அமேஸ் எஃபெக்ட்... இந்தியாவில் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை அதிகரிப்பு...
இந்தியாவில் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் பல்வேறு கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஹோண்டா நிறுவனம் இந்தியாவில், 9,143 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 11,272 கார்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் அசத்தியுள்ளது. இது 23 சதவீத வளர்ச்சியாகும். அத்துடன் இந்தியாவில் இருந்து கடந்த மாதம் 220 கார்களை ஹோண்டா நிறுவனம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஹோண்டா நிறுவனம் சந்தித்திருக்கும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அமேஸ்தான். இது காம்பேக்ட் செடான் ரக கார் ஆகும். இரண்டாவது தலைமுறை ஹோண்டா அமேஸ் கார், கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் லான்ச் செய்யப்பட்டது. அப்போது முதல் அதன் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. ஹோண்டா அமேஸின் அசத்தலான விற்பனை குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆனால் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் அமலாக உள்ளதால், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழில் துறையும் மிக கடுமையான சவால்கள் நிறைந்த ஆண்டை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து கார் நிறுவனங்களும் தங்கள் லைன் அப்பை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து வருகின்றன. இதன் காரணமாக கார்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை நிறுத்தி விடுவது தொடர்பாக, தனக்கு உள்ள எண்ணத்தை இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி அறிவித்துள்ளது. ஒரே காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கு இடையேயான இடைவெளியை, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், ரூ.1.50 லட்சம் என்ற அளவிற்கு அதிகரிக்க செய்து விடும் என எதிர்பார்க்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆனால் தனது லைன் அப்பில் இருந்து டீசல் இன்ஜின்களை நீக்குவது தொடர்பாக ஹோண்டா நிறுவனத்திற்கு எவ்வித திட்டமும் இருப்பதாக தற்போதைக்கு தெரியவில்லை. அதே சமயம் எச்ஆர்-வி (HR-V) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் தயாராகி கொண்டுள்ளது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். ஹோண்டா எச்ஆர்-வி எஸ்யூவி கார், இந்தியாவில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு, ஹோண்டா எச்ஆர்-வி கடும் சவால் அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹோண்டா சிவிக் செடான் ரக காரில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள்தான், ஹோண்டா எச்ஆர்-வி காரிலும் பொருத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








