சேதமடைந்த நெடுஞ்சாலைகளை கண்டறிய டேஷ்கேம் கண்காணிப்பு: கான்ட்ராக்டர்களுக்கு செக் வைக்கும் NHAI!
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைப் பள்ளங்கள், சேதங்கள் மற்றும் சாலை பராமரிப்பு குறைபாடுகளை விரைவாகக் கண்டறிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய டேஷ்கேம் கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சுமார் 50,000 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலைகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், சாலை பராமரிப்பு பணிகளை மேலும் விரைவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள், சாலை விரிசல்கள், தடுப்புகள் சேதமடைதல் மற்றும் சாலை குறியீடுகள் அழிந்து போதல் போன்ற பிரச்சினைகளை கண்டறிய அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொள்வது அல்லது புகார்களை நம்பியிருப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த புதிய திட்டத்தின் மூலம் டேஷ்கேம்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதே சாலையின் நிலையை தொடர்ந்து பதிவு செய்யும்.

இந்த கேமராக்கள் மூலம் கிடைக்கும் காட்சிகள் மற்றும் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, சாலைகளில் இருக்கும் குறைபாடுகள் அடையாளம் காணப்படும். இதன் மூலம் எந்த இடத்தில் சாலை சேதமடைந்துள்ளது, எங்கு உடனடியாக பராமரிப்பு தேவைப்படுகிறது என்பதை அதிகாரிகள் இருந்த இடத்தில் இருந்து எளிதாக கண்டறிய முடியும்.
இந்த திட்டத்தின் மூலமாக இந்தியாவின் நீண்ட தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் சாலை பராமரிப்பை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்த முடியும். சுமார் 50,000 கி.மீ சாலைகளை கண்காணிக்கும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுவதால், நெடுஞ்சாலைகளில் ஏற்படும் சிறிய சேதங்கள் பெரிய பிரச்சினைகளாக மாறுவதற்கு முன்பே கண்டறிய வாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பாக, அதிக போக்குவரத்து உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் மற்றும் சாலை மேற்பரப்பு சேதங்கள் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற இடங்களை விரைவாகக் கண்டறிந்து பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த டேஷ்கேம் கண்காணிப்பு உதவும்.
இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கார், பைக் மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சாலை சேதங்களை விரைவாகக் கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி சேதமடைவது குறையலாம். மேலும், சாலை குறைபாடுகளால் ஏற்படும் விபத்துகளையும் குறைக்க உதவும். மேலும், நேர விரயத்தையும் தவிர்க்கும்.
அதேபோல், சாலை பராமரிப்பு பணிகளுக்காக அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வதை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறையும். டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் கிடைக்கும் தகவல்களை பயன்படுத்தி, பராமரிப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், சேதமடைந்த சாலைகளை விரைவாக சரிசெய்யவும் முடியும்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையும், அவற்றில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டேஷ்கேம் தொழில்நுட்பம் மூலம் சாலைகளை கண்காணிக்கும் இந்த முயற்சி நெடுஞ்சாலை பராமரிப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


