ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் Vs டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ்: ஒப்பீடு
ஹேட்ச்பேக் கார்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் க்ராஸ்ஓவர் மாடல்களில் புதிய வரவு ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்.
ஃபோக்ஸ்வேகன் க்ராஸ் போலோ, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் மற்றும் ஃபியட் அவென்ச்சுராவை தொடர்ந்து தற்போது ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் களத்தில் குதித்துள்ளது. ஸ்லைடரில் சிறப்பம்சங்கள் ஒப்பீடு தகவல்களை காணலாம்.

ஒப்பீடு மாடல்கள்
இந்த செக்மென்ட்டில் முதலில் வந்த ஃபோக்ஸ்வேகன் க்ராஸ்போலோ மற்றும் சமீபத்தில் வந்த ஃபியட் அவென்ச்சுரா ஆகிய மாடல்கள் பெரிய அளவில் சாதிக்க தவறிய நிலையில், இந்த செக்மென்ட்டில் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் மட்டும் விற்பனையில் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. எனவே, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸுடன் ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரை இந்த செய்தியில் சில முக்கிய அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தோற்றம்
புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பது அதன் டிசைன்தான். அதேபோன்று, தற்போது ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் ரகத்தில் வந்திருக்கும் ஐ20 ஆக்டிவ்தான் தற்போது சிறந்த தோற்றத்தை கொண்டிருக்கிறது. எட்டியோஸ் க்ராஸ் காரை ஒப்பிடும்போது, ஐ20 ஆக்டிவ் காரின் ஒட்டுமொத்த தோற்றம் அதிக வசீகரத்தை கொண்டிருக்கிறது.

வீல் பேஸ்
கேபின் இடவசதியில் வீல் பேஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் 2,570 மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் 2,460 மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது. இங்கு ஐ20 ஆக்டிவ் முன்னிலை பெறுகிறது.

இன்டிரியர்
எப்போதுமே சிறந்த இன்டிரியருக்கு பெயர் போன ஹூண்டாய் தயாரிப்பு என்பதால் ஐ20 ஆக்டிவ் இன்டிரியர் மிகச்சிறப்பாகவே இருக்கிறது. மேலும், இருவிதமான இரட்டை வண்ணங்களில் கிடைக்கும். மேலும், பாகங்களின் தரத்திலும் ஐ20 ஆக்டிவ் முன்னிலை பெறுகிறது.
[ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.]

எஞ்சின் விபரம் - பெட்ரோல்
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரில் 83 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. ஆனால், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் 80 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் மற்றும் 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. க்ராஸ்ஓவர் விரும்பிகள் பெர்ஃபார்மென்ஸுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை கருதி, டொயோட்டா புத்திசாலித்தனமாக இரு வித பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களை வழங்குகிறது.

எஞ்சின் விபரம் - டீசல்
டீசல் மாடலில் இரு கார்களிலுமே 1.4 லிட்டர் எஞ்சின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஐ20 ஆக்டிவ் டீசல் எஞ்சின் 90 பிஎஸ் பவரை அளிக்கும் நிலையில், எட்டியோஸ் க்ராஸ் டீசல் எஞ்சின் 68 பிஎஸ் பவரை மட்டுமே அளிக்கும். எனவே, டொயோட்டா நிறுவனம் பெட்ரோல் மாடலுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது தெரிகிறது.

மைலேஜ்- பெட்ரோல்
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.19 கிமீ மைலேஜையும், எட்டியோஸ் க்ராஸ் 1.2 லி மாடல் லிட்டருக்கு 17.71 கிமீ மைலேஜையும், 1.5 லி மாடல் லிட்டருக்கு 16.78 கிமீ மைலேஜையும் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதில், 1.2 லிட்டரை ஒப்பிடும்போது எட்டியோஸ் க்ராஸ் சிறந்ததாக இருக்கிறது.

மைலேஜ் - டீசல்
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் 1.4 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 21.19 கிமீ மைலேஜை வழங்குகிறது. ஆனால், எட்டியோஸ் க்ராஸ் லிட்டருக்கு 23.59 கிமீ மைலேஜை வழங்குகிறது. மைலேஜை பொறுத்தவரையில் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் முன்னிலை பெறுகிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்
இந்த செக்மென்ட்டில் இருக்கும் அனைத்து மாடல்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் 174 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸும் கொண்டது. எலைட் ஐ20 காரைவிட ஐ20 ஆக்டிவ் மாடலின் கிரவுண்ட் கிளிரயன்ஸ் 20மிமீ அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதிலும், ஐ20 ஆக்டிவ் முதன்மை பெறுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் மாடலில் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், ஐ20 பேஸ் மாடலில் இந்த வசதிகள் கிடைக்காது. டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே இந்த பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இதுதவிர, இம்மொபைலைசர், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட பொதுவான வசதிகள் உள்ளன. ஐ20 காரில் ஆன்ட்டி பின்ச் பவர் விண்டோஸ், விபத்தில் சிக்கும்போது தானியங்கி முறையில் கதவுகள் திறந்துகொள்ளும் வசதி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

விலை ஒப்பீடு
ஹூண்டாய் ஐ20 காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் பேஸ் மாடல் ரூ.7.57 லட்சம் ஆன்ரோடு விலையாகிறது. டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரின் பெட்ரோல் பேஸ் மாடல் ரூ.7.45 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. ஐ20 ஆக்டிவ் டீசல் பேஸ் மாடல் ரூ.9.19 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் ரூ.9.03 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது. தோற்றம், இன்டிரியர் டிசைன், வசதிகள், சிறந்த எஞ்சின் ஆப்ஷன் என அனைத்திலும் ஐ20 ஆக்டிவ் சிறப்பான மாடலாகவே இருக்கும். இது நிச்சயம் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

தனிப்பட்ட விருப்பம்
தனிப்பட்ட விருப்பங்களின்பேரில் இந்த தேர்வு மாறுபடலாம். இரண்டில் எது பெஸ்ட் என்பது குறித்த உங்களது விருப்பத்தை கருத்துப் பெட்டியில் எழுதலாம்.



Click it and Unblock the Notifications








