மலிவு விலையில் ஃபார்ச்சூனர் விற்பனைக்கு வரபோகுதா? அரசியல்வாதிங்க மட்டுமல்ல நம்மாலும் இனி வாங்க முடியும் போலையே
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகப் பெரிய மற்றும் பிரமாண்ட தோற்றம் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) இருக்கின்றது. பலரின் விருப்பமான எஸ்யூவி ரக காராகவும் இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, சொகுசான ரைடிங் அனுபவத்தை தாராளமான இட வசதி உடன் மேற்கொள்ள விரும்புவோர் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், இதன் உயரிய விலை காரணமாக பலருக்கு எட்டா கனியாக ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே டொயோட்டா நிறுவனம் இந்த ஃபார்ச்சூனர் காரை மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆட்டோ கார் இந்தியா தளம் ஓர் செய்தி வெளியிட்டு இருக்கின்றது.

சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் ஐஎம்வி 0 (Innovation Multipurpose Vehicle Zero) எனும் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்தது. இது ஓர் அடிப்படையில் பிக்-அப் வகை கான்செப்ட் மாடல் ஆகும். இந்த வாகனத்தை கஸ்டமைஸ் செய்யும் வசதி உடன் சந்தையில் களமிறக்க டொயோட்டா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது, தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வாகனமாகவே இதனை டொயோட்டா விற்பனைக்கு வழங்கும் என கூறப்படுகின்றது.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஆம்புலன்ஸ், ஆஃப்-ரோடு பிக்-அப் ட்ரக், அட்வென்சர் வாகனம் மற்றும் கேம்ப் வாகனம் என பல நிலைகளில் கஸ்டமைஸ் செய்து வாங்கிக் கொள்ளும் வகையிலேயே இந்த வாகனத்தை டொயோட்டா களமிறக்க இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த வாகனத்தை டீசல், பெட்ரோல், ஹைபிரிட் மற்றும் மின்சாரம் போன்ற அவதாரங்களிலும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவ்வாறு அது பல நிலைகளில் உருவாக்கப்படுவதற்காக நிறுவனத்தின் புதிய பிளாட்பாரமே காரணமாக உள்ளது. இந்த பிளாட்பாரம், மலிவு விலையில் வாகனங்களை தயார் செய்யவும், மிகவும் சிம்பிளான வாகனங்களை உருவாக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பிளாட்பாரத்தை விரைவில் அதன் ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.
தற்போது, இந்த வாகனங்கள் ஐஎம்வி பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருகின்றது. உற்பத்தி செலவைக் குறைக்கும் பொருட்டு ஐஎம்வி 0- பிளாட்பாரத்தை டொயோட்டா பயன்படுத்தும் என என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு, அந்த கார்கள் புதிய பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எனில் அவை இப்போது இருப்பதைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

டொயோட்டா தரப்பிலும் இதை உறுதிப்படுத்துகின்ற விதத்திலான தகவல் சமீபத்தில் வெளியாகியது. விரைவில் அது ஐஎம்வி ஓ பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி மலிவு விலை எஸ்யூவி கார்களை தயாரிக்க இருப்பதாக அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையிலேயே விரைவில் டொயோட்டா மலிவு விலை ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் பிக்-அப் டிரக்குகளை உலக சந்தைக்காக தயார் செய்யும் என நம்பப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் பிக்-அப் ஆகிய இரண்டு கார்களும் அரை கோடி ரூபாய்க்கு நிகரான விலையில் விற்கப்படுகின்றன. 33.43 லட்ச ரூபாய் தொடங்கி 51.44 லட்ச ரூபாய் வரையிலான விலையிலேயே ஃபார்ச்சூனர் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஆன்-ரோடில் இதன் விலை இதைவிட சற்று அதிகமாகவே அக்காரின் விலை இருக்கும். இத்தகைய அதிக விலையைக் கொண்டிருப்பதானாலேயே அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் காராக ஃபார்ச்சூனர் இருக்கின்றது. ஆனால், வரும் நாட்களில் இந்த காரை பட்ஜெட் வாகன பிரியர்களாலும் வாங்கி பயன்படுத்த முடியும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ஃபார்ச்சூனர் கார்கள் மலிவு விலையில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகளே உருவாகி இருக்கின்றது. ஆனால், மலிவு விலை ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் ஆகியவை எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும்? என்ன விலையில் விற்பனைக்கு வரும்? அவை இந்தியாவிற்கு வருமா? என்பது பற்றிய தகவல்கள் துள்ளியமாக அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications









