பண்டிகைக் காலத்தில் 55.25 லட்சம் வாகனங்கள் விற்பனை... புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!
இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் வாகன விற்பனை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நவராத்திரி முதல் தீபாவளிக்குப் பிந்தைய 15 நாட்கள் என மொத்தம் 42 நாட்களில் மட்டும் 55.25 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 54.05 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 2.21% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு (FADA) இன்று பண்டிகை காலத்தில் விற்பனையான வாகனங்கள் குறித்த விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த 2025ம் ஆண்டு பண்டிகை காலத்தை ஒப்பிடுகையில் வளர்ச்சி சிறிதளவு உயர்ந்திருந்தாலும், அதற்கு முந்தைய 2024ம் ஆண்டு பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை 23.95% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய வாகன சந்தையில் நுகர்வோர் வாங்கும் திறன் மற்றும் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

மொத்த விற்பனையில் இருசக்கர வாகனங்கள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. 42 நாட்களில் 43.13 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.67% வளர்ச்சியை பெற்றுள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 5.32% உயர்ந்து 1.93 லட்சம் யூனிட்டுகளாகவும், வர்த்தக வாகன விற்பனை 7.13% அதிகரித்து 1.55 லட்சம் யூனிட்டுகளாகவும் பதிவாகியுள்ளது.
டிராக்டர் விற்பனையும் 2.24% வளர்ந்து 1.03 லட்சம் யூனிட்டுகளை எட்டியுள்ளது. அதே நேரத்தில், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் வீல்டு கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் விற்பனை 26.06% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயம், சரக்கு போக்குவரத்து மற்றும் கட்டுமானத் துறைகளிலும் வாகனங்களுக்கான தேவை வலுவாக இருப்பது தெரிய வருகிறது.

மற்ற வாகனப் பிரிவுகள் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், பயணிகள் வாகன விற்பனை மட்டும் சரிவைச் சந்தித்துள்ளது. கார்கள், எஸ்யூவிகள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் மொத்தமாக 7.48 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தை விட 7.16% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், 2024 பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடும்போது பயணிகள் வாகன விற்பனை 16.43% அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஜிஎஸ்டி தொடர்பான மாற்றங்களால் விற்பனை மிக அதிகமாக இருந்ததே இந்த ஆண்டு வளர்ச்சி குறைந்துள்ளதற்கான காரணமாக FADA அமைப்பு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பல வாகனங்கள் தொடர்ந்து டெலிவரி செய்யப்படுவதால், சந்தையில் தேவைக்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பண்டிகைக் கால விற்பனையில் மின்சார வாகனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மொத்தமாக 5.09 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 52.62% வளர்ச்சி கண்டுள்ளது. மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு சுமார் 9.2% ஆக உள்ளது. அதாவது, விற்பனையான 10 வாகனங்களில் கிட்டத்தட்ட ஒன்று மின்சார வாகனமாக மாறியுள்ளது.
பண்டிகை காலத்தில் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை 3.30 லட்சம் யூனிட்டுகள் என்ற அளவில் விற்பனையாகி 61.10% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மின்சார கார்கள் விற்பனை 72.91% அதிகரித்து 52,104 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. வர்த்தகப் பயன்பாட்டிற்கான மின்சார வாகனங்கள் 154.56% வளர்ந்து 6,387 யூனிட்டுகளை எட்டியுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு வேகமாக அதிகரித்து வருவது தெளிவாகியுள்ளது.
இந்த ஆண்டு பண்டிகைக் கால விற்பனை, இந்திய வாகனத் துறையின் வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
ஜிஎஸ்டி மாற்றங்கள், வாகனங்களின் விலை குறித்த எதிர்பார்ப்புகள், புதிய மாடல்கள் மற்றும் அதிகரித்து வரும் மின்சார வாகன தேர்வுகள் ஆகியவை விற்பனை வளர்ச்சிக்கு உதவியுள்ளன. மேலும், FADA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்திய வாகன சந்தை இந்த ஆண்டு 3 கோடி வாகனங்கள் ஆண்டு சில்லறை விற்பனை என்ற வரலாற்று மைல்கல்லை எட்டும் வாய்ப்புக்கு அருகில் உள்ளது.


Click it and Unblock the Notifications



