புதிய தோற்றத்தில் மஹிந்திரா தார்! செப்டம்பர் 22ல் அறிமுகம்... என்னென்ன மாற்றங்கள்?
ஆஃப்ரோடு பிரியர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் 3 டோர் மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 22ஆம் தேதி புதிய தார் அறிமுகமாக உள்ளது.
மஹிந்திரா வெளியிட்டுள்ள டீசர் படங்களில் காரின் முழுமையான தோற்றத்தை வெளியாகவில்லை. இருப்பினும், முன்பக்க க்ரில் பகுதியில் செய்யப்படும் மாற்றத்தை தெளிவாக பார்க்க முடிகிறது.

(Representational Image)
செங்குத்தான பட்டைகள் , கம்பி வலை போன்ற அமைப்பு மற்றும் அதன் மேல் மஹிந்திரா எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்க்கிறது. இதன் மூலம் புதிய தாரின் முன்பக்கம் மேலும் முரட்டுத்தனமான தோற்றத்தை பெறும் என தெரிகிறது.
புதிய தாரின் வெளிப்புற வடிவமைப்பில் தார் ராக்ஸ் மாடலின் தாக்கம் இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக க்ரில், ஹெட்லைட், பம்பர் அமைப்புகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Coming soon to a rear-view mirror near you. #StayTuned #ComingSoon
— Mahindra Thar (@Mahindra_Thar) September 17, 2026
[Mahindra, THE SUV] pic.twitter.com/puXtq1vhfM
C-வடிவ பகல்நேர விளக்குகள் கொண்ட வடிவமைப்பும் வரலாம் என கூறப்படுகிறது. பக்கவாட்டு தோற்றத்தில் தாரின் பாரம்பரியமான பாக்ஸி டிசைன் தொடர்ந்து இடம்பெறும். ஆனால், புதிய அலாய் வீல் டிசைனும் இந்த அப்டேட்டில் இடம்பெறும்.
பின்புறத்திலும் டெயில் லைட் மற்றும் பம்பர் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக தாரின் அடையாளத்தை மாற்றாமல், ஏற்கனவே இருக்கும் வலிமையான தோற்றத்தை மேலும் நவீனப்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருக்கும் என தெரிகிறது.
Your weekends just lost their excuses. #ComingSoon#StayTuned
— Mahindra Thar (@Mahindra_Thar) September 16, 2026
[Mahindra, THE SUV] pic.twitter.com/wyrVOkQIkb
கேபின் பகுதியிலும் சில முக்கியமான அப்டேட்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தார் எஸ்யூவியில் 10.25 அங்குல டச் ஸ்க்ரீன் உள்ளிட்ட சில நவீன வசதிகள் உள்ளன. புதிய மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா மற்றும் வென்டிலேட்டட் சீட்டுகள் போன்ற வசதிகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடாஸ் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி உள்ளிட்ட ஏராளமான நவீன அம்சங்களை பெறும் வாய்ப்பு உள்ளது. ஆஃப்ரோடு மட்டுமின்றி, நெடுஞ்சாலை பயணத்திற்கும் சிறந்த தேர்வாக தன்னை முன்னிறுத்தும் வாய்ப்பை இந்த எஸ்யூவி பெறும் என தெரிகிறது.
புதிய தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்படும். மாற்றங்கள் இருக்காது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ரியர்-வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படலாம்.
தற்போதைய தார் ரூ.10.32 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை இதைவிட அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications

