இந்த விலையிலதான் இன்னோவா க்ரிஸ்டா டீசலை விற்க போறாங்க... விற்பனையாளர்கள் வாயிலாக கசிந்த விலை விபரம்!
அப்டேட் செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா டீசல் காரின் விலை விபரங்கள் டீலர்கள் வாயிலாக வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. அண்மையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டொயோட்டா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட டீசல் இன்னோவா க்ரிஸ்டாவை இன்னும் ஒரு சில தினங்களில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான பணியில் அந்நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. சமீபத்தில் இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கின.

இந்த நிலையில் டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் வாயிலாக இன்னோவா க்ரிஸ்டா காரின் விலைகள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வமாக டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டாவின் விலைகளை அறிவிக்கும் முன்னரே டீலர்கள் வாயிலாக அதன் விலைகள் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. ஜி மற்றும் ஜிஎக்ஸ் வேரியண்டுகளின் விலை மட்டுமே தற்போது தெரிய வந்திருக்கின்றது.
இன்னோவா க்ரிஸ்டா ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஜி 7 சீட்டருக்கு ரூ. 19.13 லட்சமும், ஜி 8 சீட்டருக்கு ரூ. 19.18 லட்சமும், ஜிஎக்ஸ் 7 சீட்டருக்கு ரூ. 19.99 லட்சமும், ஜிஎக்ஸ் 8 சீட்டருக்கு ரூ. 20.04 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதன் வாயிலாக இன்னோவா ஹைகிராஸைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்டதாக இன்னோவா க்ரிஸ்டா விற்பனைக்குக் கிடைக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ரூ. 60 ஆயிரத்திற்கும் அதிகமான விலையைக் கொண்டதாக இன்னோவா ஹைகிராஸ் டீசல் இருக்கின்றது.
2023 இன்னோவா க்ரிஸ்டாவிற்கு ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதில் அப்டேட்டட் 2.4 சிலிண்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜட் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் பிஎஸ் 6 ஃபேஸ் 2 மற்றும் ஆர்டிஇ ஆகிய விதிகளுக்கு உட்பட்ட ஒன்றாகும்.

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. முன்பு விற்பனையில் இருந்ததைக் காட்டிலும் அதிக சிறப்புகள் தாங்கிய வாகனமாகவே 2023 இன்னோவா க்ரிஸ்டா தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. வெளிப்புற தோற்றத்திலும், சிறப்பு அம்சங்கள் விஷயத்திலும் மிக சிறந்ததாக அது தயார் செய்யப்பட்டு உள்ளது.
8 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டும் இல்லைங்க இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் இந்தியர்களின் ஃபேவரிட் எம்பிவி காரான இதில் இடம் பெற்றிருக்கும்.

6 ஸ்பீக்கர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் டிரைவர் இருக்கை, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மேனுவல் ஏசி, 3 ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.
இந்த அம்சங்களை முந்தைய இன்னோவா க்ரிஸ்டாவிலும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அம்சம் கொண்ட இன்னோவாவே கடந்த காலங்களில் வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவம் இன்னோவா டீசல் பிரியர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதன் வெளியேற்றத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் விதமாக இப்போது அதிக சிறப்பு வசதிகள் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் 2023 இன்னோவா விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
காரை அழகுப்படுத்தும் விதமாக புதிய ஸ்டைலிலான க்ரில் காரின் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இதன் பம்பரிலும் லேசான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. மேலும், சைடு மற்றும் பின் பக்கத்திலும் லேசான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









