புதிய ஹோண்டா அவான்சியர் அறிமுகம்! ஹைப்ரிட் நுட்பத்துடன் 7 சீட்டர் மாடல்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஹோண்டா அவான்சியர் (Avancier) 7 சீட்டர் எஸ்யூவி உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்று வரிசை இருக்கைகள், புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பம், மேம்பட்ட ஓட்டுதல் வசதிகள் எனப் பல அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிய சந்தைகளில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ள இந்த எஸ்யூவி, ஹோண்டாவின் எதிர்கால கார்களுக்கான புதிய தொழில்நுட்பங்களையும் வெளிப்படுத்துகிறது.

ஹோண்டாவின் அடுத்த தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் மாடலாகவும், நிறுவனத்தின் புதிய 'H' லோகோவைப் பெறும் முதல் ஹைப்ரிட் காராகவும் இந்த புதிய அவான்சியர் பெருமை பெறும். மேலும், புதிய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், நீண்ட தூரப் பயணங்களை வசதியாக மேற்கொள்ளும் வகையில் 'Grand Journey' என்ற கருத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பப் பயணங்களுக்கு ஏற்ற சொகுசு எஸ்யூவி அனுபவத்தை வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

Honda Avanciar

வெளிப்புற வடிவமைப்பு

புதிய அவான்சியர் காரின் முன்பக்கத்தில் அகலமான கிரில் அமைப்பு, மெல்லிய எல்இடி விளக்குகள் மற்றும் புதிய ஹோண்டா லோகோ இடம்பெற்றுள்ளன. காரின் பக்கவாட்டில் எளிமையான பாடி வடிவமைப்பு, மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகள் மற்றும் பெரிய ஜன்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற வடிவமைப்பும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த எஸ்யூவியில் கதவு கைப்பிடிகள் காரின் உடலுடன் இணைந்திருப்பது, பின்புற வைப்பர் மறைக்கப்பட்ட வடிவில் அமைந்திருப்பது உள்ளிட்ட அம்சங்கள் அதன் நவீன தோற்றத்தை மேம்படுத்துகின்றன. வழக்கமான எஸ்யூவி வடிவமைப்புடன் எதிர்கால கார்களை நினைவுபடுத்தும் சில அம்சங்களையும் இணைத்து ஹோண்டா இந்த காரை உருவாக்கியுள்ளது.

Honda Avanciar

உட்புற வசதிகள்

அவான்சியர் காரின் உட்புறம் பயணிகளுக்கு அதிக இடவசதியையும், சொகுசான பயண அனுபவத்தையும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பொத்தான்கள் கொண்ட டேஷ்போர்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன. சென்டர் கன்சோல் இடவசதியை அதிகரிக்க கியர் மாற்றும் அமைப்பு ஸ்டீயரிங் அருகே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வரிசையில் தனித்தனி சொகுசு இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளில் ஹீட்டிங் மற்றும் வென்டிலேஷன் வசதிகள் இடம்பெறுகின்றன. மேலும், பனோரமிக் சன்ரூஃப் மூன்றாவது வரிசை வரை நீளமாக அமைந்திருப்பதால், கேபினுக்குள் வெளிச்சமும் காற்றோட்டமான உணர்வும் கிடைக்கும். மூன்றாவது வரிசையில் ஏறி இறங்குவதையும் எளிதாக்கும் வகையில் கதவு மற்றும் இருக்கை அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

Also Read

ஹைப்ரிட் தொழில்நுட்பம்

புதிய அவான்சியர் காரில் ஹோண்டாவின் அடுத்த தலைமுறை இரண்டு மோட்டார் ஹைப்ரிட் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டார்கள் இணைந்து செயல்படும் இந்த அமைப்பு, எரிபொருள் சிக்கனத்தையும் மென்மையான ஓட்டுதல் அனுபவத்தையும் மேம்படுத்தும் என்று நம்பலாம். இருப்பினும், எஞ்சின் திறன் மற்றும் மைலேஜ் விபரங்களை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

இதில் DualPower eAWD எனப்படும் மின்சார ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பம் இடம்பெறுகிறது. முன் மற்றும் பின்புற சக்கரங்களுக்கு தனித்தனி மின்சார மோட்டார்கள் மூலம் சக்தி வழங்கப்படுவதால், சாலை நிலைமைகளுக்கு ஏற்ப காரின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இதனுடன் Motion Management System தொழில்நுட்பம் பிரேக்கிங், வேகம் மற்றும் வாகனத்தின் நிலைத்தன்மையை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் (BOSE) ஆடியோ சிஸ்டம், Dolby Atmos வசதி, வாய்ஸ் கமாண்ட், ஸ்மார்ட்போன் மூலம் காரின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறத்தை கண்காணிக்கும் வசதிகள் ஆகியவை இடம்பெறுகின்றன. ஓடிஏ (OTA) அப்டேட் மூலம் காரின் மென்பொருளையும் எதிர்காலத்தில் மேம்படுத்த முடியும்.

Also Read

இந்தியாவில் அறிமுகமாகுமா?

புதிய ஹோண்டா அவான்சியர் முதற்கட்டமாக ஆசிய சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் இதன் முக்கிய சந்தைகளாக இருக்கும். இந்த கார் 6 இருக்கைகள் கொண்ட 2+2+2 அமைப்பில் வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அறிமுகம் குறித்து ஹோண்டா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்திய வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று நம்பலாம்.

Article Published On: Saturday, November 21, 2026, 11:27 [IST]
English summary
Honda avancier 7 seater suv hybrid revealed
மேலும்... #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out