டோல் கட்டணம் செலுத்தாமல் டிமிக்கி கொடுக்கும் கார்கள்.. தடுப்புகள் இல்லாத டோல் பிளாசாவில் புதிய மோசடி
இந்திய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிக்கும் முறை வேகமாக மாறி வருகிறது. முன்பு டோல் பிளாசாக்களில் வாகனங்கள் வரிசையாக நின்று கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. FASTag அறிமுகமான பிறகு இந்தக் காத்திருப்பு குறைந்தது. தற்போது தடுப்புகள் இல்லாமல் வாகனங்கள் வேகமாகச் செல்லும் Multi-Lane Free Flow (MLFF) முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த புதிய தொழில்நுட்பம் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. ஆனால், வாகனங்கள் தடுப்புகள் இல்லாமல் கடந்து செல்லும் இந்த அமைப்பில் சில எதிர்பாராத பிரச்சினைகளும் எழுகின்றன. குறிப்பாக, கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பது முக்கிய சவாலாக மாறியுள்ளது.

MLFF அமைப்பில் சாலையின் மேல்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராக்கள் வாகனத்தின் பதிவு எண்ணை (Number Plate) படம் பிடிக்கின்றன. அதே நேரத்தில் FASTag தகவல்களும் படிக்கப்படுகின்றன. இவ்விரு தகவல்களும் சரியாகப் பொருந்தினால், வாகனத்தின் FASTag கணக்கிலிருந்து டோல் கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.
ஆனால் சில உரிமையாளர்கள் தங்களது வாகனங்களின் நம்பர் பிளேட்டை மறைத்தும், FASTag தெரியாதபடியும் செல்வது தெரிய வந்துள்ளது. மேலும், போலி பதிவு எண்களைப் பயன்படுத்துவதும் அல்லது வேறு வாகனத்தின் நம்பர் பிளேட்டை போலியாகப் பயன்படுத்துதல் போன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவதும் புதிய சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கேமராக்களால் அந்த வாகனத்தை அடையாளம் காண முடியாமல் போகிறது. இத்தகைய வாகனங்களே 'Ghost Cars' என அழைக்கப்படுகின்றன.
இந்த பிரச்சினை தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஷாஜஹான்பூர் டோல் பிளாசாவில் மட்டும் 2.60 லட்சம் வாகனங்கள் அடையாளம் காணப்படாமல் டோல் பிளாஸை கடந்து சென்றுள்ளன. ஜூலை முதல் அக்டோபர் 21 வரை மனோஹர்புரா டோல் பிளாசாவில் 99,500-க்கும் அதிகமான வாகனங்கள் அடையாளம் காணப்படவில்லை.
டெல்லியில் உள்ள முண்ட்கா-பக்கர்வாலா டோல் பிளாசாவிலும் சுமார் 2 சதவீத வாகனங்கள் அடையாளம் காணப்படவில்லை. மனோஹர்புராவில் இந்த எண்ணிக்கை சுமார் 3 சதவீதமாக உள்ளது. இதனால் டோல் கட்டணம் வசூலிக்க முடியாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், வாகனங்களின் பயண விபரங்களைக் கண்காணிப்பதிலும் சிக்கல் உருவாகிறது.
இந்த வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் செல்வதால் ஏற்படும் வருவாய் இழப்பை விட, அவற்றின் அடையாளம் தெரியாத நிலைதான் அதிகாரிகளுக்கு கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல், சட்டவிரோத மணல் விற்பனை மற்றும் பிற குற்றச்செயல்களில் இத்தகைய வாகனங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
மேலும், FASTag தகவல்கள் சரக்கு போக்குவரத்து தொடர்பான இ-வே பில் (E-Way Bill) அமைப்புடன் தொடர்புடையவை என்பதால், அடையாளம் தெரியாத வாகனங்கள் சரக்கு நகர்வைக் கண்காணிப்பதிலும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பைத் தடுப்பதிலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதனால் இந்த விவகாரம் தற்போது டோல் நிர்வாகத்தைத் தாண்டி பாதுகாப்பு மற்றும் வரி கண்காணிப்பு பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த முறைகேடுகளைத் தடுக்க, டோல் கட்டணத்தை விட இருமடங்கு அதிக அபராதம் விதிப்பது மற்றும் விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான புதிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத வாகனங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்த NHAI திட்டமிட்டு வருகிறது. வாகனத்தின் நிறம், மாடல், பதிவு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை VAHAN தரவுத்தளம், பழைய டோல் பிளாசா பதிவுகள் மற்றும் FASTag பரிவர்த்தனைகளுடன் ஒப்பிட்டு வாகனங்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் MLFF தொழில்நுட்பம் தற்போது பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பல டோல் பிளாசாக்களில் இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மேலும் 10 டோல் பிளாசாக்களில் அமைப்பை நிறுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக 104 டோல் பிளாசாக்களுக்கான ஒப்பந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் பரனூர் மற்றும் நெமிலி சுங்கச்சாவடிகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
தடுப்புகள் இல்லாத டோல் பிளாசாக்கள் பயண நேரத்தைக் குறைத்து, எரிபொருள் சேமிப்புக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் உதவக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வலுவான கண்காணிப்பு அவசியம். இல்லையெனில், எதிர்காலத்தில் இந்த வசதியே புதிய சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.


Click it and Unblock the Notifications


