முக்காடு போட்டு சுற்றும் டாடா பன்ச் காரின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடல்: விரைவில் அறிமுகமாகிறது
இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் கார்களுக்கான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்தகட்ட முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், டாடா பன்ச் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் புனே அருகே சோதனை செய்யப்பட்டபோது கேமராவில் சிக்கியுள்ளது.
தற்போது டாடா பன்ச் கார் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என வெவ்வேறு எரிபொருள் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தற்போது ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் தயாராகி வருவதால், எதிர்காலத்தில் பன்ச் காருக்கு மற்றொரு புதிய எரிபொருள் தேர்வு கிடைக்க இருக்கிறது.

கடந்த 2025ம் ஆண்டு டெல்லியில் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் மொபிலிட்டி வாகனக் கண்காட்சியில் டாடா பன்ச் காரின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது புனே அருகே சோதனை செய்யப்பட்ட கார், அண்மையில் வந்த புதுப்பிக்கப்பட்ட டாடா பன்ச் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
காரின் முக்கிய பகுதிகள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், அதன் முழுமையான வடிவமைப்பை அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும், தற்போதைய பன்ச் மாடலின் அடிப்படை வடிவமைப்பு இதில் தொடர்வது சோதனை படங்கள் மூலம் தெரிகிறது. முன்பக்கத்தில் மெலிதான விளக்குகள், கீழே தனியாக அமைக்கப்பட்ட ஹெட்லைட்டுகள், அகலமான கிரில் மற்றும் கருப்பு நிற வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் காணப்படுகின்றன. பின்புறத்தில் ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் பின்புற வைப்பர் இடம்பெற்றுள்ளன.
ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார்கள் பெட்ரோல் மற்றும் அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. வழக்கமான பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது, இவற்றின் எரிபொருள் அமைப்பு, எஞ்சின் கட்டுப்பாட்டு மென்பொருள் மற்றும் சில முக்கிய பாகங்களில் மாற்றங்கள் தேவைப்படும். எத்தனால் கலவையின் அளவைப் பொறுத்து இயங்கும் வகையில் இந்த காரின் தொழில்நுட்பம் வடிவமைக்கப்படுகிறது.

அதிக எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான தொழில்நுட்பத் தயார்நிலை குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷைலேஷ் சந்திரா ஏற்கனவே உறுதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 2026 இறுதி அல்லது 2027 தொடக்கத்தில் ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனம் தயாராகலாம் என்ற தகவல்களும் வெளியாகியிருந்தன.
இந்த சூழலில், வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் டாடா பன்ச் ஃப்ளெக்ஸ் ஃபியூல் காரை நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அறிமுகம் செய்யப்பட்டால், இந்தியாவில் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான சந்தையில் பன்ச் புதிய கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது.
மாற்று எரிபொருள் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கமும் பெட்ரோல், டீசலால் வாகனங்களிலிருந்து வரும் மாசு உமிழ்வை குறைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், எத்தனால் எரிபொருள் கார்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதில், குறைவான பட்ஜெட்டில் டாடா பன்ச் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார் நிச்சயமாக சிறந்த தேர்வாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications


