காத்திருப்பு முடிந்தது! ஹோண்டாவின் முதல் EV கார் பெயர் அறிவிப்பு.. அறிமுக தேதி இதுதான்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளதுடன், வரும் டிசம்பர் 2ந் தேதி இந்தியாவில் வைத்து உலக அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள இந்த கார், உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேட் இன் இந்தியா என்ற பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் கார் ஆல்ஃபா என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஆல்ஃபா என்பது கிரேக்க எழுத்துக்களின் முதல் எழுத்து என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை மையமாக கொண்டு இந்த பெயரை ஹோண்டா தேர்வு செய்துள்ளது. புதிய தொழில்நுட்பம், எதிர்கால வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட ஓட்டுதல் அனுபவத்தை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மின்சார கார் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆல்ஃபா எலெக்ட்ரிக் கார் முதன்முதலில் கடந்த 2025ம் ஆண்டு ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் கான்செப்ட் மாடலாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போதே அதன் வடிவமைப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் மாதம் நடக்கும் உலகளாவிய அறிமுகத்தை வாகன ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்த புதிய எஸ்யூவி நகர்ப்புறச் சாலைகளுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றாடப் பயணம் முதல் குடும்பத்துடன் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்கள் வரை பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இதன் வடிவமைப்பு அமைந்திருக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.
மேட் இன் இந்தியா கார்
ஹோண்டா ஆல்ஃபா எலெக்ட்ரிக் கார் முதன்முதலில் இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் ஹோண்டா கொண்டுள்ள ஆர்வம் வெளிப்படுகிறது. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் நிறுவனத்தின் திட்டத்திலும் இந்த கார் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புதிய லோகோ அறிமுகம்
மேலும், இந்த கார் குறித்த அறிவிப்புடன் சேர்த்து மற்றொரு முக்கிய விஷயமாக ஹோண்டாவின் புதிய H லோகோவும் இந்த காரில் அறிமுகமாக உள்ளது. உலகளவில் தனது கார் தயாரிப்புகளுக்காக புதுப்பிக்கப்பட்ட இந்த அடையாளத்தை ஹோண்டா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பிலும் இந்த புதிய லோகோ முதல்முறையாக இடம்பெற்றுள்ளது.
புதிய அடையாளம்
1963ஆம் ஆண்டு முதல் ஹோண்டா கார்களின் அடையாளமாக H லோகோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலப்போக்கில் பல்வேறு வடிவ மாற்றங்களைச் சந்தித்த இந்த அடையாளம், தற்போது நிறுவனத்தின் புதிய வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா ஆல்ஃபா கார்தான் இந்த புதிய லோகோவைப் பெறும் முதல் இந்திய மாடலாக இருக்கும்.
தற்போது ஹோண்டா இந்தியாவில் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் மின்சார எஸ்யூவி அறிமுகமாவது நிறுவனத்தின் தயாரிப்பு விரிவாக்கத்தில் புதிய அத்தியாயமாக அமையும். குறிப்பாக மின்சார வாகனங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது புதிய தேர்வாக அமைய வாய்ப்புள்ளது.
ஹோண்டா ஆல்ஃபா என்ற காரின் பெயர் அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. அதன் பேட்டரி திறன், மின்சார மோட்டார் செயல்திறன், ஒருமுறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம், விலை மற்றும் வசதிகள் குறித்த தகவல்கள் டிசம்பர் 2ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாராகும் இந்த புதிய எஸ்யூவி, ஹோண்டாவின் மின்சார வாகன எதிர்காலத்திற்கு முக்கியமான தொடக்கமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


