ஹூண்டாய் ஷோரூமுக்கு வரவங்க வாங்குறது இந்த 3 கார்களை தான் போல!! சேல்ஸ் எகிறுது!
ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் முக்கியமான கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 மார்ச் மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? ஹூண்டாய் கார்கள் ஒவ்வொன்றும் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
தென் கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் கடந்த 2024 மார்ச் மாதத்தில் மொத்தம் 53,001 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 50,600 ஹூண்டாய் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட 2023 மார்ச் மாதத்தை காட்டிலும் இது 2,401 அதிகமாகும். அதாவது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2,401 ஹூண்டாய் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு விற்பனையில் அதன் எஸ்யூவி ரக கார்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கிரெட்டா, வென்யூ மற்றும் எக்ஸ்டர் என மொத்தம் 3 விதமான எஸ்யூவி கார்கள் ஹூண்டாய் பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கிரெட்டா கடந்த மாதத்தில் 16,458 யூனிட்கள் விற்பனை உடன் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக முதலிடத்தில் உள்ளது.
ஆனால், 2023 மார்ச் மாதத்தில் 14,026 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், ஹூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனை ஆனது 17.34% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி காராக ஹூண்டாய் கிரெட்டா 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் டாடா பஞ்ச் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கார்கள் உள்ளன.

கிரெட்டாவுக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக 2வது இடத்தில் வென்யூ உள்ளது. ஹூண்டாயின் மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான வென்யூ கடந்த மாதத்தில் 9,614 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
வென்யூவுக்கு அடுத்து 3வது இடத்தில் எக்ஸ்டர் 8,475 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஹூண்டாயின் அளவில் சிறிய எஸ்யூவி காரான எக்ஸ்டர் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு ஹிட் மாடலாக வளர்ச்சி கண்டுள்ளது. எக்ஸ்டர், கடந்த ஆண்டின் இறுதியில்தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, 2023 மார்ச் மாத சமயத்தில் எக்ஸ்டர் விற்பனையில் இல்லை.

எக்ஸ்டருக்கு அடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் ஹூண்டாயின் ஹேட்ச்பேக் கார்களான ஐ20 மற்றும் ஐ10 நியோஸ் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 5,155 மற்றும் 5,034 ஆகும். ஹூண்டாய் ஐ20 மற்றும் ஐ10 நியோஸ் கார்கள் இரண்டின் விற்பனையும் 2023 மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த மார்ச் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளன. குறிப்பாக, ஐ10 நியோஸ் கார்கள் 2023 மார்ச்சில் கிட்டத்தட்ட 9,304 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
6வது இடத்தில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் ரக கார்களுள் ஒன்றான ஹூண்டாய் அவ்ரா உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட அவ்ரா கார்களின் எண்ணிக்கை 4,883 ஆகும். 7வது மற்றும் 8வது இடங்களில் ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹூண்டாய் அல்கஸார் மாடல்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,716 மற்றும் 1,420 ஆகும். ஹூண்டாய் டக்ஸன் (110) மற்றும் கோனா எலக்ட்ரிக் (71) கார்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகிக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. கார்கள் விற்பனையில் ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவிவருகிறது. கடந்த 2024 மார்ச் மாத விற்பனையில் மீண்டும் ஒருமுறையாக டாடா மோட்டார்ஸை ஹூண்டாய் முந்தி உள்ளது. இருப்பினும், ஹூண்டாயை டாடா நிறுவனம் முந்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications









