டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் நாளை அறிமுகம்!
இந்தியாவில் பிரபலமான எம்பிவி (MPV) கார்களில் ஒன்றான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் புதுப்பிக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் நாளை (நவம்பர் 25) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாடலில் வெளிப்புறத் தோற்றத்தில் சில மாற்றங்கள், கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேபின் வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
தற்போதைய இன்னோவா ஹைகிராஸ் ஏற்கனவே குடும்பப் பயணங்களுக்கு ஏற்ற விசாலமான இடவசதி, ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் சொகுசான பயண அனுபவம் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் கூடுதல் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் முன்பக்கத்தில் சற்று பெரிய கிரில், புதுப்பிக்கப்பட்ட எல்இடி டிஆர்எல் (DRL) அமைப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க பம்பர் ஆகியவை இடம்பெற உள்ளது. பனி விளக்கு ஹவுசிங் அமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கவாட்டு தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது. தற்போதைய மாடலில் உள்ள வடிவமைப்பையே தொடர்ந்து வழங்கப்படும். இருப்பினும், 18 இன்ச் அலாய் வீல்களின் வடிவமைப்பு அல்லது ஃபினிஷிங்கில் சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம். பின்புறத்திலும் டெயில் லைட் வடிவமைப்பு பெரும்பாலும் பழையபடியே தொடரும் என்று தெரிகிறது. அதேநேரத்தில், பம்பரில் சில மாற்றங்கள் இடம்பெறலாம்.
இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய மாற்றமாக உட்புறத்தில் பெரிய டிஜிட்டல் திரைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இதுதவிர, புதிய கேபின் வண்ணத் தேர்வுகள், மேம்படுத்தப்பட்ட இருக்கை உறைகள் மற்றும் கூடுதல் வசதிகள் இடம்பெறலாம். தற்போதைய மாடலில் உள்ள டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் ஸ்டீயரிங் அமைப்பு தொடர்ந்து வழங்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்பக்க இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி, 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், பவர் டெயில்கேட், 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பாதுகாப்பு அம்சங்களிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் தொடர்ந்து சிறப்பான வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் (ABS), இஎஸ்சி (ESC), ஐஎஸ்ஓஎஃப்ஐஎக்ஸ் (ISOFIX) குழந்தைகள் இருக்கை பொருத்தும் வசதி, 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ஏடிஏஎஸ் (ADAS) தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.
தற்போதைய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் எஞ்சின் தேர்வுகள் புதிய மாடலிலும் தொடர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ஃப்ளெக்ஸ் ஃபியூல் தொழில்நுட்பம் கொண்ட மாடலிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலிலும் இயங்கும் எஞ்சினுடன் வர இருக்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் நாளை அறிவிக்கப்பட உள்ளது. தற்போதைய மாடலைவிட புதிய மாடலில் கூடுதல் வசதிகள் இடம்பெறும் என்பதால், விலையிலும் உயர்வு இருக்கும்.


Click it and Unblock the Notifications


