JSW Motors புதிய லோகோ வெளியீடு.. முதல் காராக வரும் காம்பேக்ட் எஸ்யூவி!
இந்திய கார் சந்தையில் புதிய நிறுவனமாக கால் பதிக்கத் தயாராகி வரும் JSW Motors, தனது அதிகாரப்பூர்வ பிராண்டு அடையாளம் மற்றும் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 3ம் தேதி தனது பிராண்டு மற்றும் முதல் காரை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்கு முன்னதாக லோகோ வெளியீடு மூலம் தனது வருகையை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய லோகோ இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நீள்வட்ட அமைப்புக்குள் மேல்நோக்கிய கூம்பு வடிவத்துடன் உள்ளது. இந்த புதிய அடையாளத்துடன் இந்திய கார் சந்தையில் தனித்துவமான இடத்தைப் பிடிக்க ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய லோகோவில் இரண்டு மையப் புள்ளிகளைச் சுற்றிய வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. இது வெவ்வேறு அடையாளங்கள், சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஒன்றிணைந்து ஒரே இலக்கை நோக்கிச் செல்வதை உணர்த்துகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையும், அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வும் இந்த லோகோவின் தாத்பரியங்களாக அமைந்துள்ளன.
இந்த லோகோவின் வடிவமைப்பு சக்கரம் சுழல்வதைப் போன்ற இயக்கத்தையும், மேல்நோக்கி வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம், மனிதர்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பை இது குறிக்கிறது. JSW குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கூறுகையில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வாகன தொழில்நுட்பத்தை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் தனது முதல் காராக Combat PHEV எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சர்வதேச சந்தையில் விற்பனையாகும் சீனாவின் செரி நிறுவனத்தின் Jetour T2 எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்டி வடிவிலான முரட்டுத்தனமான தோற்றம், உயரமான காரின் அமைப்பு மற்றும் ஆஃப்-ரோடு வாகனத்தை நினைவுபடுத்தும் வடிவமைப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 18.4 kWh பேட்டரி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மாடலின் அடிப்படையில், இந்த ஹைபிரிட் அமைப்பு சுமார் 360 எச்பி பவரையும், 610 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் PHEV காரில் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பயன்படுத்தி சுமார் 90 கிமீ வரை மின்சாரத்தில் மட்டும் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் மின்சாரத்தை இணைத்துப் பயன்படுத்தும்போது 1,100 கிலோமீட்டருக்கும் அதிகமான மொத்த பயண தூரத்தை வழங்கும் திறன் இருக்கும் என தெரிகிறது. இதனால் நகரப் பயணங்களுக்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்ற காராக இது அமைய வாய்ப்புள்ளது.
இந்த எஸ்யூவியில் பெரிய டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம்பெறலாம். சர்வதேச மாடலில் உள்ள வசதிகளை இந்திய பதிப்பிலும் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காம்பேட் PHEV காருடன் மட்டும் நிறுத்தாமல், அடுத்த 12 மாதங்களில் மேலும் மூன்று எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் புதிய நிறுவனம் தனது ஆரம்பகட்டத்திலேயே நான்கு எஸ்யூவி மாடல்களைக் கொண்ட வரிசையை கட்ட உள்ளது.
JSW Motors தனது வாகனங்களை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் அமைக்கப்படும் புதிய உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. சொந்த பிராண்டுக்கான டீலர்கள் கட்டமைப்பின் மூலம் கார்களை விற்பனை செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் டிசம்பர் 3ம் தேதி காம்பேட் PHEV அறிமுகமாகும் நிலையில், இந்தியாவின் புதிய கார் நிறுவனமாக ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் எவ்வாறு போட்டியை எதிர்கொள்ளப் போகிறது என்பது ஆட்டோமொபைல் துறையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications


