மெர்சிடிஸ் பென்ஸ் புதிய தானியங்கி ஓட்டுனர் தொழில்நுட்பத்திற்கு ஜெர்மனியில் அனுமதி
சொகுசு கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ், மேம்பட்ட ஓட்டுனர் உதவித் தொழில்நுட்பத்தில் (Advanced Driver Assistance) புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜெர்மனியில் பொதுச் சாலைகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் வகையில் செயல்படும் ஓட்டுனர் உதவி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அந்நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது எதிர்கால கார் பயண முறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த அனுமதியின் மூலம், மேம்பட்ட தானியங்கி ஓட்டுனர் வசதிகளை பொதுச் சாலைகளில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. குறிப்பிட்ட நகரங்களில் முதற்கட்டமாக இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓட்டுனரின் கண்காணிப்புடன் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்பட உள்ளது.

இந்த புதிய வசதியை முதற்கட்டமாக ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் (Stuttgart), மூனிச் (Munich) நகரங்களில் அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஆரம்பகட்டமாக இந்த தொழில்நுட்பத்தை வழங்க பென்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொதுச் சாலைகளில் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளை நேரடியாக மதிப்பீடு செய்ய முடியும்.
ஆரம்பகட்ட பயன்பாட்டிற்குப் பிறகு, ஜெர்மனி முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டமும் நிறுவனத்திடம் உள்ளது. வரும் 2027ம் ஆண்டின் முதல் பாதியில் ஜெர்மனி முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆரம்பகட்ட அனுபவங்கள், சாலை நிலைமை, தொழில்நுட்ப செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாக்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாயிண்ட்-டு-பாயிண்ட் டிரைவிங் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நாம் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி காரின் ஓட்டுனர் உதவி அமைப்புகள் செயல்படுவதை குறிக்கிறது. சாதாரண அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் அல்லது லேன் கீப்பிங் வசதிகளைவிட இது மேம்பட்ட தொழில்நுட்பமாக அமையும். பயணத்தின் பல்வேறு கட்டங்களில் கார் ஓட்டுனருக்கு உதவக்கூடிய தொழில்நுட்பமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அமைப்புகளில் காரின் சென்சார்கள், கேமராக்கள் மற்றும் மென்பொருள் ஆகியவை சாலையின் சூழ்நிலைகளை கண்காணித்து, தேவையான ஓட்டுனர் உதவிகளை வழங்குகின்றன. இருப்பினும், இது முழுமையான தானியங்கி ஓட்டுனர் வசதி என்று இப்போதைக்கு கருத முடியாது. ஓட்டுனர் தொடர்ந்து கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். தேவையான நேரங்களில் கட்டுப்பாட்டை மேனுவலாக ஏற்க தயாராக இருக்க வேண்டும்.

இந்த தொழில்நுட்பம் குறிப்பாக நீண்ட தூர பயணங்கள், நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் ஓட்டுனர்களின் சோர்வைக் குறைக்க உதவும். ஸ்டீயரிங் கட்டுப்பாடு, வேகத்தை பராமரிப்பது மற்றும் பயணத்தின் சில முக்கிய அம்சங்களில் கார் உதவி வழங்குவதால் ஓட்டுனரின் சுமை குறைய வாய்ப்புள்ளது.
வரும் 2027 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை நடைமுறைகள், இந்த வகையான ஓட்டுனர் உதவித் தொழில்நுட்பங்களை மற்ற சந்தைகளிலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிகிறது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் UN Regulation R171 விதிமுறைகளுக்கு உட்பட்ட சந்தைகளில் இதுபோன்ற வசதிகளுக்கான சட்டப்பூர்வ அனுமதி வாய்ப்புகள் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பம், எதிர்காலத்தில் கார்கள் வெறும் போக்குவரத்து சாதனங்களாக இல்லாமல், ஓட்டுனருக்கு அதிக உதவிகளை வழங்கும் அறிவார்ந்த வாகனங்களாக மாறுவதற்கான படியாக இருக்கும் என்பதை காட்டுகிறது. பாதுகாப்பு, வசதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைக்கும் இத்தகைய புதிய முயற்சிகள், உலகளாவிய கார் சந்தையில் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


