கொரியாக்காரன் ஹூண்டாய்க்கு இந்தியாவில் இந்த கார்கள் இல்லைனா மார்க்கெட்டே காலி! விலையும் ரொம்ப கம்மி!
முந்தைய 2024ஆம் ஆண்டு நவம்பர் உடன் ஒப்பிடுகையில், ரூ.10 லட்சம் விலையிலான கார்கள் பிரிவில் ஹூண்டாய் வென்யூ மற்றும் அவ்ரா போன்ற குறிப்பிட்ட கார்கள் கடந்த 2025 நவம்பரில் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா கடந்த நவம்பரில் 50,340 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது.
இது 2024 நவம்பரில் விற்கப்பட்ட 48,246 ஹூண்டாய் கார்களைக் காட்டிலும் 4.34% அதிகம் ஆகும். இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனையான ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் ஹூண்டாய் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): சமீபத்திய புதிய தலைமுறை மேம்படுத்தலுக்குப் பிறகு, வென்யூ இந்த விலைப்பிரிவில் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான காராக உருவெடுத்துள்ளது. 2025 நவம்பரில் 11,645 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு, 2024 நவம்பரில் விற்கப்பட்ட 9,754 வென்யூ கார்களைக் காட்டிலும் 19.39% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் அட்வான்ஸான வடிவமைப்பு மற்றும் மென்பொருள்-சார்ந்த தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே புதிய வென்யூ 32,000க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றது.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): 2025 நவம்பரில் மற்ற அனைத்து ஹூண்டாய் கார்களை காட்டிலும் 2024 நவம்பரை விட அதிக விற்பனை வளர்ச்சியை கண்ட கார் இது ஆகும். இதன் விற்பனை 5,731 யூனிட்களாக அதிகரித்து, 2024 நவம்பரில் விற்கப்பட்ட 4,248 யூனிட்களைக் காட்டிலும் 35% வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் நம்பகமான குடும்ப செடான் காராக மேம்படுத்தப்பட்ட என்ஜினை கொண்டிருப்பதுடன், தனிநபர் & வர்த்தகப் பிரிவுகளில் உள்ள பெரும் தேவை இதன் வெற்றிக்குக் காரணமாகும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): 2025 நவம்பரில் 5,705 யூனிட்கள் விற்கப்பட்டு நிலையான விற்பனையை தொடரும் இந்த கார் 2024 நவம்பரில் விற்கப்பட்ட 5,747 யூனிட்களில் இருந்து 0.73% சிறிய சரிவைக் கண்டுள்ளது. டாடா பன்ச் போன்ற போட்டியாளர்களிடம் இருந்து கடுமையான போட்டி இருந்தபோதிலும், இதன் ரூ.5.68 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலை மற்றும் இரட்டை கேமரா டாஷ்கேம் போன்ற பிரீமியம் அம்சங்கள் நகர்ப்புறவாசிகளை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): வாடிக்கையாளர்களின் விருப்பம் எஸ்யூவி கார்களை நோக்கி மாறியதால், ஹூண்டாயின் பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் அதிக நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்த வகையில், கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனை 19.55% குறைந்து, 2024 நவம்பரில் 5,667 யூனிட்களில் இருந்து 2025 நவம்பரில் 4,559 யூனிட்டுகளாக சரிந்துள்ளது.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): கிராண்ட் ஐ10 நியோஸ் காரை போல், அதனை காட்டிலும் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான ஐ20 கடந்த நவம்பரில் 3,777 யூனிட்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2024ஆம் ஆண்டின் அதே நவம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 3,925 யூனிட்களைக் காட்டிலும் 3.77% குறைவாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 நவம்பர் மாதத்தில், இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலையுள்ள பல ஹூண்டாய் கார் மாடல்கள் சந்தையில் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளன. இந்த விலைப்பிரிவில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் வென்யூ மற்றும் ஹூண்டாய் அவ்ரா ஆகியவை முக்கிய வளர்ச்சி உந்துசக்திகளாக விளங்குகின்றன என்பது அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது.


Click it and Unblock the Notifications









