பென்ட்லியின் முதல் எலக்ட்ரிக் சொகுசு கார் இந்தியா வருகிறது... எப்போது தெரியுமா?
சொகுசு கார் தயாரிப்பில் உலகளவில் பிரபலமான பென்ட்லி (Bentley) நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. வரும் 2027-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பென்ட்லி நிறுவனத்தின் மின்சார சொகுசு கார் இந்தியாவுக்கு வரவுள்ளது.
டோர்கல் (Torcal) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மின்சார காரை ஏற்கனவே உலக சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் பென்ட்லி ஈடுபட்டு உள்ளது. அந்த வகையில், இந்தியாவிலும் இந்த புதிய மின்சார காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, வேகமாக வளர்ந்து வரும் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில், தனது புதிய மாடலுடன் விற்பனையை மேலும் விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பென்ட்லி டோர்கல் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து இந்த கார், சீனா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை துவங்க பென்ட்லி திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்து உலக அளவில் இந்த கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்தியாவிலும் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் உற்பத்தி அல்லது அசெம்பிளி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் இல்லை என்று பென்ட்லி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஃபிராங்க்-ஸ்டெஃபென் வாலிசர் தெரிவித்துள்ளார்.
பென்ட்லி கார்களின் தயாரிப்பில் அதிக நுட்பம், சிறப்பு பொறியியல் மற்றும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களின் திறன் தேவைப்படுகிறது. மேலும், பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட சொகுசு கார் என்ற அடையாளமும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமானது. எனவே, இந்தியாவில் உற்பத்தி செய்வதை விட இங்கிலாந்திலேயே தயாரித்து விற்பனை செய்வது நிறுவனத்தின் வர்த்தகக் கொள்கையாக உள்ளது.

பென்ட்லியின் முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும்போது, அதன் மின்சார தொழில்நுட்பத்தை மட்டும் விளம்பரப்படுத்தாமல், காரின் வடிவமைப்பு, உட்புற வசதிகள், பயணிகளுக்கான சவுகரியம் மற்றும் தனித்துவமான தயாரிப்பு தரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
முன்னதாக தனது முழு கார் வரிசையையும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற பென்ட்லி திட்டமிட்டிருந்தது. ஆனால் சந்தையின் வளர்ச்சி, வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் பல்வேறு நாடுகளின் விதிமுறைகளை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பென்ட்லி நிறுவனத்தின் அனைத்து கார்களும் முழுமையான மின்சார கார்களாக மாற்றம் செய்யப்படும் திட்டம் 2035-ம் ஆண்டுக்கு பிறகுதான் நடைபெற வாய்ப்புள்ளது.
பென்ட்லிக்கு அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) எதிர்கால விற்பனைக்கு உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தகுதியான இங்கிலாந்து தயாரிப்பு கார்களுக்கு இறக்குமதி வரி படிப்படியாக குறைக்கப்படுவதால், பென்டைகா (Bentayga) போன்ற பெட்ரோல் மாடல்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், பென்ட்லியின் முல்லினர் (Mulliner) கஸ்டமைஸ் பிரிவு மூலமாக இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்களை மாற்றியமைக்கும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களின் ரசனை, கலாச்சாரம் மற்றும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய வடிவமைப்புகளுக்கு எதிர்காலத்தில் அதிக வரவேற்பு கிடைக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications


