ஜேஎஸ்டபிள்யூ ஜே5 கார் இந்தியாவில் சோதனை... புதிய ஸ்பை படங்கள் வெளியானது!
ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இந்திய கார் சந்தையில் தனது சொந்த கார் பிராண்டுடன் விரைவில் தடம் பதிக்க ஆயத்தமாகி வருகிறது. முதல் கார் மாடலாக காம்பேட் என்ற எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருக்கிறது. சீனாவை சேர்ந்த செரி மோட்டார் நிறுவனத்தின் கூட்டணியில் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் தனது சொந்த பிராண்டில் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
செரி பிராண்டின் ஜேடூர் டி2 என்ற கார் மாடலை முதலாவதாக களமிறக்க உள்ளது. வரும் டிசம்பர் 3ந் தேதி இந்த புதிய மாடல் சந்தைக்கு வர இருக்கிறது. அடுத்த ஓர் ஆண்டில் 15 கார் மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், செரி நிறுவனத்தின் ஜேக்கூ ஜே5 என்ற புதிய எஸ்யூவி மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய மாடல் தற்போது இந்திய மண்ணில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஜேக்கூ ஜே5 காரின் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் சோதனையில் வைத்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கார் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் எஸ்யூவியை போன்றே இந்த புதிய மாடலும் மிக கம்பீரமான மாடலாக இருக்கிறது. அழகிய எல்இடி ஹெட்லைட்டுகள், வரிசையாக உள்ள செங்குத்து அமைப்பில் பொருத்தப்பட்ட குரோம் சட்டங்களுடன் கூடிய பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, C வடிவிலான ஃபாக் லேம்ப்புகள், இரட்டை வண்ண அலாய் வீல்கள், கச்சிதமான எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்பாய்லர் உள்ளிட்டவை வசீகரமான தோற்றத்தை கொடுக்கின்றன.
வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் அதே ஜேக்கூ ஜே5 காரின் இன்டீரியர் தீம் இந்த காரிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. இதனால், 13.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
மேலும், ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இந்த கார் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது. அதன்படி, இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.83kWh பேட்டரி மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஹைப்ரிட் அமைப்பு மூலமாக இந்த ாகர் 224 எச்பி பவரையும், 275 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மேலும், முழுமையாக எரிபொருள் நிரப்பும் பட்சத்தில், 1,000 கிமீ ரேஞ்ச் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மண்ணில் தற்போது சோதனையின்போது படம்படிக்கப்பட்ட ஜேக்கூ ஜே5 அடிப்படையிலான ஜேஎஸ்டபிள்யூ எஸ்யூவியானது ஹைப்ரிட் பேட்ஜ் கொண்டதாக இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால், ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் இணையதளத்தில் எலெக்ட்ரிக் ஜே5 கார் மட்டும் பட்டியலில் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


