இந்தியாவில் மஸ்டாங் காரை அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டம்
இந்தியாவில் ஃபோர்டு மஸ்டாங் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மிக பிரபலமான, பழமையான கார் மாடலான மஸ்டாங் இன்றளவும் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தையும், உலக அளவில் ரசிகர்களையும் தக்க வைத்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஃபோர்டு மஸ்டாங் காரின் பொன்விழா கொண்டாட்டங்கள் துவங்க உள்ளன. இதன் பொருட்டு பல்வேறு மார்க்கெட்டுகளிலும் மஸ்டாங் காரை அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
Muscle car என்ற அதிசக்தி வாய்ந்த கார் மாடலாக புகழப்படும் மஸ்டாங்கின் வலது பக்க டிரைவிங் கொண்ட மாடலை வடிவமைக்கும் பணிகளில் ஃபோர்டு ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் மஸ்டாங் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மஸ்டாங்
இரண்டாம் தலைமுறை ஃபால்கன் காரின் அடிப்படையில் மஸ்டாங் வடிவமைக்கப்பட்டது. 1964ல் ஏப்ரல் 17ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஃபோர்டு நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான மஸ்டாங் இதுவரை 12 ஸ்பெஷல் எடிசன் மாடல்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவில் பொன்விழாவுக்காக புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்விழா துவக்கம்
மஸ்டாங் பொன்விழாவுக்காக ஸ்பெஷல் எடிசன் கைக்கடிகாரங்களை வெளியிட்டுள்ளது குறித்து ஏற்கனவே செய்தியை வழங்கியுள்ளோம் என்பது நினைவிருக்கலாம்.

மாடல்கள்
2 டோர் கூபே, ஹேட்ச்பேக், ஃபாஸ்ட்பேக் மற்றும் கன்வெர்ட்டிபிள் உடற்கூறு வகைகளில் மஸ்டாங் விற்பனை செய்யப்படுகிறது. இதில், இந்தியாவில் கூபே ரக மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சின்
மஸ்டாங் கூபே கார் 3 விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 3.7 லிட்டர் வி6 எஞ்சின் 5.0 லிட்டர் மஸ்டாங் ஜிடி மற்றும் 5.8 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் ஆகியவற்றுடன் கிடைக்கிறது.

அறிமுகம் எப்போது?
இந்தியாவில் மஸ்டாங் காரை அறிமுகம் செய்வது குறித்து தற்போது ஃபோர்டு பரீசீலனை செய்து வருகிறது. அப்படி, உறுதி செய்யப்படும்பட்சத்தில் 2015ம் ஆண்டில் மஸ்டாங் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.

விலை
ரூ.50 லட்சத்திற்கும் மேலான விலையில் மஸ்டாங் கார் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








