இந்த ஆண்டில் அறிமுகமான கார் மாடல்கள் - ஒரு பார்வை
இந்த ஆண்டின் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறோம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல முக்கிய மாடல்கள் விற்பனைக்கு வந்தததுடன் அவற்றில் சில மாடல்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பை பெற்றன. அதேபோன்று, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில மாடல்கள் ப்ளாப் ஆகின.
இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்து மார்க்கெட்டை கலக்கிய கார் மாடல்கள் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய மாடல்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வையை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

பட்டியல்
இந்த ஆண்டில் ஏராளமான மேம்படுத்தப்பட்ட, புதிய கார் மாடல் அறிமுகமாகியின. தவிர, இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்பெஷல் எடிசன் மாடல்களையும் கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. அதில், மிக முக்கிய கார் மாடல்களை தேர்ந்தெடுத்து மாதவாரியாக வரிசைப்படுத்தியுள்ளோம்.

செவர்லே செயில் செடான்
பெரும் எதிர்பார்ப்புடன் செவர்லே பிராண்டிலிருந்து வந்த செடான் கார். காம்பெக்ட் செடான் கார்களுக்கு இணையான விலை, வசதிகளுடன் ஓர் நிறைவான செடான் காராக வந்ததால் வாடிக்கையாளர்களும் ஆதரவு தந்ததனர். முதல் இரண்டு மாதங்களில் 7,000 முன்பதிவுகளை அள்ளியது. ஆனால், அதைத்தொடர்ந்து அந்த கார் விற்பனையில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஆனால், ஓர் சிறந்த செடான் கார் மாடலாக வலம் வருகிறது.
செவர்லே செயில் செடான் முழு விபரம்

ஹோண்டா அமேஸ்
ஹோண்டாவின் முதல் டீசல் காராக வந்த அமேஸ் காம்பெக்ட் செடான் இந்த ஆண்டின் ஹிட் மாடல்களில் ஒன்று. இதுவரை 50,000 அமேஸ் செடான் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. சில புதிய கார்கள் விற்பனைக்கு வரும்போது அதிக முன்பதிவுகளை பெறுவது வழக்கம். ஆனால், அமேஸ் காருக்கு தொடர்ந்து முன்பதிவு சிறப்பாக இருந்து வருகிறது. ஹோண்டாவின் விற்பனையை புதிய உயரங்களை தொடச் செய்து வரும் அமேஸ் டிசைன், மைலேஜ், விலை என அனைத்திலும் மிகச்சரியான விகிதத்தில் வந்து தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

மஹிந்திரா ரேவா இ2ஓ எலக்ட்ரிக் கார்
இந்தியாவின் முழுமையான முதல் 4 சீட்டர் எலக்ட்ரிக் கார் மஹிந்திரா ரேவா இ2ஓ. மத்திய அரசின் மானிய திட்டத்திற்காக காத்திருந்து பின்னர் ஏப்ரலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மிகச்சிறப்பான கட்டுமானம், வசதிகளுடன் வந்த இந்த கார் விலை வாடிக்கையாளர்களை நெருங்கவிடவில்லை. அடுத்த ஆண்டு ஏப்ரலில் எலக்ட்ரிக் கார்களுக்கான மானியத் திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் மாநகரங்களில் இந்த காருக்கு சிறப்பான வர்த்தகமும், வரவேற்பும் கிடைக்கும். தமிழகத்தில் தற்போது விற்பனைக்கு இல்லை.
மஹிந்திரா இ2ஓ காரின் முழு விபரம்

செவர்லே என்ஜாய்
எம்பிவி மார்க்கெட்டில் கோலோய்ச்சி வந்த இன்னோவாவின் ஆதிக்கத்துக்கு மாருதி எர்டிகா கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த எர்டிகாவுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் இறக்கப்பட்ட மாடல் செவர்லே என்ஜாய். எர்டிகாவைவிட குறைவான விலையில் வந்த என்ஜாய் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதேவேளை, சிறந்த இடவசதி, விலை குறைவு போன்றவற்றால் குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றுள்ளது.

பென்ஸ் ஏ கிளாஸ்
மே மாத இறுதியில் சொகுசு கார் மார்க்கெட்டில் அறிமுகமான இந்தியாவின் முதல் ஹேட்ச்பேக் காரான பென்ஸ் ஏ கிளாஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனையில் பின்தங்கிய பென்ஸ் நிறுவனத்தையும் முன்னுக்கு கொண்டு வருவதற்கு ஏ கிளாஸ் பெரும் பங்காற்றி வருகிறது. விற்பனைக்கு வந்து முதல் 10 நாட்களிலேயே 400 முன்பதிவுகளை பெற்று அசத்தியது. பென்ஸ் ஏ கிளாஸ் காருக்கான வரவேற்பு அதிகரித்ததன் காரணமாக கூடுதல் கார்களை அனுப்புமாறு தலைமையிடத்துக்கு பென்ஸ் இந்தியா நிறுவனம் கோரிக்கை அனுப்பியது நினைவிருக்கலாம்.

மஹிந்திரா வைப்
யுட்டிலிட்டி ரகத்தை விட்டு கார் மார்க்கெட்டில் நுழைய எத்தனித்த மஹிந்திரா வெரிட்டோ செடானை கத்தரித்து வைப் என்ற பெயரில் களமிறக்கியது. ஏக அமர்க்களத்துடன் வந்த மஹிந்திரா வைப் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டது. பெரிதும் பேசப்பட்ட இதன் தோற்றமே இதற்கு ஆப்பு வைத்துக் கொண்டது. வாடிக்கையாளர்களை வைப் தோற்றம் அவ்வளவாக கவரவில்லை. டீசல் மாடலில் வந்த இந்த கார் காம்பெக்ட் செடான் கார்களின் விலையுடன் போட்டி போட்டதும், வாடிக்கையாளர்கள் நெருங்கவில்லை.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
ஃபோர்டு தலையெழுத்தை மாற்றிய மாடல் ஈக்கோஸ்போர்ட். சென்ற ஆண்டு டஸ்ட்டருக்கு விருதுகள் குவிந்ததுபோல், இந்த ஆண்டின் சிறந்த கார் மாடல் என்ற விருதை பெறுவதற்கான தகுதி வாய்ந்த மாடல் இது. விற்பனைக்கு வந்தது முதல் இதுவரை 60,000 முன்பதிவுகளை பெற்றிருக்கும் ஈக்கோஸ்போர்ட்தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் மாடல். மூன்று வித எஞ்சின் ஆப்ஷன்கள், சிறந்த டிசைன், வசதிகள் என அனைத்திலும் நிறைவை கொடுத்ததால், வாடிக்கையாளர்களும் வலிய சென்று ஆதரவு கொடுத்து உச்சி முகர்ந்தனர். காத்திருப்பு காலம் நீண்டதால், தற்போது முன்பதிவு நிறுத்தப்பட்டிருந்தாலும், உற்பத்தியை கூட்டுவதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளது. இதனால், வெகு விரைவில் ஈக்கோஸ்போர்ட்டுக்கான முன்பதிவு துவங்கும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் ஈக்கோஸ்போர்ட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முழு விபரம்

புதிய நிசான் மைக்ரா
விற்பனையில் பின்தங்கியிருந்த மைக்ராவை மேம்படுத்தி கூடுதல் பொலிவுடன் நிசான் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த காருடன் மைக்ரா ஆக்டிவ் என்ற குறைந்த விலை மாடலையும் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான விற்பனையை தொடர்ந்து வருகின்றன மைக்ரா மாடல்கள்.
புதிய நிசான் மைக்ரா முழு விபரம்
நிசான் மைக்ரா ஆக்டிவ் காரின் விபரம்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
சரியான விலையில் ஓர் புதிய ஹேட்ச்பேக் காரை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு லட்டு போன்று வந்துள்ளது கிராண்ட் ஐ10 கார். செக்மென்ட்டிலேயே புதிய வசதிகள், புதிய டீசல் எஞ்சின், சிறப்பான தோற்றம் போன்றவற்றால் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. விற்பனையில் ஹூண்டாய்க்கு புது உத்வேகத்தை அளித்ததுடன், கடந்த மாத டாப்-10 லிஸ்ட்டில் 5வது இடத்தை பெற்றுள்ளது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 முழு விபரம்

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்
பென்ஸ் ஏ கிளாஸ் காருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிஎம்டபிள்யூ கொண்டு வந்த சொகுசு ஹேட்ச்பேக் கார்தான் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ். ரூ.20.9 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்த சொகுசு கார் பரபரப்பை ஏற்படுத்தியது. தோற்றத்தில் பென்ஸ் ஏ கிளாஸ் காருக்கு ஈடுகொடுக்கவில்லை என்றாலும் கூட பெர்ஃபார்மென்சில் சிறந்த காராக வந்துள்ளது.
பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் முழு விபரம்

ஸ்கோடா ஆக்டாவியா
ஆக்டாவியா பிராண்டை மீண்டும் அறிமுகம் செய்து விட்டதை பிடிக்கும் முயற்சிகளை ஸ்கோடா மேற்கொண்டுள்ளது. சீரான விற்பனையை தந்து வரும் புதிய ஆக்டாவியா அதன் செக்மென்ட் கார்களில் மிகச் சரியான சாய்ஸ் என்று கூறும் அளவுக்கு அனைத்திலும் சிறப்பான மாடல்.
ஸ்கோடா ஆக்டாவியா சிறப்பு பார்வை
ஸ்கோடா ஆக்டாவியா முழு விபரம்

நிசான் டெரானோ
கடந்த ஆண்டு அறிமுகமாகி நம் நாட்டு மார்க்கெட்டில் பெரிய ஹிட்டடித்த டஸ்ட்டரின் மறு வடிவமைப்பு பெற்ற மாடல்தான் நிசான் டெரானோ. தோற்றத்திலும், வசதிகளிலும் சிறப்பாக வந்திருக்கும் இந்த எஸ்யூவிக்கு இதுவரை 6,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். டஸ்ட்டரைவிட சற்று கூடுதலான விலையில் இந்த எஸ்யூவி வந்தது நினைவிருக்கலாம்.

இசுசூ எம்யூ- 7
ஜப்பானிய நிறுவனமான இசுசூ மிக தாமதமாக இந்திய கார் மார்க்கெட்டில் கால் பதித்துள்ளது. எம்யூ-7 என்ற பிரிமியம் எஸ்யூவி மாடலை முதலாவதாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சென்னை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையில் இந்த எஸ்யூவி அசெம்பிள் செய்யப்படுகிறது. மேலும், ஆந்திராவில் ரூ.3,000 கோடி முதலீட்டில் புதிய ஆலையையும் கட்டி வருகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய மார்க்கெட்டில் முதலீட்டு திட்டத்துடன் வர்த்தகத்தை துவங்கியிருக்கும் இசுசூ நிறுவனத்தின் தயாரிப்புகள் எந்தளவிற்கு போட்டி போடும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கார் வாங்கணுமா?
எந்த கார் விபரத்தையும், இந்த பக்கத்தில் எளிதாகவும், துல்லியமாகவும் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








