பண்டிகை காலத்தில் 5 லட்சத்தை கடந்த எலெக்ட்ரிக் வாகன விற்பனை!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் வாகனங்களை வாங்கும் மக்கள் மத்தியில் மின்சார வாகனங்களும் முக்கிய தேர்வாக மாறி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்திய வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள விற்பனை அறிக்கையின்படி, இந்த ஆண்டு 42 நாட்கள் நடைபெற்ற பண்டிகை காலத்தில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 5,09,667 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே பண்டிகை காலத்தில் 3,33,935 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு விற்பனை 52.62 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரே பண்டிகை காலத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ather Konarc EV

எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் இருசக்கர வாகனங்கள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. 42 நாட்களில் மொத்தம் 3,30,846 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,05,373 வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 61.10 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

Also Read

இந்த வளர்ச்சிக்கு குறைந்த பராமரிப்பு செலவு, பெட்ரோல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு, தினசரி அலுவலகப் பயணங்களுக்கு ஏற்ற பயன்பாடு உள்ளிட்ட காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், பல நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருவதுடன், பேட்டரி திறன், ரேஞ்ச், சார்ஜிங் வசதி போன்றவை மேம்பட்டு வருகின்றன.

Mahindra Treo EV

இந்தியாவில் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் சேவைகளில் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் கடைசி கட்ட டெலிவரி சேவைகள், ஆட்டோ ரிக்‌ஷா பயன்பாடு மற்றும் சிறிய அளவிலான சரக்கு போக்குவரத்திற்கு இவ்வகை வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

Also Read

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மொத்தம் 1,20,330 எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 95,920 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 25.45 சதவீத வளர்ச்சி கிடைத்துள்ளது. வர்த்தக பயன்பாட்டில் எரிபொருள் செலவை குறைக்க விரும்புவோருக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறந்த மாற்றாக அமைந்து வருவது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Tata Seirra EV

எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் இந்த பண்டிகை காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 42 நாட்களில் மொத்தம் 52,104 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30,133 கார்கள் விற்பனையாகியிருந்தன. இதன் மூலம் எலெக்ட்ரிக் கார் விற்பனை 72.91 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அறிமுகம், அதிக ரேஞ்ச் வழங்கும் பேட்டரிகள், சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகரித்து வருவது மற்றும் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வம் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு உதவியுள்ளன. குறிப்பாக குடும்ப பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த ஆண்டு எலெக்ட்ரிக் வர்த்தக வாகனங்கள் விற்பனையானது மற்ற வாகனப் பிரிவுகளை விட அதிக வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் 6,387 எலெக்ட்ரிக் வர்த்தக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 2,509 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 154.56 சதவீத வளர்ச்சி கிடைத்துள்ளது.

இந்த வளர்ச்சி சிறிய எண்ணிக்கையிலான வாகனங்களில் தொடங்கியிருந்தாலும், வர்த்தக நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தங்களுடைய போக்குவரத்து நடவடிக்கைகளில் பயன்படுத்த ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக டெலிவரி, நகர்ப்புற சரக்கு போக்குவரத்து மற்றும் நிறுவனங்களின் வாகன பயன்பாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த 42 நாள் பண்டிகை கால விற்பனை புள்ளிவிவரங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருவதை தெளிவாக காட்டுகின்றன. இருசக்கர வாகனங்கள் விற்பனை எண்ணிக்கையில் முன்னிலை வகித்தாலும், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களிலும் வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

Article Published On: Thursday, November 26, 2026, 9:44 [IST]
English summary
India electric vehicle sales festive season 2026 5 lakh units 52 percent growth
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X