20 வருஷமாக விற்பனையில் அசைக்க முடியாத டொயோட்டா கார்! இந்த 2026இல் வாங்குபவர்களுக்கு புதுசா என்னென்ன கிடைக்கும்
டொயோட்டா நிறுவனத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட 2026 இன்னோவா கிரிஸ்டா கார் கடந்த ஜூன் 4ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு மேலாக விற்பனையில் இருக்கும் இன்னோவாவில் க்ரிஸ்டா வெர்சனுக்கு கடைசியாக வழங்கப்பட்டுள்ள அப்கிரேட்களாக இது பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2027ஆம் ஆண்டில் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் விற்பனையை இந்தியாவில் டொயோட்டா நிறுத்தலாம் கூறப்படுகிறது.
இதன் இடத்தை நிரப்பும் பொருட்டு இன்னோவா ஹைகிராஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2026 இன்னோவா க்ரிஸ்ட்டா காரை இந்த ஐந்து காரணங்களுக்காகவே வாங்கலாம். அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மெருக்கேற்றப்பட்ட வெளிப்புறம்: 2026 இன்னோவா க்ரிஸ்ட்டாவில் முக்கியமான மாற்றமாக, காரின் முன்பக்கத்தில் ரீடிசைனிலான ரேடியேட்டர் க்ரில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க க்ரில்லில் தற்போது கிடைமட்டமாக மூன்று கோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், முன்பக்க பம்பரின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. முன் பம்பர் முன்பை விட தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளதால், மஸ்குலரான தோற்றம் இன்னோவா க்ரிஸ்டாவுக்கு கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே காரின் வெளிப்புறம் நேர்த்தியாகவும், எளிமையாகவும் உள்ளது.
புத்துணர்ச்சியான கேபின்: இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்குள் புதிய இரு நிறங்களிலான லெதர்களில் இருக்கைகள் மூடப்பட்டு உள்ளன. கிரேஸ் காப்பர் மற்றும் வுட்-தீம் ஃபினிஷிங்கில் உள்ள இந்த புதிய நிறங்களை இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், கதவுகளில் பேட்கள் மற்றும் பெசெல்ஸ் உள்ளிட்டவற்றிலும் பார்க்க முடிகிறது.

அத்துடன், ஏசி கண்ட்ரோல்கள், இருக்கைகளுக்கு பின்னால் பொருத்தப்பட்ட சிறிய மேசை மற்றும் பல்வேறு ஸ்விட்ச்களிலும் டீயெலிங் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாகவே 2026 இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கேபின் பார்ப்பதற்கு பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த இன்னோவா காரின் கேபினில் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள் வலிமையானவைகளாக உள்ள நிலையில், தற்போது தோற்றமும் புத்துணர்ச்சியான மற்றும் நேர்த்தியானதாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய தொழிற்நுட்ப வசதிகள்: இன்னோவா க்ரிஸ்ட்டாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதியை புதிய மாடலில் டொயோட்டா அறிமுகப்படுத்தி உள்ளது. அத்துடன் கூடுதலாக, இந்த எம்பிவி காரில் தற்போது டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, காரின் ஒவ்வொரு டயர்களிலும் உள்ள காற்றழுத்தத்தின் அளவை டிரைவர் இனி நேரடியாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையின் வாயிலாகவே காணலாம்.
நம்பகமான டீசல் என்ஜின்: 2026 இன்னோவா க்ரிஸ்ட்டாவில் வழக்கமான அதே 2.4 லிட்டர் டீசல் என்ஜின் தான் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த என்ஜினின் தரம் இன்னும் எந்த விதத்திலும் குறையவில்லை. அதே மென்மையான செயல்பாடு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட கால உத்தரவாதம் போன்றவற்றினால் இப்போதும் இந்த டீசல் என்ஜின், காரை ஓட்டுபவரை ஆச்சிரியப்படுத்துகிறது.
நம்ப முடியாத விலை: மேற்கூறப்பட்ட இத்தனை அம்சங்கள் இருந்த போதிலும், வெறும் ரூ.19.72 லட்சத்தில் இருந்து இன்னோவா க்ரிஸ்ட்டாவின் விலை துவங்குகிறது. GX, GX+ மற்றும் VX என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்ட்டாவை 7 இருக்கைகள் அல்லது 8 இருக்கைகள் உடன் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக மார்க்கெட்டில் பல MPV வகை கார்கள் களமிறக்கப்பட்டன. இருப்பினும், அவை எதனாலும் இன்னோவா க்ரிஸ்ட்டாவை முந்த முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். புதிய 2026ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களினால் வரும் மாதங்களில் இந்த காரின் விற்பனை அதிகரிக்கும் என்றாலும், 2027 முதல் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுவது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications