சுங்கச்சாவடிகளில் நம்பர் பிளேட்டை மறைத்தால் 8 மடங்கு கூடுதல் கட்டணம்... அரசு எச்சரிக்கை!
தேசிய நெடுஞ்சாலைகளில் தடையின்றி பயணிக்கும் வகையில், தடுப்புகள் இல்லாத (Barrierless) சுங்கச்சாவடிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்லும் வகையில் தொழில்நுட்பம் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த முறையை பயன்படுத்தி சுங்கக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க சிலர் வாகனப் பதிவு எண்ணை மறைப்பது அல்லது நம்பர் பிளேட்டை மாற்றியமைப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு புதிய கடுமையான நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைத்தல், மாற்றியமைத்தல் அல்லது வாசிக்க முடியாத வகையில் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், வழக்கமான சுங்கக் கட்டணத்தை விட 4 முதல் 8 மடங்கு அதிகமாக சுங்கக் கட்டணம் வசூலிக்க புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த அபராதம், ஏற்கெனவே மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்திற்கு கூடுதலாக இருக்கும்.

8 மடங்கு வரை அபராதம்
தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டண விதிகளில் (National Highways Fee Rules) திருத்தம் மேற்கொள்ள மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, நம்பர் பிளேட்டை வேண்டுமென்றே மறைத்து சுங்கக் கட்டணத்தைத் தவிர்க்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், அந்த வாகனங்களுக்கு வழக்கமான கட்டணத்தை விட 4 முதல் 8 மடங்கு வரை அதிக கட்டணம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை சுங்கக் கட்டண முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்படுகிறது.
ஏஐ மூலம் கண்காணிப்பு
இந்த முறைகேடுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் பதிவாகும் வாகனப் புகைப்படங்கள் மற்றும் அதன் விவரங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து, நம்பர் பிளேட் மறைக்கப்பட்டுள்ளதா, மாற்றப்பட்டுள்ளதா அல்லது வாசிக்க முடியாத நிலையில் உள்ளதா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பு அடுத்த சில மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லும் வாகனங்களை அடையாளம் கண்டு, அதன் உரிமையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க முடியும்.
வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றுதல் அல்லது நம்பர் பிளேட்டில் முறைகேடு செய்வது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, முதல் முறை இத்தகைய விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
தற்போது கொண்டுவரப்படவுள்ள புதிய விதிகளின்படி, இந்த அபராதத்துடன் சுங்கக் கட்டணத்தை 4 முதல் 8 மடங்கு வரை கூடுதலாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில போக்குவரத்துத் துறையினர் நம்பர் பிளேட் தொடர்பான அபராதங்களை வசூலிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கூடுதல் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கவும் அதிகாரம் பெற உள்ளன.
கூடுதல் கண்காணிப்பு நடைமுறை
டெல்லியில் உள்ள முண்ட்கா சுங்கச்சாவடியில் தடுப்புகள் இல்லாத சுங்கக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நம்பர் பிளேட் முறைகேடுகள் தொடர்பான பிரச்சினைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வாகனப் பதிவு எண்களை மறைத்து சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்பவர்களைக் கண்காணிக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தடுப்புகள் இல்லாத சுங்கச்சாவடிகள் நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்படும் நிலையில், ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண்ணையும் துல்லியமாக அடையாளம் காண்பது அவசியமாகிறது. இதனால், வாகன உரிமையாளர்கள் தங்களது நம்பர் பிளேட்டுகளை முறையாகப் பொருத்தி, தெளிவாக வாசிக்கக்கூடிய வகையில் வைத்திருப்பது இனி மிகவும் முக்கியமாகும்.
Source: Timesofindia


Click it and Unblock the Notifications


