மஹிந்திராவின் பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!
மஹிந்திரா எஞ்சினுடன் வர இருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி குறித்த முக்கிய விபரம் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனமும், ஃபோர்டு கார் நிறுவனம் கூட்டணி அமைத்தன. மேலும், கடந்த ஆண்டு ஃபோர்டு இந்தியா வர்த்தகத்தை மஹிந்திரா ஏற்றுக் கொள்ள முடிவு செய்தது. இந்த நிலையில், மஹிந்திரா எஸ்யூவிகளின் அடிப்படையில் புதிய எஸ்யூவி மாடல்கள் ஃபோர்டு பிராண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அதேபோன்று, ஃபோர்டு நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவனத்தின் எஞ்சின்களும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அதன்படி, ஃபோர்டு நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

அதாவது, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் வழங்கப்பட்டு வரும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக மஹிந்திராவின் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் எம்ஸ்டாலியன் குடும்ப வரிசையில் பல வகையான பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகம் செய்தது. இதில், 1.2 லிட்டர் டி-ஜிடிஐ எஎன்ற டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேலும், 130 எச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஃபோர்டு நிறுவனத்தின் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினைவிட இந்த புதிய எம்ஸ்டாலியன் எஞ்சின் 5 எச்பி பவரையும், 60 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சினுடன் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வும் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் செயல்திறன் மிக்க மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், அதிக விலை குறைவான எரிபொருள் சிக்கனம் போன்றவை வாடிக்கையாளர்களை தயங்க வைக்கும் விஷயமாக இருக்கிறது.

இந்த குறையை போக்கும் விதத்தில், மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் மிகச் சரியான விலையில், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கும் மஹிந்திராவின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கிறது. வரும் ஏப்ரலில் இந்த புதிய மாடல் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Via: Autocarindia


Click it and Unblock the Notifications








