10 லட்சம் கார்களை ரயிலில் அனுப்பிய மாருதி சுஸுகி!
இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மாருதி சுஸுகி, ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலைகளில் இருந்து ரயில் மூலம் 10 லட்சம் வாகனங்களை அனுப்பி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. வழக்கமாக புதிய கார்கள் தொழிற்சாலையில் இருந்து டிரக்குகளில் ஏற்றப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
இந்த நிலையில், சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெருக்கடியை குறைத்து விரைவாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் நோக்கிலும் ரயில் மூலமாக கார்களை அனுப்பும் போக்குவரத்து முறையை மாருதி செய்து வருகிறது.

மாருதி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ள குஜராத்திலுள்ள ஹன்சல்பூர் மற்றும் ஹரியானாவிலுள்ள மானேசர் ஆகிய இரண்டு உற்பத்தி ஆலைகளில் இருந்தும் தற்போது ரயில் மூலமாக அனுப்புவதற்கான கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளன. தற்போது இந்த ஆலைகளில் இருந்து அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை கடந்துள்ளது.
குறிப்பாக, குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் மாருதி ஆலையில் இருந்து அதிக அளவில் புதிய கார்கள் ரயில் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இதுவரை 7.9 லட்சம் வாகனங்கள் ரயில் மூலம் சென்றுள்ளன. மறுபுறத்தில் மானேசர் ஆலையில் இருந்து 2.1 லட்சம் கார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
குஜராத்திலுள்ள மாருதி ஆலையில் ரயில் மூலமாக நேரடியாக அனுப்பும் வசதி 2023 மார்ச் மாதத்திலும், மானேசர் ஆலையில் இந்த வசதி 2025 ஜூன் மாதத்திலும் செயல்பாட்டுக்கு வந்தன. தற்போது 3.5 ஆண்டுகளில் இந்த ஆலைகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை மொத்தமாக 10 லட்சம் எண்ணிக்கையை எட்டியுள்ளன.

ஏற்கனவே ஆலைகளில் இருந்து டிரக்குகளில் ஏற்றி ரயில் யார்டுக்கு கார்களை கொண்டு செல்ல வேண்டி இருந்தது. ஆனால், தற்போது நேரடியாக ஆலை வளாகத்தில் இருந்து கார்களை ஏற்றும் கட்டமைப்பு வசதிகள், தண்டவாளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கால தாமதம், நடைமுறை சிக்கல்கள் குறைந்துள்ளன.
ஒரே நேரத்தில் பல கார்களை நீண்ட தூரத்திற்கு ரயிலில் கொண்டு செல்ல முடிவதால், சாலை போக்குவரத்தில் நெருக்கடியை குறைக்க முடியும். எரிபொருள் பயன்பாடு குறைவதுடன், சாலை வழியாக வாகனங்களை அனுப்புவதால் ஏற்படும் மாசு உமிழ்வும் குறைக்கவும் இது உதவுவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
கடந்த 20214-15 காலக்கட்டத்தில் ரயில் மூலமாக அனுப்பப்படும் கார்களின் எண்ணிக்கை மொத்த உற்பத்தியில் 5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2025-26ம் ஆண்டு காலக்கட்டத்தில் 26.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இதனை மேலும் அதிகரிக்க மாருதி திட்டமிட்டுள்ளது.
2030-31 நிதியாண்டுக்குள் ரயில் மூலம் அனுப்பப்படும் வாகனங்களின் பங்கை 35 சதவீதமாக உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக, குர்கான் அருகேயுள்ள கார்கோடா (Kharkhoda) உற்பத்தி ஆலையிலும் நேரடியாக ரயிலில் கார்களை ஏற்றுவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications


