ரூ.10 லட்சத்திற்குள் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த 5 கார்கள்!
இந்தியாவில் பெருகி வரும் வாகனப் பெருக்கத்தால், சாலைப் பாதுகாப்பு அருகி வருகிறது. வாகனத்தில் வெளியில் செல்பவர், வீடு திரும்பினால்தான் நிச்சயம் என்ற நிலை உருவாகியுள்ளது. நம் நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் வாகன விபத்துக்கள் நடப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துக்களில் 1.50 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் ஒருபக்கம் குலை நடுங்க செய்கின்றன.
இந்தநிலையில், சமீபத்தில் கார்களுக்கு நடத்தப்பட்ட கிராஷ் சோதனையும் வேதனையை தருவதாக அமைந்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார் மாடல்களில் குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கூட இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக குளோபல் என்சிஏபி அமைப்பு குறிப்பிடுகிறது.
கார் செக்மென்ட்டிலேயே இந்த நிலை என்றால் மொத்த வாகன ரகங்களையும், அதன் பாதுகாப்பு அம்சங்களையும் எண்ணி பார்த்தால் வெளியில் செல்ல யோக்கிதை இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இருப்பினும், சமீபத்தில் நடத்த கிராஷ் டெஸ்ட் முடிவுகளை பார்த்து கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட மத்திய அரசு படிப்படியாக கார், இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது ஆறுதலான விஷயம் என்றாலும், உடனடியாக நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை. அடுத்த ஆண்டு அக்டோபரிலிருந்து பல புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுவரை கார் வாங்குவதை தள்ளிப்போட முடியுமா என்ன? எனவே, தற்போது நம் நாட்டு மக்களின் சராசரிய பட்ஜெட் தொகையான ரூ.10 லட்சத்திற்குள் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் 5 சிறந்த கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

பட்டியல்
இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கார் மாடல்கள் கிராஷ் டெஸ்ட் தர மதிப்பீட்டில் தேர்வு செய்யப்படவில்லை. அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளை அளிக்கும் கார் மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நிசான் மைக்ரா ஆக்டிவ்(XV Safety Pack)
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மைக்ராவின் ஆக்டிவ் மாடலின் டாப் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக், வேகத்தை உணர்ந்து கதவுகள் பூட்டிக் கொள்ளும் வசதி, ஏபிஎஸ் பிரேக், பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் போன்றவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட மாடலை தேடுவோர்க்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

ஹூண்டாய் எலைட் ஐ20
வசதிகள் ததும்பி வரும் ஹூண்டாய் ஐ20 காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவில்லை. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் போன்ற கவர்ச்சிகர வசதிகளுடன் கூடேவ, 6 உயிர்காக்கும் காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த செக்மென்ட்டில் தற்போது ஏர்பேக்குகளை நிரந்தர ஆக்சஸெரீயாக கொண்டு வரும் ஃபோக்ஸ்வேகன் போலோவும் சிறந்த கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை அளிக்கும் மற்றொரு கார் மாடல்.

புதிய ஹோண்டா சிட்டி
டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஜி- ஃபோர்ஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதிகளை அளிக்கிறது. மிகச்சிறந்த டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவையும் ஹோண்டா சிட்டியின் பக்கபலமாக குறிப்பிடலாம்.
இந்த செக்மென்ட்டில் ஹூண்டாய் வெர்னாவும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி தொழில்நுட்பங்களுடன், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர் வசதிகளும் உள்ளது. இதன் ரியர் வியூ கண்ணாடி பிரத்யேக பூச்சு கொண்டிருப்பதால், இரவில் கண்கூச்சத்தை தராது. விரைவில் இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்கும் மாடல்களில் ஒன்று ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். டாப் வேரியண்ட்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், 6 காற்றுப் பைகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்டது. மைக்ரோசாஃப்ட் தயாரித்து கொடுத்த SYNC தகவல் தொடர்பு வசதியும் இருக்கிறது. விபத்தில் சிக்கும்பட்சத்தில் இந்த வசதி மூலம் 108 தொலைபேசி எண்ணுக்கு அவசர அழைப்பு சென்று, விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பதற்கான வசதி உள்ளது. கடந்த ஆண்டு இந்த காரின் டெஸ்ட் டிரைவின்போது எமது தள ஆங்கில எடிட்டர் ஜோபோ குருவில்லா விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், SYNC வசதி மூலம் உடனடியாக அவசர உதவியையும் பெற்றார் என்பது நினைவுகூறத்தக்கது.

ரெனோ டஸ்ட்டர்
சிறந்த கட்டுமானத்துடன் சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூன் சிஸ்டம், எஞ்சினுக்கான பாதுகாப்பு கவசம் போன்றவை இந்த காரின் பாதுகாப்புக்கான கூடுதல் அம்சங்கள்.

முக்கிய குறிப்பு
இந்த பட்டியலில் இல்லாத உங்களுக்கு விருப்பமான மாடலை தேர்வு செய்யும்போது, அதில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் கொண்ட விலையுயர்ந்த மாடலை தேர்வு செய்து வாங்குவதே நல்லது. மேலும், நீங்கள் தேர்வு செய்திருக்கும் காரில் இருக்கும் பாதுகாப்பு வசதிகளையும், அதே செக்மென்ட்டில் முன்னிலை வகிக்கும் கார் மாடல்களின் பாதுகாப்பு வசதிகளையும் ஒப்பீடு செய்து பின்னர் இறுதி முடிவு எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








