போக்குவரத்து விதி மீறும் கார், பைக்குகளுக்கு கூடுதல் காப்பீட்டு கட்டணம்... புதிய விதிகள் வருகிறது?
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு இனி காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கான புதிய விதிமுறைகளை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை வாகனக் காப்பீடு வாங்கும்போது வாகனத்தின் வகை, வயது, பயன்பாடு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், வாகனப் பெருக்கம் அதிகரித்து வருவதற்கு ஏற்றவாறு போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், ஏராளமான விபத்துக்களும் நடைபெற வழிவகுக்கிறது. இதனை கருத்தில்கொண்டு போக்குவரத்து விதிமீறல்களையும் வாகன காப்பீட்டில் கணக்கில் கொண்டு காப்பீட்டு பிரிமீயம் நிர்ணயிப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் வாகனக் காப்பீட்டு நடைமுறையை மாற்றியமைப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுபவர்களுக்கும், அடிக்கடி விதிமீறல் செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான காப்பீட்டு கட்டணம் வசூலிப்பது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஓட்டுனர்களின் நடத்தை அடிப்படையில் காப்பீட்டு கட்டணத்தை நிர்ணயிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், கடந்த ஓராண்டில் வாகன உரிமையாளருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் காப்பீட்டு பிரீமியத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னல் விதிமீறல் உள்ளிட்ட குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கும் புள்ளிகள் கணக்கிடப்பட்டு வாகன காப்பீடு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.
தொடர்ந்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அதிக காப்பீட்டு கட்டணம் வசூலிப்பதன் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் ஓட்டுனர்களுக்கு குறைந்த கட்டணத்தில் காப்பீடு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனக் காப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் நடைமுறைக்கு மாற்றாக, நீண்ட காலத்திற்கு ஒரே முறை பிரீமியம் செலுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்படி, கார்களுக்கு நான்கு ஆண்டுகள் வரையிலும், இருசக்கர வாகனங்களுக்கு ஆறு ஆண்டுகள் வரையிலும் ஒரே பிரீமியம் செலுத்தி காப்பீடு பெறும் வாய்ப்பும் உருவாக்கப்படும் என தெரிகிறது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆண்டுதோறும் காப்பீட்டை புதுப்பிக்க மறந்து விடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, காப்பீடு காலாவதியான பிறகும் வாகனத்தைப் பயன்படுத்தும் அபாயம் குறையும். நீண்ட கால காப்பீட்டுக்கான மொத்த செலவு, அதில் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் பிரீமியம் கணக்கீட்டு முறை குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனக் காப்பீடு இல்லாதவர்களை காப்பீடு பெற வைப்பதற்காக, 'காப்பீடு இல்லை என்றால் எரிபொருள் இல்லை' (No Insurance, No Fuel) என்ற திட்டத்தையும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 5 பெட்ரோல் பங்குகளில் சோதனைத் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கிறது. வாகனப் பதிவு எண்ணை அடையாளம் காணும் கேமராக்கள் மூலம் காப்பீட்டு நிலையைச் சரிபார்க்கும் வழிமுறையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
நாட்டில் தற்போது இயங்கும் வாகனங்களில் 81 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 25 கோடி வாகனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் காப்பீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. கார்கள் பிரிவில் 88 சதவீத வாகனங்கள் காப்பீடு பெற்றுள்ளன. இருசக்கர வாகனங்களில் இந்த எண்ணிக்கை 80 சதவீதமாக உள்ளது. மூன்று சக்கர வாகனங்களில் காப்பீடு பெற்றுள்ள வாகனங்களின் விகிதம் மிகவும் குறைவாக, 57 சதவீதமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காப்பீட்டு பிரீமியத்தின் அடிப்படை கட்டணங்களை சில வாகனப் பிரிவுகளுக்கு மாற்றியமைப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. குறிப்பாக மின்சார வாகனங்கள் (EV) உள்ளிட்ட குறிப்பிட்ட வாகன வகைகளுக்கான காப்பீட்டு கட்டண அமைப்பை மறுபரிசீலனை செய்யும் திட்டம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் மின்சார கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் காப்பீட்டு செலவிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், வாகன உரிமையாளர்கள் காப்பீட்டை வாங்குவது மட்டுமின்றி, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அடிக்கடி விதிமீறல் செய்பவர்களுக்கு காப்பீட்டு செலவு அதிகரிக்கும். நீண்ட கால காப்பீடு வசதியை வழங்கினாலும், ஒரே நேரத்தில் அதிக தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது பரிசீலனை நிலையில் இருப்பதால், அரசு வெளியிடும் இறுதி அறிவிப்புக்குப் பிறகே முழுமையான விபரங்கள் தெரியவரும்.
Source: Timesofindia


Click it and Unblock the Notifications


