மஹிந்திரா எக்ஸ்யூவி500: சிறப்பம்சங்கள் பார்வை பகுதி-2
புரொஜெக்டர் ஹெட்லைட்:
இரவு பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ஏதுவாக புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் புரொஜெக்டரில் பிரகாசமான வெளிச்சத்தை தரும் ஹாலோஜன் பல்புகள் உள்ளன. ஹெட்லைட் க்ளஸ்டரின் கீழ் பக்கத்தில் பகல் நேர எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
எக்ஸ்யூவியின் ஹெட்லைட்டில் என்ன விஷேசம் தெரியுமா.. வளைவுகளில் திரும்பும்போது பிற கார்களில் ஹெட்லைட் வெளிச்சம் நேராகத்தான் அடிக்கும். இதனால், வளைவில் இருக்கும் பொருட்களை டிரைவர் பார்க்க முடியாது. ஆனால், எக்ஸ்யூவியின் ஹெட்லைட் எந்த பக்கம் கார் lதிரும்புகிறதோ அந்த பக்கம் ஹெட்லைட் தானாகவே திரும்பி வெளிச்சத்தை கொடுக்கும். இதனால், டிரைவர் சாலையை சரியாக கவனித்து ஓட்ட முடியும்.

மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம்:
இதன் சிறந்த மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம் அதிக எரிபொருள் சிக்கனத்தை தருவதோடு, சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. ஆம். சிக்னல் அல்லது மெதுவாக நகரும் போக்குவரத்தில் 2.5 வினாடிகளுக்கு மேல் கார் நின்றிருந்தால் எஞ்சின் தானாகவே ஸ்டான்ட் பை மோடுக்கு சென்றுவிடும். கிளட்சை லேசாக மிதித்தால் எஞ்சின் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும்.
ஒருங்கிணைந்த வசதிகளுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்:
வழிகாட்டு தகவல்கள், பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளையும் ஒருங்கே தரும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 இஞ்ச் டிஸ்ப்ளேவும் சென்ட்ரல் கன்சோலை அலங்கரிக்கிறது. மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஒரு தொடுதலிலேயே கட்டுப்படுத்தலாம்.
நாட்டிலுள்ள 1200 நகரங்களின் வழிகாட்டும் வசதியை 8 பிராந்திய மொழிகளில் வாய்மொழி தகவலாக பெறலாம். டச் ஸ்கிரீனை பார்த்து பார்த்து ஓட்ட வேண்டியதில்லை. மேலும், காரில் செல்லும்போது அருகிலுள்ள ரெஸ்ட்டாரண்டுகள், ஏடிஎம், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் பற்றிய விபரங்களையும் இதன் ப்ரீ லோடட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பெறலாம்.
இதுதவிர, காரில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதனை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்த தகவல்களையும் பெறலாம். எரிபொருள் அளவு, டயர்களில் காற்று இருக்கும் அளவு, காருக்குள் வெப்ப அளவு ஆகியவற்றை தெரிவிக்கும் வசதிகள் உள்ளன.
இன்டெல்லி ரிவர்ஸ் பார்க் அஸிஸ்ட் சிஸ்டம்:
நவீன இன்டெல்லிபார்க் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் காரை பாதுகாப்பாக பார்க்கிங் செய்ய முடியும். எல்சிடி திரையில் காருக்கு பின்புறம் இருக்கும் பொருட்கள் தெளிவாக தெரியும் என்பதால் காரை ரிவர்ஸ் எடுக்கும்போதும், பார்க்கிங் செய்யும்போதும் கழுத்தை திருப்பி அவஸ்தை பட வேண்டியதில்லை.
ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல் ஸ்விட்சுகள்:
ஸ்டீயரிங் வீலில் வாய்ஸ் கமான்ட் ஸ்விட்ச் இருக்கிறது. இதேபோன்று, நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது பயன்படும் க்ரூஸ் கன்ட்ரோல், ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள் உள்ளன. இதன் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் ஆக்சிலேட்டரை மிதிக்காமலே ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன்கள் மூலம் வேகத்தை சிறிது கூட்டவும், குறைக்கவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
ப்ளூடூத் கன்ட்ரோல் ஸ்விட்சும் ஸ்டீயரிங் வீலில் இருக்கிறது. இதனை பயன்படுத்தி மொபைலைபோனை இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்க முடியும். மேலும், போன் அழைப்புகளை பெறவும் வசதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








