சீன நிறுவனங்களால் பெரும் நெருக்கடி... கூட்டணி போடும் டொயோட்டா, ஹோண்டா, நிஸான்!!
ஜப்பானின் முன்னணி கார் நிறுவனங்களான டொயோட்டா, ஹோண்டா மற்றும் நிஸான் ஆகியவை தங்களுக்குள் போட்டியாளர்களாக இருந்தாலும், உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் சில விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, வாகனங்களில் பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்களின் தயாரிப்பு தரநிலைகளை ஒரே மாதிரியாக மாற்றுவதன் மூலம் உற்பத்தி செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
சீன கார் நிறுவனங்கள் குறைந்த செலவில் புதிய வாகனங்களை உருவாக்கி உலகச் சந்தையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனால் ஜப்பானிய நிறுவனங்களுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஒவ்வொரு நிறுவனமும் உதிரிபாகங்களுக்கான தரநிலைகளில் வெவ்வேறு வர்த்தக கொள்கைகளை கடைபிடிக்கின்றன. இந்த நிலையில், மூன்று நிறுவனங்களும் பொதுவான தரநிலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளன.

வரும் 2027ஆம் ஆண்டு முதல் இந்த புதிய தரநிலை கொள்கையை பின்பற்றவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் முக்கியமாக கார் தயாரிப்புக்கு பயன்படும் இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் ரெசின் பொருட்கள், வாகனங்களுக்கான வயரிங் ஹார்னஸ் ஆகியவற்றின் தயாரிப்பு விதிமுறைகளை ஒரே மாதிரியாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உற்பத்திச் செலவுகளை கணிசமாக குறைக்க முடியும்.
குறிப்பாக, கார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரும்புப் பொருட்களின் தரம் மற்றும் அதற்கான தனிப்பட்ட தேவைகளில் சில பொதுவான விதிமுறைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான பொதுவான தேவைகளும் உருவாக்கப்படும். இதனால் உற்பத்தியாளர்களுக்கும் உதிரிபாக நிறுவனங்களுக்கும் பொருட்களை தயாரிப்பது எளிமையாகும்.
வாகனங்களில் மின்சாரத்தை பல்வேறு பாகங்களுக்கு கொண்டு செல்லும் வயரிங் ஹார்னஸ் தயாரிப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கம்பிகளின் வகைகள், நிறங்களை அடையாளப்படுத்தும் விதிமுறைகள் உள்ளிட்டவற்றை எளிமைப்படுத்துவதன் மூலம் உற்பத்தியை தானியங்கி முறையில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இது உற்பத்தி நேரத்தையும் தொழிலாளர் செலவுகளையும் குறைக்க உதவும்.
தற்போது வெவ்வேறு கார் நிறுவனங்கள் ஒரே மாதிரியான பயன்பாட்டுக்கான பொருட்களுக்கும் தனித்தனி தரநிலைகள் மற்றும் சோதனை முறைகளைப் பின்பற்றுகின்றன. இதனால் உதிரிபாக நிறுவனங்கள் பல்வேறு வகையான பொருட்களை தனித்தனியாக தயாரிக்க வேண்டியுள்ளது. பொதுவான விதிமுறைகள் உருவாக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையில் பொருட்களை ஒரே முறையில் தயாரித்து செலவுகளைக் குறைக்க முடியும்.
இந்த முயற்சியால் கிடைக்கும் சேமிப்பை கார் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக மின்சார வாகன பேட்டரி தொழில்நுட்பம், வாகன மென்பொருள், மேம்பட்ட ஓட்டுனர் உதவி அமைப்புகள் (ADAS), அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் போன்றவற்றில் கூடுதல் முதலீடு செய்ய முடியும்.
இந்த முயற்சி முதற்கட்டமாக ஜப்பானில் உள்ள உற்பத்தி அமைப்புகளை மையமாகக் கொண்டு வகுக்கப்பட உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் டொயோட்டா, ஹோண்டா மற்றும் நிஸான் கார்களுக்கும் இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி உற்பத்தி மற்றும் உதிரிபாக வினியோக அமைப்புகள் உள்ளன.
எதிர்காலத்தில் இந்த பொதுவான தரநிலைகள் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால், உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு உற்பத்தியை எளிமைப்படுத்தவும் செலவுகளைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், இந்த நிறுவனங்கள் சேமிக்கும் தொகையை புதிய தொழில்நுட்ப முதலீடுகள், உற்பத்திச் செலவுகள் அல்லது லாபத்தை அதிகரிக்கவும் முடியும். அதேநேரத்தில் கார் விலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது.
Source: Automotive News


Click it and Unblock the Notifications


