டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை வாங்க இதுவே சரியான நேரம்... ஏன் தெரியுமா?
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. எனவே முன்னணி வாகன நிறுவனங்கள் அனைத்தும் தற்போதே பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான தயாரிப்புகளை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கி விட்டன.

இந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா தனது பிரபலமான மாடலான இன்னோவா கிரிஸ்டா காரின் பிஎஸ்-6 வெர்ஷனை இந்திய மார்க்கெட்டில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்த காருக்கான முன்பதிவுகளை டொயோட்டா நிறுவனம் ஏற்க தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய இன்னோவா கிரிஸ்டா காருக்கான புக்கிங்குகளை நாடு முழுவதும் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்கள் ஏற்க தொடங்கி விட்டதாக டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த காரின் சரியான விலை எவ்வளவு? என்ற தகவல் இன்னும் தெரியவரவில்லை.

பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு அப்டேட் செய்யப்படுவதன் காரணமாக விலை உயரவுள்ளது. ஆனால் எவ்வளவு என்பதை டொயோட்டா டீலர்ஷிப்களாலும் உறுதிப்படுத்த முடியவில்லை. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில் வழங்கப்படவுள்ள புதிய பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் தற்போது உள்ள வெர்ஷன்களை காட்டிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமாக உருவாக்கப்படுவதால், இந்த இன்ஜின்களின் பவர் மற்றும் டார்க் அவுட்புட் மாற்றமடையவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டீலர்ஷிப்களில் ஸ்டாக் இருக்கும் வரை இன்னோவா கிரிஸ்டா காரின் பிஎஸ்-4 வெர்ஷன்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பிஎஸ்-4 இன்னோவா கிரிஸ்டா காரின் உற்பத்தியை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே நிறுத்தி விட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான மாடலாக திகழும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிடைத்து வருகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 2.7 லிட்டர், 4-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. அதே சமயம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் டீசல் வேரியண்ட்களில், 2.4 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இது தவிர இன்னும் பவர்ஃபுல்லான டீசல் இன்ஜின் டாப் எண்ட் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது 2.8 லிட்டர், 4-சிலிண்டர் D-4D இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 172 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

தோற்றத்தை பொறுத்தவரை, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் தற்போது உள்ள வெர்ஷனை போலவேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஒரு சில வசதிகள் கூடுதலாக சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் பிஎஸ்6 டீசல் வெர்ஷன் மிக கடுமையான விலை உயர்வை சந்திக்கலாம் என தெரிகிறது.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

அப்டேட் செய்யப்பட்ட இன்னோவா கிரிஸ்டா காரின் விலையை டெலிவரி தொடங்கப்படுவதற்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் அடுத்த ஆண்டு அறிவிக்கலாம். இந்த விலை உயர்வை தவிர்க்க விரும்புபவர்கள் தற்போதே டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் பிஎஸ்-4 வெர்ஷன்களை வாங்கி கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








