டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக விபரம்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் அறிமுகம் செய்யப்பட உள்ள தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கு வாடிக்கையாளர் பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

2021 மாடலாக மேம்படுத்தப்பட்ட இருக்கும் இந்த புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் வரும் 15ந் தேதி இந்தோனேஷியாவில் வைத்து உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தற்போதைய மாடலைவிட முகப்பில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சற்றே பெரிய க்ரில் அமைப்பு, வேறுபட்ட டிசைனில் புதிய பனி விளக்குகள் அறை, லேசான டிசைன் மாற்றங்களுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவற்றுடன் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

பக்கவாட்டில் மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்படும். பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரின் உட்புறத்தில் டிசைன் மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது. அதேநேரத்தில், புதிய அப்ஹோல்ஸ்ட்ரி வழங்கப்படும்.

இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் முதலில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் வரும்போது இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். டீசல் எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும், பெட்ரோல் எஞ்சின் 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலும் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடலும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








