மஹிந்திரா எக்ஸ்யூவி 500: சிறப்பம்சங்கள் ஓர் பார்வை பகுதி-1
உலக தரத்தில் ஓர் இந்திய தயாரிப்பு என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு மார்க்கெட்டில் எதிர்பாராத வரவேற்பு. தேவையை சமாளிக்க முடியாமல் புக்கிங்கில் பல கட்டுப்பாடுகள். எக்ஸ்யூவியை பெறுவதற்காக பல மாதங்கள் காத்திருக்கவும் தயார் எனும் வாடிக்கையாளர்கள் ஒருபுறம் என மார்க்கெட்டை ரணகளப்படுத்தி கொண்டிருக்கிறது எக்ஸ்யூவி. தற்போது மூன்றாவது முறையாக புக்கிங் திறக்கப்பட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி மீதான மோகம் குறையவில்லை.
வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம் என பிரிமியம் எஸ்யூவிக்கு இணையான அம்சங்களுடன் மார்க்கெட்டில் கலக்கி வரும் மஹிந்திரா எக்ஸ்யூவியில் இருக்கும் முக்கிய வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களின் விபரங்களை பார்க்கலாம்.
வடிவமைப்பு:
சீறும் சிறுத்தையை மனதில் கொண்டு எக்ஸ்யூவியை மஹிந்திரா வடிவமைப்பு நிபுணர்கள் செதுக்கியுள்ளனர். முன்பக்க கிரில் மற்றும் பானட் வடிவமைப்பு சிறுத்தையின் தாடையை நினைவூட்டும் வகையிலேயே மிக கம்பீரமாக வடிவமைத்துள்ளனர். சிறுத்தை பாய்ந்து செல்லும்போது இருக்கும் உடலமைப்பை மனதில்கொண்டு எக்ஸ்யூவியின் பக்கவாட்டில் பாடி லைன்கள் தடிமனமாக கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மோனோகாக் கட்டமைப்பு தொழில்நுட்பம் கொண்ட எஸ்யூவி கார் மஹிந்திரா எக்ஸ்யூவிதான். காரின் பாடி மற்றும் சேஸிஸ் என்று தனித்தனியாக இணைக்காமல் ஒரே வார்ப்பில் பாடி ஷெல் (கூடு) தயாரிக்கப்படுகிறது. இதனால், ஓட்டுதல் தரம் சிறப்பாகவும், அருமையான கையாளுமை மற்றும் சமநிலையை கொடுக்கும்.

எஞ்சின்:
எக்ஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் அதிகபட்சம் 140 பிஎச்பி ஆற்றலையும், 330 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். தவிர, 5ம் தலைமுறை டர்போசார்ஜர் மூலம் எஞ்சினின் சக்தி அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 0-60 கிமீ வேகத்தை வெறும் 5.4 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும். இதுதவிர, ஏஆர்ஏஐ சான்றுபடி, லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹில் அசிஸ்ட்:
மஹிந்திரா எக்ஸ்யூவியில் ஹில் டிசன்ட் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. சரிவான பாதைகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் இந்த தொழில்நுட்பம் தானாகவே இயங்கும். மேலும், சரிவான பாதையில் நின்றுவிட்டு கிளம்பும்போது கார் பின்னோக்கி வராமல் தடுக்கும். இதேபோன்று, சரிவான பாதைகளில் இறங்கும்போது கார் கட்டுபாட்டை இழக்காமல் மிக பாதுகாப்பாக இறங்குவதற்கு உதவும்.
டூவல் மாஸ் ப்ளைவீல்(டிஎம்எப்) தொழில்நுட்பம்:
எக்ஸ்யூவியின் ட்ரான்மிஷன் சிஸ்டம், டூவல் மாஸ் ப்ளைவீல் எ்) தொழில்நுட்பம்:
எக்ஸ்யூவியின் ட்ரான்மிஷன் சிஸ்டம், டூவல் மாஸ் ப்ளைவீல் என்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் எஞ்சினிலிருந்து வரும் சப்தம், அதிர்வுகளை வெகுவாக குறைப்பதோடு, கியர் மாற்றுவது மிக ஸ்மூத்தாக இருக்கும்.
ட்ரான்ஸ்மிஷன்:
உள்நாட்டிலேயே வடிவமைத்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட 6 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. அதிக பிக்கப் கொடுப்பதோடு, மைலேஜையும் அதிகப்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்த ட்ரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது என்பது சிறப்பு.
ஆல் வீல் ட்ரைவ்:
ஐடிஎம் எனப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய எக்ஸ்யூவியின் ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் சறுக்கு தரைகள், மழைக்காலங்கள் மற்றும் பனி படர்ந்த சாலைகளில் கூட பாதுகாப்பாக செல்ல உதவும்.
சாலை நிலைகளுக்கு தக்கவாறு எளிதாக 2 வீல் ட்ரைவ் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டத்திற்கு தானாக மாறிக்கொள்ளும் தொழில்நுட்பமும் இருக்கிறது. நெக்ஸ்ட்ராக் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் எஞ்சின், ஸ்டீயரிங் மற்றும் ஏபிஎஸ் தொழில்நுட்பம் ஆகியவை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தப்படுவதால் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications








