இந்திய EV கார் சந்தையில் BYD நிறுவனத்தின் அதிரடி வளர்ச்சி... ஒரே ஆண்டில் இரட்டிப்பான விற்பனை!
சீனாவைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான BYD, இந்தியாவில் தனது விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 20,000 கார்களை டெலிவரி செய்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. மின்சார கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் சூழலில், இந்த வளர்ச்சி BYD நிறுவனத்திற்கு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மின்சார கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக நீண்ட பயணத்திற்கு ஏற்ற ரேஞ்ச், பேட்டரி பாதுகாப்பு, நவீன வசதிகள் மற்றும் குறைந்த இயக்க செலவு ஆகியவற்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த மாற்றத்தை பயன்படுத்தி BYD தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

BYD நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 10,000 கார்களை டெலிவரிகளை கொடுத்து முக்கிய மைல்கல்லை கடந்ததாக அறிவித்திருந்தது. அதிலிருந்து அடுத்த 10,000 டெலிவரிகளை எட்டுவதற்கு வெறும் 14 மாதங்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆரம்பகட்ட வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, தற்போது இந்திய சந்தையில் நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது.
இந்த சாதனையை கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள PPS BYD டீலர்ஷிப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ராஜீவ் சவுஹான் மற்றும் தேசிய விற்பனைத் தலைவர் ஸ்ரீரங் ஜோஷி ஆகியோர் 20,000-வது காரை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு நிறுவனத்தின் இந்திய வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது.
BYD நிறுவனத்தின் இந்திய விற்பனையில் ATTO 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கார் இதுவரை 9,000-க்கும் அட்டோ3 கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. நகர்ப்புற பயன்பாடு, எஸ்யூவி வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மின்சார இயக்கம் ஆகியவற்றை விரும்பும் வாடிக்கையாளர்களிடையே இந்த மாடல் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல், நிறுவனத்தின் SEALION 7 எலெக்ட்ரிக் எஸ்யூவியும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகமான பின்னர் இந்த மாடல் 5,000-க்கும் மேற்பட்ட டெலிவரிகளை கடந்துள்ளது. ATTO 3 மற்றும் SEALION 7 ஆகிய இரண்டு கார்களும் சேர்ந்து 14,000-க்கும் அதிகமான டெலிவரிகளை பதிவு செய்துள்ளன. இதனால் BYD-யின் மொத்த விற்பனையில் இந்த இரண்டு எஸ்யூவிகளும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
தற்போது BYD நிறுவனம் இந்தியாவில் நான்கு மின்சார பயணிகள் கார்களை விற்பனை செய்து வருகிறது. ATTO 3 எஸ்யூவி, SEAL எலெக்ட்ரிக் செடான், SEALION 7 பிரீமியம் எஸ்யூவி மற்றும் eMAX 7 மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட எம்பிவி ஆகியவை அதன் விற்பனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு பட்ஜெட் மற்றும் பயன்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன.
இந்த கார்களில் BYD நிறுவனத்தின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கிய Blade Battery பயன்படுத்தப்படுகிறது. மேலும், Cell-to-Body கட்டமைப்பு மற்றும் e-Platform 3.0 போன்ற தொழில்நுட்பங்களும் இடம்பெறுகின்றன. பேட்டரி பாதுகாப்பு, வாகனத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மை, மின்சார செயல்திறன் மற்றும் பயணிகளுக்கான இடவசதி ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
விற்பனை வளர்ச்சிக்கு ஏற்றவாறு BYD தனது ஷோரூம்களின் எண்ணிக்கையையும், கட்டமைப்பையும் விரிவுபடுத்தியுள்ளது. தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் மொத்தம் 51 ஷோரூம்களை பிஒய்டி நிறுவனம் நடத்தி வருகிறது. மின்சார கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை, கார்களை நேரில் பார்த்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, பராமரிப்பு மற்றும் சேவை வசதிகளை எளிதாக வழங்குவதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மேலும், சமீபத்தில் இந்தியாவில் தனது ஆடம்பர கார் பிராண்டான Denza-வையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Denza D9 மற்றும் Denza Z9 GT ஆகிய மின்சார கார்கள் மூலம் உயர்தர சொகுசு வாகன சந்தையிலும் நிறுவனம் நுழைந்துள்ளது. இதன் மூலம் சாதாரண பிரீமியம் எலெக்ட்ரிக் கார்கள் முதல் மிகவும் விலை உயர்ந்த சொகுசு வாகனங்கள் வரை தனது வணிகத்தை விரிவாக்க BYD திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


