ஸ்டீல், சிமெண்ட் துறையை தொடர்ந்து கார் தயாரிப்பிலும் களமிறங்கும் JSW! டிசம்பர் 4-ல் புதிய பிராண்டு அறிமுகம்
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான JSW குழுமம், தனது சொந்த கார் பிராண்டை அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. ஸ்டீல், சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஏற்கனவே வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், தற்போது ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய விரிவாக்கத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
வரும் டிசம்பர் 4ஆம் தேதி தனது முதல் காரை அறிமுகப்படுத்த JSW திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய வாகனத் துறையில் ஜாம்பவான் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா போன்றே மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமாக உருவெடுக்கும் மிகப்பெரிய திட்டத்துடன் முதலீடுகளையும், ஆயத்தப் பணிகளையும் ஜேஎஸ்டபிள்யூ மேற்கொண்டுள்ளது.

வாகனத் துறையில் களமிறங்க உள்ள ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் ரூ.17,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு வாகன உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு, உற்பத்தி கட்டமைப்புகள் மற்றும் புதிய வாகனங்களை உருவாக்குவதற்கான பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தனது வாகனத் தொழிலை நீண்ட கால அடிப்படையில் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் பகுதியில் புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் பணிகளை ஜேஎஸ்டபிள்யூ மேற்கொண்டுள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை மூலமாக இந்திய கார் சந்தையில் மிகப்பெரிய முதலீட்டு திட்டத்துடன் ஜேஎஸ்டபிள்யூ காய் நகர்த்தி வருகிறது.
சீனாவின் Chery நிறுவனத்தின் ஜேடூர் டி2 என்ற எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலை தனது பிராண்டில் காம்பேட் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம். இதற்கான டீசர்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்திய சந்தைக்கான தேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பிராண்டிங் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த கார் அறிமுகப்படுத்தப்படுகிறது.
JSW Group ஏற்கனவே SAIC Motor நிறுவனத்துடன் இணைந்து MG Motor India நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளது. இந்த கூட்டணி மூலம் இந்தியாவில் மின்சார கார்கள் மற்றும் பிற வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இருப்பினும், தற்போது உருவாக்கப்படும் JSW-வின் சொந்த கார் பிராண்டு மூலமாக பல்வேறு மாடல்களை தனியாக தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. இதற்கும் எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கும் தொடர்பு இருக்காது. இதன் மூலம் வாகன வடிவமைப்பு, விற்பனை மற்றும் எதிர்கால தயாரிப்புகள் குறித்த முடிவுகளை JSW சுதந்திரமாக மேற்கொள்ள முடியும்.
கடந்த செப்டம்பர் மாதம் JSW தனது மின்சார டிரக் மற்றும் பேருந்து பிராண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வர்த்தக வாகனத் துறையில் மின்சார போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிறுவனம், தற்போது பயணிகள் கார் சந்தையிலும் விரிவடைவது அதன் ஆட்டோமொபைல் திட்டத்தின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.
நீண்ட கால நோக்கில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களைப் போல, கார்கள், எஸ்யூவிகள், மின்சார வாகனங்கள், டிரக்குகள், பேருந்துகள் என பல்வேறு பிரிவுகளில் செயல்படும் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக JSW உருவெடுக்க விரும்புகிறது. இதற்காக உற்பத்தி ஆலை, முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications


