டிசம்பரில் அறிமுகமாகும் ஜேஎஸ்டபிள்யூ கார்... இணையதளம் தொடக்கம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் களமிறங்க தயாராகி வருகிறது ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் (JSW Motors) நிறுவனம். ஏற்கனவே எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம், தற்போது சொந்த பிராண்டில் கார்களை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த புதிய முயற்சியின் முக்கியமான கட்டமாக, ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முதல் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்து நிறுவனத்திடமிருந்து எதிர்கால அறிவிப்புகளைப் பெற முடியும். டிசம்பர் மாத அறிமுகத்திற்கு இது முன்னோட்டமாக அமைந்துள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனத்தின் இணையதளத்தில் தற்போது வாடிக்கையாளர்கள் தங்களது ஆர்வத்தைத் தெரிவிக்கும் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பதிவுக்கான நேரடி வசதி இன்னும் வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் பெயர் உள்ளிட்ட தொடர்பு விவரங்களை அளித்தால், முன்பதிவு தொடங்கும்போது நிறுவனம் அவர்களைத் தொடர்புகொண்டு விபரங்களையும், விருப்பங்களையும் பெற்றுக்கொள்ளும்.
பலருக்கும் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் என்ற பெயர் எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் உள்ள தொடர்பு குறித்த குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இவை இரண்டு வெவ்வேறு நிறுவனங்களாக செயல்பட உள்ளன. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா மூலம் எம்ஜி கார்களை விற்பனை செய்கிறது. அதேநேரத்தில் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் தனது சொந்த பிராண்ட் பெயரில் புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் புதிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த தலைமுறை பயணிகள் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் முதல் கார் மாடலாக காம்பேட் என்ற எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் டிசம்பர் 4ந் தேதி இந்த கார் இந்தியாவில் பொதுபார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் விற்பனையாகும் செரி ஜெடூர் டி2 (Chery Jetour T2) அடிப்படையிலான புதிய எஸ்யூவியாக இது வர இருக்கிறது.
இந்த எஸ்யூவி பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கலாம் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. சாதாரண ஹைபிரிட் கார்களைப் போல இல்லாமல், இதன் பேட்டரியை வெளிப்புற மின்சார இணைப்பு மூலமாகவும் சார்ஜ் செய்ய முடியும். இதனால் குறுகிய தூர பயணங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
நீண்ட தூரப் பயணங்களின்போது பெட்ரோல் எஞ்சின் உதவியுடன் தொடர்ந்து பயணிக்க முடியும். இதனால் முழுமையான மின்சார கார்களில் இருக்கும் சார்ஜிங் வசதி குறித்த கவலை இருக்காது. புதிய பிராண்டின் வெற்றிக்கு கார்களின் வடிவமைப்பு மற்றும் விலை மட்டுமின்றி விற்பனைக்குப் பிந்தைய சேவையும் முக்கியமானது. இதைக் கருத்தில் கொண்டு ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் தனது டீலர்ஷிப் கட்டமைப்பையும் உருவாக்கி வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே சில நகரங்களில் தொடங்கியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் லேண்ட்மார்க் கார்ஸ் நிறுவனம், அகமதாபாத் மற்றும் போபால் நகரங்களில் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் விற்பனை மையங்களை அமைப்பதற்கான விருப்பக் கடிதங்களைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. மொத்தம் ஐந்து ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
புதிய கார் பிராண்டுகள் அறிமுகமாகும்போது போலியான இணையதளங்கள் மற்றும் முன்பதிவு மோசடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www\.jswmotors.com மூலமாக மட்டுமே வாடிக்கையாளர் விபரங்களை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. மற்ற இணையதளங்களில் தனிப்பட்ட அல்லது பணம் தொடர்பான விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்யூவி சந்தையில் வலுவான போட்டியை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்குவது சந்தையில் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஹைபிரிட் வாகனங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications


