவையும் சோதனையின்போது சரிசெய்யப்பட்டன. இதனால் சாலையின் சிறிய மேடு பள்ளங்களிலும் காரின் நிலைத்தன்மையை மேம்படுத்த முடிந்ததாக பிஒய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை

இந்த சாதனைக்கு FIA அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இரண்டு புதிய சாதனைகள் பதிவாகியுள்ளன. தயாரிப்பு நிலை கார்களில் ஒரே திசையில் அதிகபட்ச வேகம் மற்றும் எலக்ட்ரிக் கார்களில் ஒரே திசையில் அதிகபட்ச வேகம் ஆகிய பிரிவுகளில் யாங்வாங் U9 Xtreme சாதனை படைத்துள்ளது.

இந்த கார் ஏற்கெனவே ஜெர்மனியின் புகழ்பெற்ற நர்பர்க்ரிங் நார்ட்ஸ்லைஃப் பந்தயப் பாதையில் 6 நிமிடம் 59.157 வினாடிகளில் ஒரு சுற்றை நிறைவு செய்துள்ளது. இதன்மூலம் ஏழு நிமிடங்களுக்குள் அந்தப் பாதையை கடந்த முதல் தயாரிப்பு நிலை எலக்ட்ரிக் சூப்பர் கார் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

30 யூனிட்டுகள் மட்டுமே

உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கார்களில் ஒன்றாக மாறி இருக்கும் யாங்வாங் U9 Xtreme கார் மொத்தமாக 30 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்க BYD நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், உலகின் மிகவும் அரிதான மற்றும் பிரத்யேகமான எலக்ட்ரிக் ஹைப்பர் கார்களில் ஒன்றாக இது இருக்கும்.

இதுவரை சூப்பர் கார் உலகில் வேகத்திற்கான போட்டியில் புகாட்டி, கோனிக்செக் போன்ற நிறுவனங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. தற்போது சீனாவின் BYD நிறுவனம் தனது எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்கள் வேகத்திலும் செயல்திறனிலும் புதிய எல்லைகளைத் தொடும் என்பதற்கு யாங்வாங் U9 Xtreme சிறந்த உதாரணமாக மாறி இருக்கிறது.

Article Published On: Saturday, November 7, 2026, 14:36 [IST]
English summary
Yangwang u9 xtreme 500 kmph speed record abu dhabi
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out