டேஷ்போர்டுக்குள் மடங்கும் ஸ்டீயரிங் வீல், 1,630 கிமீ ரேஞ்ச்... புதிய பிஒய்டி கார் அறிமுகம்!
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய மின்சார மற்றும் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்துவதில் சீன நிறுவனங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது BYD நிறுவனத்தின் புதிய எஸ்யூவி வேற லெவல் அம்சங்கள் மற்றும் ரேஞ்ச் கொண்டதாக உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
BYD நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் Fang Cheng Bao என்ற பிராண்டில் இந்த புதிய எஸ்யூவி Ti 9 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த புதிய எஸ்யூவியில் டிரைவர் பயன்படுத்தும் ஸ்டீயரிங் வீலை அப்படியே டேஷ்போர்டுக்குள் மடக்கும் வகையில் வசதி வழங்கப்பட்டுள்ளது. காரை நிறுத்திய பிறகு கேபினுக்குள் கூடுதல் இடத்தை உருவாக்கி ஓய்வெடுக்க உதவும் இந்த வசதி இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், நீண்ட பயணங்களுக்கு ஏற்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஸ்டீயரிங் வீல்
இந்த காரில் வழங்கப்பட்டுள்ள ஸ்டீயரிங் வீல் சாதாரணமாக இயக்கும்போது வழக்கமான வடிவத்தில் இருக்கும். காரை நிறுத்தியதும், ஓட்டுனர் இருக்கையில் ஓய்வெடுக்க விரும்பினால், ஸ்டீயரிங் வீலை 180 டிகிரி வரை மடக்கி டேஷ்போர்டுக்குள் மடக்கி வைத்து மூடிவிடலாம். வெறும் 10 வினாடிகளில் இந்த ஸ்டீயரிங் வீல் மடக்கும் நடைமுறைக்கு தேவைப்படும்.
இதற்காக மின்னணு முறையில் ஸ்டீயரிங் இயக்கும் (Steer-by-wire) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீல் மடங்கியதும் அதன் இடத்தில் சிறிய மேசை போன்ற அமைப்பை பயன்படுத்த முடியும். லேப்டாப் பயன்படுத்துவது, உணவு சாப்பிடுவது அல்லது ஓய்வெடுப்பது போன்ற தேவைகளுக்கு இந்த இடம் உதவும். இந்த வசதி கார் நிறுத்தப்பட்டிருக்கும்போது மட்டுமே செயல்படும்.

கேபின் வசதிகள்
ஸ்டீயரிங் வீல் மடங்கிய பிறகு ஓட்டுனர் இருக்கையை அதிகபட்சம் 165 டிகிரி வரை சாய்த்துக்கொள்ள முடியும். இதனால் நீண்ட தூரப் பயணங்களின்போது சார்ஜிங் அல்லது ஓய்வு இடைவெளிகளில் ஓட்டுனர் சற்று வசதியாக அமர்ந்து ஓய்வெடுக்கலாம். இந்த அமைப்பில் கேபின் இடவசதியை சிறப்பாக பயன்படுத்தும் நோக்கம் முக்கியமாக உள்ளது.
இந்த எஸ்யூவியில் ஆறு பேர் பயணிக்கும் வகையில் 2+2+2 இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் தனித்தனி சாய்வு மற்றும் ஓய்வுக்கான இருக்கைகள் உள்ளன. மூன்று வரிசைகளிலும் இருக்கைகளுக்கு வெப்பமூட்டும், குளிரூட்டும் மற்றும் மசாஜ் வசதிகள் வழங்கப்படுவது இதன் சொகுசு அம்சங்களை மேலும் அதிகரிக்கிறது.

கூடுதல் வசதிகள்
கேபினில் 30 அங்குல அகலமான பிரதான திரை, பின்புற பயணிகளுக்காக மேற்கூரையில் 21.4 அங்குல திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. வயர்லெஸ் சார்ஜிங், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி, பின்புற பயணிகளுக்கான மேசைகள், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
வெளிப்புறத்தில் பெரிய அளவிலான பெட்டி போன்ற வடிவமைப்பு, முன்புறத்தில் தொடர்ச்சியான ஒளி அமைப்பு மற்றும் பின்புறத்தில் செங்குத்தான விளக்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 5,270 மிமீ நீளம், 1,999 மிமீ அகலம் மற்றும் 3,130 மிமீ வீல்பேஸ் கொண்ட இந்த எஸ்யூவி, பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற இடவசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் எஞ்சின்
BYD Ti 9 காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு மின்மோட்டார்கள் இணைந்து செயல்படுகின்றன. இவை மொத்தமாக 400 கிலோவாட் திறனை வழங்குகின்றன. இதன் அதிகபட்ச ஆற்றல் சுமார் 536 எச்பி ஆகும். இந்த எஸ்யூவி 0 முதல் 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காரில் 66.48 kWh திறன் கொண்ட Blade 2.0 பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது. சீன CLTC சோதனை முறையின்படி முழுமையான மின்சாரத்தில் 400 கிமீ வரை செல்லலாம். பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டையும் பயன்படுத்தும்போது மொத்தமாக 1,630 கிமீ வரை பயணிக்கலாம் என நிறுவனம் கூறுகிறது. அதிவேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் 10 முதல் 97 சதவீதம் சார்ஜ் செய்ய 9 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் வேரியண்ட்டுகள்
சீனாவில் BYD Fang Cheng Bao Ti 9 எஸ்யூவி மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 2,79,900 யுவான் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் மட்டுமே மடங்கும் ஸ்டீயரிங் வீல் வசதி வழங்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள், அதிக இடவசதி மற்றும் ஹைபிரிட் செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications



