மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் சிறப்பம்சங்கள் பார்வை: பகுதி-3
ரோல்ஓவர் மிட்டிகேஷன் தொழில்நுட்பம்:
ரோல்ஓவர் மிட்டிகேஷன் எனப்படும் நவீன தொழில்நுட்பம் ஆபத்தான சமயங்களில் பெரிதும் உதவும். கட்டுப்பாடு இல்லாமல் கார் செல்வதாக உணர்ந்தால் இந்த தொழில்நுட்பம் உடனடியாக செயல்பட்டு கார் கவிழாமல் சமநிலைக்கு கொண்டு வந்துவிடும். இதெல்லாம் மில்லி செகண்ட் கால அளவில் நடைபெறும்.
காற்றுப் பைகள்:
எக்ஸ்யூவியில் முன்பக்கம், பக்கவாட்டு பகுதிகள் என மொத்தம் 6 உயிர்காக்கும் காற்றுப் பைகள் எக்ஸ்யூவியில் இருக்கின்றன. விபத்து நிகழ்ந்தால் பயணிகளின் பாதுகாப்பை இந்த உயிர்காக்கும் காற்றுப் பைகள் உறுதி செய்யும்.

லெதர் இருக்கைகள்:
அதிக சொகுசை வழங்கவும், உட்புறத்தின் கவர்ச்சியை கூட்டும் விதத்திலும் எக்ஸ்யூவியின் இருக்கைகள், இரட்டை வண்ண கலவையுடன் லெதரில் வேயப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீல் என அனைத்திலும் தோல் பொருட்களின் வேலைப்பாடுகள் கண்களை கவர்கின்றன. ஸ்டோரேஜ் அறைகளில் கூட தோல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டூவல் எச்வி ஏசி:
வெளிப்புற தட்பவெப்பத்திற்கு தக்கவாறு காருக்குள் குளிர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆட்டோமேட்டிக் டூவல் எச்வி ஏசி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்று வரிசைகளுக்கும் தனித்தனியாக ஏசி வென்ட்டுகள் இருப்பதால் காருக்குள் அனைத்து பகுதிகளிலும் ஒரே சீரான குளிர்ச்சி இருக்கும்.
கன்சீல்டு லைட்ஸ்:
இரவில் பயணிக்கும்போது காரின் முக்கிய பாகங்கள் தெரியும் வகையில் சிறிய ரக லைட்டுகள் அந்த பாகங்களின் வடிவிலேயே வெளிச்சத்தை கொடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது பயணிக்கும்போது ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.
எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம்(இஎஸ்பி):
அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்பம்தான் இஎஸ்பி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம். காரின் வேகம் மற்றும் ஸ்டீயரிங் வீல் நகரும் தன்மையை இஎஸ்பி தொழில்நுட்பம் தொடர்ந்து கண்காணிக்கும். ஒருவேளை கார் கட்டுப்பாட்டை இழக்கும்போது வேகத்தை குறைத்து தானியங்கி பிரேக்கை அழுத்திவிடும்.
மேலும், பதட்டத்தில் ஆக்சிலேட்டர் கொடுத்தால் கூட எஞ்சின் வேகம் அதிகரிக்காது. மேலும், ஏதாவது ஒரு சக்கரம் கட்டுப்பாட்டை இழந்தால் கூட அந்த சக்கரத்திற்கு எஞ்சினின் சக்தி செல்வதை குறைத்துவிடும். இதன்மூலம், கார் விபத்தில் சிக்குவதை தடுக்கும்.
இதர அம்சங்கள்:
எல்லா வீல்களுக்கும் சரி சமமான பிரேக் ஆற்றலை அனுப்பும் இபிடி தொழில்நுட்பம், அதிகபட்சம் மணிக்கு 175 கிமீ வேகத்தில் செல்லும். நெடுந்தூர பயணங்களுக்கும் ஏற்ற 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க். முன்புறம், பின்புறம் டிஸ்க் பிரேக்குகள். முன்புறம் மெக்பர்சன் சஸ்பென்ஷன், பின்புறம் ஆன்ட்டி ரோல்பார் கொண்ட மல்டிலிங்க் சஸ்பென்ஷன் ஆகியவற்றை எக்ஸ்யூவி500 கொண்டிருக்கிறது.
எக்ஸ்யூவியை வாங்கிய பல பிரபலங்கள் குறிப்பிடுகையில், உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு தயாரிப்பை வாங்கியதற்காக பெருமையையும், பெருமிதமும் அடைவதாக தெரிவித்துள்ளனர். அந்தளவுக்கு பிரிமியம் பிராண்டுகளுக்கே சிம்ம சொப்பனமாக மாறியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 500 சென்னையிலுள்ள மஹிந்திரா வாகன ஆராய்ச்சி மையத்தில்தான் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








