310 கிமீ ரேஞ்ச்... சுஸுகி இக்னிஸ் குட்டி EV கார் உலக அளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா?
எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் எளிதாக பயன்படுத்துவதற்கான எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கின்றனர். இதனால், அளவில் சிறிய வகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் சிறிய வகை எலெக்ட்ரிக் காரை உலக அளவில் கொண்டு செல்வதற்காக பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு இக்னிஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் இக்னிஸ் என்ற பெட்ரோல் கார் மாருதி சுஸுகி நிறுவனம் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வந்தது. அந்த கார் கடந்த ஏப்ரல் மாதம்தான் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த இக்னிஸ் பெயரை தற்போது தனது புதிய குட்டி எலெக்ட்ரிக் காருக்கு மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி பயன்படுத்தி உள்ளது.

இந்த புதிய கார் கச்சிதமான அளவில், அழகிய வடிவமைப்புடன் எளிமையான பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 26 kWh திறன் கொண்ட LFP பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் முன்சக்கரங்களுக்கு சக்தியை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 91 எச்பி பவரையும், 133 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் மையாக சார்ஜ் செய்தால் 310 கிமீ வரை பயணிக்கும் ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்னிஸ் என்ற பெயரில் வந்தாலும், ஏற்கனவே விற்பனையில் இருந்த பெட்ரோல் மாடலுக்கும் இதற்கும் டிசைனிலும், தொழில்நுட்பத்திலும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அட்டைப் பெட்டி போன்ற வடிவமைப்பு டால்பாய் கான்செப்ட்டில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், முகப்பில் வழக்கமான கார்களை போன்று கிரில் அமைப்பு இல்லாமல் மூடப்பட்ட அமைப்பில் உள்ளது.

பக்கவாட்டு பகுதியில் கருப்பு நிற வீல் ஆர்ச்சுகள், 15 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள், சில்வர் வண்ண ரியர் வியூ மிரர்கள் மற்றும் சில்வர் வண்ண மேற்கூரை அமைப்பு இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் LED டெயில் லேம்ப்கள், ரூஃப் ஸ்பாய்லர், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய இக்னிஸ் EV கார் 3,570 மிமீ நீளமும், 1,565 மிமீ அகலமும், 1,635 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2,460 மிமீ நீளம் உடையதுடன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மிமீ ஆக இருக்கிறது. காரின் எடை 1,080 கிலோ மட்டுமே என்பதும் இதன் முக்கிய சிறப்பம்சமாக கூறலாம். சிறிய அளவிலான கார் என்பதால் நெரிசலான நகர சாலைகளில் ஓட்டுவதற்கும், குறுகிய இடங்களில் பார்க்கிங் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கும்.

இந்த காரின் உட்புறத்தில் 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க இருக்கைகளுக்கு ஹீட்டிங் வசதி, 45W திறன் கொண்ட சார்ஜிங் போர்ட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெறுகின்றன. இந்த காரில் நான்கு பேர் பயணிக்கும் வகையில் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பேட்டரியானது 50 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜரை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் 0 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை 25 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று AC சார்ஜர் மூலமாக 3 kW மற்றும் 6 kW சார்ஜர் ஆப்ஷன்கள் இடம்பெறுகின்றன. மேலும், வெளிப்புற மின்சாதனங்களை காரின் பேட்டரி மூலம் இயக்க உதவும் V2L வசதியும் இதில் இடம்பெறுகிறது.
புதிய சுஸுகி இக்னிஸ் EV கார் ஐரோப்பா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த காரை அறிமுகம் செய்வது குறித்து சுஸுகி நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும், இந்தியாவில் டாடா பன்ச் உள்ளிட்ட சிறிய வகை கார்களுக்கு மவுசு அதிகரித்துள்ளதால், சுஸுகி நிறுவனம் மாருதி பிராண்டில் சிறிய வகை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் உள்ளது. இந்த கார் நேரடியாக வரவிட்டாலும், இந்திய வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு தேவையான மாற்றங்களுடன் இந்த காரின் தொழில்நுட்ப அடிப்படையில் புதிய காரை அறிமுகம் செய்யும். ஏனெனில், ஏற்கனவே Y2V என்ற குறியீட்டுப் பெயரில் சிறிய வகை எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications



