330 எச்பி பவருடன் கேடிஎம் எக்ஸ்-போ அரோ ஆஃப்ரோடு வாகனம்!

ஆஃப் ரோடு வாகனங்கள் என்றாலே முரட்டுத்தனமான தோற்றம், அதிக செயல்திறன் மற்றும் கடினமான நிலப்பரப்புகளையும் எளிதாகக் கடக்கும் திறன் ஆகியவை முக்கியமானதாக கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில், மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகில் பிரபலமாக உள்ள கேடிஎம் எக்ஸ்-போ நிறுவனம் தற்போது தனது முதல் ஆஃப் ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற அரோ (Arrow) என்ற வாகனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை இலகுவான ஸ்போர்ட்ஸ் கார்களை உருவாக்குவதில் கவனம் செலுத்திய இந்நிறுவனம், தற்போது ஆஃப் ரோடு வாகனப் பிரிவிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளது. டக்கார் ராலி வாகன பந்தய போட்டிகளின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வாகனம், அதன் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் மூலம் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

KTM X BOW Arrow

டக்கார் ராலி அனுபவம்

கேடிஎம் எக்ஸ்-போ அரோ திட்டத்தை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ராலி பந்தய வீரர் கில்லாம் டி மெவியஸ் (Guillaume de Mévius) முன்னெடுத்துள்ளார். கடந்த 2024 டக்கார் ராலி போட்டியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர். இவரது ஜி ராலி அணிதான் இந்த வாகனத்தின் உருவாக்கம் மற்றும் சோதனைகளில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

Also Read

இருக்கை வசதி

இது சைடு பை சைடு (Side-by-Side) ரக ஆஃப் ரோடு வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஓட்டுனர் மற்றும் பயணி இருவரும் அருகருகே அமர்ந்து பயணிக்க முடியும். கடினமான மலைப்பாதைகள், மணல் பகுதிகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் பயணிப்பதற்காக இதன் வடிவமைப்பு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

KTM X BOW Arrow

பவர்ஃபுல் வாகனம்

இந்த வாகனத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண மாடல் 280 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

இதன் பிளாக் லிமிடெட் எடிஷன் மாடல் 330 எச்பி பவரை வழங்குகிறது. சாதாரண மாடலின் எடை 999 கிலோவாகவும், லிமிடெட் எடிஷனின் எடை 1,100 கிலோவாகவும் உள்ளது. குறைவான எடை மற்றும் அதிக பவர் ஆகியவற்றின் கலவை, இதன் ஆஃப் ரோடு செயல்திறனுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

Also Read

சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷன்

இந்த வாகனத்தில் குரோமோலி ஸ்டீல் (Chromoly Steel) சேஸிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்கு சக்கரங்களிலும் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. கேடிஎம் நிறுவனம் 600 மிமீக்கும் அதிகமான சஸ்பென்ஷன் டிராவலை இலக்காகக் கொண்டுள்ளது. முன்புறம், பின்புறம் என இரண்டு லிமிடெட் ஸ்லிப் டிஃபரன்ஷியல்களும் உள்ளன.

முரட்டுத்தனமான தோற்றம்

கேடிஎம் எக்ஸ்-போ அரோ 3,700 மிமீ நீளமும், 1,950 மிமீ அகலமும், 1,800 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2,900 மிமீ நீளம் கொண்டது. தரைக்கும் வாகனத்திற்கும் இடையிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் உயரம் 430 மிமீ என்பதால், பெரிய தடைகளையும் கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் கூர்மையான வடிவிலான ஹெட்லைட்டுகள், ஆரஞ்சு நிற விளக்குகள், செவ்வக வடிவ கிரில் மற்றும் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 15 அங்குல சக்கரங்கள் மற்றும் ஆஃப் ரோடு டயர்கள் இதன் தோற்றத்தை மேலும் முரட்டுத்தனமாக மாற்றுகின்றன. கதவுகளில் அரோ பெயரும் இடம்பெற்றுள்ளது.

இன்டீரியர் வசதிகள்

இதன் கேபின் முழுமையாக மூடப்பட்ட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற கலவையில் அமைந்துள்ள இன்டீரியரில், சபெல்ட் (Sabelt) இருக்கைகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரையும் இடம்பெற்றுள்ளன.

பிளாக் லிமிடெட் எடிஷனில் கூடுதலாக ஏசி மற்றும் ஹைட்ராலிக் ஃப்ளை-ஆஃப் ஹேண்ட்பிரேக் வழங்கப்படுகிறது. குறிப்பாக, ராலி பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஹேண்ட்பிரேக் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சாகசப் பயணங்களின்போது பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கேபின் உருவாக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் முன்பதிவு

கேடிஎம் எக்ஸ்-போ அரோவின் ஆரம்ப விலை 59,800 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.56.04 லட்சம் ஆகும். இதன் பிளாக் லிமிடெட் எடிஷன் விலை 98,600 டாலர்கள் (சுமார் ரூ.92.4 லட்சம்). இந்த சிறப்பு பதிப்பு உலகளவில் 500 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்திய அறிமுகம்?

இந்த வாகனத்திற்கான முன்பதிவு வரும் 17ந் தேதி முதல் குறிப்பிட்ட நாடுகளில் தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி 2027 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Article Published On: Thursday, November 12, 2026, 11:51 [IST]
English summary
Ktm x bow arrow off roader 330hp engine price features
மேலும்... #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out