ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் எஸ்யூவியின் முதல் பதிப்புக்கு நவ.28 முதல் விண்ணப்பம்: 500 யூனிட்டுகள் மட்டுமே!
ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் (JSW Motors) நிறுவனம் இந்தியாவின் புதிய கார் பிராண்டாக களமிறங்க தயாராகி வருகிறது. தனது முதல் எஸ்யூவி மாடலான காம்பேட் (Combat) அறிமுகத்திற்கு முன்னதாக, Pioneers 500 என்ற பிரத்யேக திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆரம்பகட்டத்தில் காரை வாங்கும் 500 வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவம் வழங்கப்பட உள்ளது.
மொத்தம் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கவுள்ள இந்த சிறப்பு பதிப்பிற்கான விண்ணப்பங்கள் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகின்றன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள காம்பேட் எஸ்யூவியின் அறிமுகத்திற்கு முன்பாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

காம்பேட் எஸ்யூவியின் இந்த சிறப்பு பதிப்பில் ஒவ்வொரு காருக்கும் பிரத்யேகமான வரிசை எண் வழங்கப்பட உள்ளது. காரின் உட்புறத்தில் உரிமையாளரின் பெயர் மற்றும் அந்த கார் 500 கார்களில் எந்த எண்ணில் இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிடும் அடையாளம் இடம்பெறும். இதனால் வழக்கமான காரை வாங்குவதைவிட இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
Pioneers 500 திட்டத்தில் காரை வாங்குபவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சில சிறப்பு சலுகைகளும் இந்த 500 உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. மேலும், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு, உரிமையாளர்களுக்கான தனி குழுவில் இடம்பெறும் வாய்ப்பு போன்றவையும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் முதல் கார் மாடலாக வர இருக்கும் ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் எஸ்யூவிக்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.வரும் டிசம்பர் 3ந் தேதி இந்த புதிய கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட டீசர் படங்களின்படி, வழக்கமான நகர்ப்புற எஸ்யூவி தோற்றத்தை விட, காம்பேட் வலுவான ஆஃப்-ரோடு வாகன வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
காம்பேட் காரின் முன்பகுதியில் செவ்வக வடிவிலான விளக்குகள், அகலமான கிரில், உயரமான பானெட் மற்றும் வலுவான பம்பர் ஆகியவை இடம்பெறுகின்றன. பக்கவாட்டில் சதுர வடிவ வீல் ஆர்ச்சுகள், உயரமான கூரை மற்றும் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டெயில் கேட் மீது ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருப்பது இதன் ஆஃப்-ரோடு தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் காரில் பிளக்-இன் ஹைபிரிட் (PHEV) தொழில்நுட்பம் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெட்ரோல் எஞ்சினுடன் மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி இணைந்து செயல்படும். இதன் மூலம் மின்சாரத்தில் மட்டும் பயணிக்கும் வாய்ப்பும், பேட்டரி சார்ஜ் குறைந்தபின் எஞ்சின் உதவியுடன் பயணிக்கும் வசதியும் கிடைக்கும்.
இந்தியாவிற்காக உருவாக்கப்படும் காம்பேட் எஸ்யூவி, சீனாவின் ஜேடூர் டி2 (Jetour T2) காரை அடிப்படையாகக் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தனது புதிய கார்களை உற்பத்தி செய்வதற்காக மகாராஷ்டிர மாநிலம், சத்திரபதி சம்பாஜிநகர் பகுதியில் புதிய கார் ஆலையை ஜேஎஸ்டபிள்யூ அமைத்துள்ளது இங்கு அனைத்து ஜேஎஸ்டபிள்யூ கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
காம்பேட் எஸ்யூவி ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸின் முதல் தயாரிப்பாக வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் 15 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முழுமையான மின்சார கார்கள், ஹைபிரிட், பிளக்-இன் ஹைபிரிட் மற்றும் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் வகை வாகனங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
புதிய கார்களை விற்பனை செய்வதற்காக ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் கார்களுக்காக தனி டீலர் நெட்வொர்க்கையும் உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 50 டீலர்களை தொடங்கவும், பின்னர் நாடு முழுவதும் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் வலுவான இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது.


Click it and Unblock the Notifications


