புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்: வேரியண்ட் வாரியான வசதிகள், விலை முழு விவரம்
இந்தியாவின் பிரீமியம் எம்பிவி சந்தையில் முக்கியமான மாடலாக இருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு 2026-ம் ஆண்டிற்கான புதுப்பிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய முன்பக்க வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட உட்புறம், பெரிய டிஜிட்டல் திரைகள், கூடுதல் சொகுசு வசதிகள் மற்றும் புதிய ஃப்ளெக்ஸ் ஹைபிரிட் தொழில்நுட்பம் என பல மாற்றங்களுடன் இந்த கார் அறிமுகமாகியுள்ளது.
இந்த புதிய மாடலில் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலுடன் புதிய எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தும் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப G Hybrid, GX Hybrid, VX Hybrid மற்றும் ZX Hybrid என பல வேரியண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் வழங்கப்படும் வசதிகளை விரிவாகப் பார்க்கலாம்.

GX பெட்ரோல் - ரூ.19.59 லட்சம்
இன்னோவா ஹைகிராஸ் காரின் பெட்ரோல் தேர்வு GX வேரியண்ட்டில் கிடைக்கிறது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. நகரப் பயணம், நெடுஞ்சாலை பயணம் மற்றும் குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட அமைப்புகளில் இதனை வாங்க முடியும்.
இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வசதி, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, புஷ் பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுகின்றன. ஹைபிரிட் தொழில்நுட்பம் தேவையில்லை, பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஆரம்ப விலை கொண்ட வேரியண்ட்டாக அமைகிறது.

G ஹைப்ரிட் - ரூ.19.99 லட்சம்
புதிய ஹைகிராஸ் ஹைபிரிட் வரிசையில் G Hybrid வேரியண்ட் குறைந்த விலை வேரியண்ட் தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் டொயோட்டாவின் 2.0 லிட்டர் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் எஞ்சினுடன் ஐந்தாம் தலைமுறை ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. E20 முதல் E85 வரையிலான எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் இந்த மாடல் கிடைக்கிறது.
இதில் எல்இடி விளக்குகள், அலாய் வீல்கள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிகள், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஹைபிரிட் தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் பெற விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

GX ஹைப்ரிட் - ரூ.23.99 லட்சம்
விலை குறைவான G Hybrid வேரியண்ட்டை விட கூடுதல் வசதிகளை விரும்புபவர்களுக்கு GX ஹைப்ரிட் வேரியண்ட் மற்றொரு தேர்வாக உள்ளது. இந்த வேரியண்ட்டில் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் கூடுதல் இணைப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 7 மற்றும் 8 இருக்கை அமைப்புகளிலும் இந்த வேரியண்ட் கிடைக்கிறது.
இதில் ஸ்மார்ட் என்ட்ரி, ரிவர்ஸ் கேமரா, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்ப வசதிகள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. குடும்பத்துடன் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் ஒரே மாடலில் பெறுவதற்கான தேர்வாக GX Hybrid அமைகிறது.
VX ஹைப்ரிட் - ரூ.28.79 லட்சம்
பேஸ் வேரியண்ட்டுகளைவிட VX ஹைப்ரிட் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளும் மேம்பட்ட பயண அனுபவமும் வழங்கப்படுகின்றன. இதில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை இடம்பெறுகின்றன. பெரிய திரைகள் மூலம் வாகனத் தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இணைப்பு வசதிகளை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
மேலும், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் ஏசி, பின்புற சன் ஷேடுகள், க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், டயர் பிரஷர் கண்காணிப்பு வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட இருக்கை அமைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நீண்ட தூரப் பயணங்களில் வசதியும் தொழில்நுட்பமும் முக்கியம் என நினைப்பவர்களுக்கு VX Hybrid பொருத்தமான தேர்வாக இருக்கும்.
ZX ஹைப்ரிட் - ரூ.31.99 லட்சம்
இன்னோவா ஹைகிராஸ் காரின் அதிக வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட்டாக ZX Hybrid உள்ளது. இதில் பிரீமியம் உட்புற அலங்காரம், கூடுதல் சொகுசு இருக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக இரண்டாவது வரிசையில் பயணிப்பவர்களின் வசதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் 18 இன்ச் அலாய் வீல்கள், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், 8-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, மெமரி வசதி, இரண்டாவது வரிசை பவர் ஒட்டோமன் இருக்கைகள், முன்புற வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் பவர் டெயில்கேட் ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 மூலம் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிராக்கிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஆட்டோ ஹை பீம் உள்ளிட்ட ஓட்டுனர் உதவி வசதிகளும் கிடைக்கின்றன.
பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் நினைவூட்டல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட்டுகளில் கூடுதல் ஓட்டுநர் உதவி தொழில்நுட்பங்களும் இடம்பெறுகின்றன.
எந்த வேரியண்ட்டை தேர்வு செய்யலாம்?
குறைந்த விலையில் பெட்ரோல் கார் தேடுபவர்களுக்கு GX பெட்ரோல் ஏற்றதாக இருக்கும். ஹைபிரிட் தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் பெற விரும்புபவர்கள் G ஹைப்ரிட் அல்லது GX ஹைப்ரிட் மாடல்களைப் பரிசீலிக்கலாம்.
பெரிய திரைகள், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் கூடுதல் வசதிகள் வேண்டுமெனில் VX ஹைப்ரிட் நல்ல தேர்வாக இருக்கும். அதே நேரத்தில், அதிக சொகுசு வசதிகள், இரண்டாவது வரிசையில் ஒட்டோமன் பிரிமீயமான சொகுசு இருக்கைகள், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை விரும்புபவர்கள் ZX ஹைப்ரிட் வேரியண்ட்டை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications



