புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பழசு Vs புதுசு: என்னென்ன மாற்றங்கள்?
இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி கார் உள்ளது.இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.
டிசைன், பேட்டரி, வசதிகள், E85 எரிபொருளில் இயங்கும் எஞ்சின் என பல்வேறு அம்சங்களிலும் இந்த புதிய மாடல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடலுக்கும், தற்போது வந்துள்ள புதிய மாடலுக்கும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெளிப்புற மாற்றங்கள்
புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் டிசைன் வாடிக்கையாளர்களால் பெரிய அளவில் கவர்ந்த விஷயமாக இருப்பதால், மிகவும் கவனமுடன் அழகிய முறையில் நுணுக்கமாக டிசைனில் சில மாற்றங்களை செய்து புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்பகுதியில் டிசைனில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சட்டென பார்த்தால் பழைய மாடலை போலவே இருந்தாலும், டொயோட்டா எஞ்சினியர்கள் மிகவும் சிரத்தையுடன் முன்பு இருந்த கிரில் அமைப்பிற்குப் பதிலாக, தற்போது டைமண்ட் வடிவமைப்பிலான பெரிய கிரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட்டுகள், அதே ஹவுசிங்கில் உள்ள பகல்நேர DRL விளக்குகள் மற்றும் புதிய டிசைனிலான பம்பர் ஆகியவை காருக்கு கூடுதல் பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன.
பக்கவாட்டில் பார்த்தால் இரண்டு மாடல்களுக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது. காரின் நீளம், வீல்பேஸ் மற்றும் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஆகியவை பழைய மாடலைப் போலவே உள்ளன. இருப்பினும், புதிய மாடலில் கருப்பு வண்ணப் பூச்சுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் உள்ளன. GX, VX வேரியண்ட்டுகளில் 17 அங்குல அலாய் வீல்களும், விலை உயர்ந்த ZX வேரியண்ட்டில் 18 அங்குல அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டெயில் லைட்டுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. பழைய மாடலில் இருந்த குரோம் அலங்காரத்திற்குப் பதிலாக புதிய மாடலில் கருப்பு வண்ண அலங்காரப் பட்டை இடம்பெற்றுள்ளது.
தற்போது வந்துள்ள பெட்ரோல் மாடலானது பழைய டிசைனிலேயே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைப்ரிட் மாடலில்தான் இந்த புதிய டிசைன் மாற்றங்கள் மற்றும் உட்புற அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே, கார் வாங்க செல்லும்போது பெட்ரோல் மாடலை வாங்க விரும்புவோர் புதிய டிசைனை எதிர்பார்க்க இயலாது. அதேநேரத்தில், 10.1 அங்குல தொடுதிரையுடன் 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட சில கூடுதல் சிறப்பம்சங்கள் பெட்ரோல் வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

உட்புற அம்சங்கள்
புதிய இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் காரின் உட்புறத்தில் முக்கிய மாற்றங்களை பார்க்க முடிகிறது. விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் முன்பு வழங்கப்பட்ட 10.1 அங்குல தொடுதிரைக்குப் பதிலாக ஹைப்ரிட் VX, ZX வேரியண்ட்டுகளில் தற்போது 12.3 அங்குலத்திலான தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பழைய மாடலில் இருந்த சிறிய டிஜிட்டல் மற்றும் அனலாக் டயல் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கு பதிலாக புதிய 12.3 அங்குலத்தில் முழுமையான டிஜிட்டல் டிஸ்பிளே அமைப்பிற்கு மாறி இருப்பது முக்கிய மாற்றமாக குறிப்பிடலாம்.
மேலும், புதிய VX வேரியண்ட்டில் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. விலை உயர்ந்த ZX வேரியண்ட்டில் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகளுடன் கால்களுக்கான லெக் ரெஸ்ட் வசதியுடன் கிடைக்கும் ஒட்டோமன் இருக்கைகள், முன்பக்க வென்டிலேட்டட் இருக்கைகள், பவர் டெயில்கேட் மற்றும் ஓட்டுனர் இருக்கையின் மெமரி வசதி போன்றவை தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

எஞ்சின் விபரம்
புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் முந்தைய மாடலில் வழங்கப்பட்ட அதே 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என இரண்டு விதமான எரிபொருள் தொழில்நுட்பத் தேர்வுகளில் கிடைக்கும். இதில், பெட்ரோல் மாடலானது 173 எச்பி பவரையும், 206 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
அதேநேரத்தில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயல்படும். பழைய மாடலானது 184 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருந்தது. ஆனால் தற்போது வந்துள்ள ஹைப்ரிட் மாடல் 197 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் கூடுதல் திறனை பெற்றிருக்கிறது.
அத்துடன் இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலில் முக்கிய மாற்றமாக இப்போது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எனப்படும் 20 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையில் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரில் தொடர்ந்து இ-சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மேலும், E20 பெட்ரோலில் இயங்கும்போது பழைய மாடல் லிட்டருக்கு 22.16 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய மாடல் லிட்டருக்கு 22.58 கிமீ மைலேஜ் வரை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது, சற்றே கூடுதல் மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ஹைப்ரிட் மாடலில் இதுவரை இருந்த 168 செல்கள் கொண்ட நிக்கல் மெட்டல் ஹைட்ரைடு பேட்டரிக்கு பதிலாக தற்போது 56 செல்கள் கொண்ட புதிய லித்தியம் அயான் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுவும் மிக முக்கிய மாற்றமாக இருப்பதுடன் சிறந்த செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
வேரியண்ட் விபரம்
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் பழைய மாடலானது GX, GX(O) ஆகிய பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்டுகளிலும், ஹைப்ரிட் மாடலானது VX, VX(O), ZX, ZX(O) ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைத்தது. ஆனால், புதிய மாடலின் பெட்ரோல் வேரியண்ட் GX வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். அதேபோன்று, புதிய ஹைப்ரிட் மாடலானது GX, VX, ZX ஆகிய மூன்று வேரியண்ட்டுகளிலும் மட்டும் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். விலை உயர்ந்த ZX வேரியண்ட்டானது 7 சீட்டர் மாடலில் மட்டுமே கிடைக்கும்.
புதிய இன்னோவா ஹைகிராஸ் கார் பெட்ரோல் மாடலின் GX வேரியண்ட்டின் 7 சீட்டர் மாடலுக்கு கு ரூ.19.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், 8 சீட்டர் மாடலுக்கு ரூ.19.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பழைய வேரியண்ட்டுகளை ஒப்பிடுகையில் ரூ.6,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹைப்ரிட் மாடலானது ரூ.19.99 லட்சம் முதல் ரூ.31.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் பெட்ரோல் மாடல் முந்தைய மாடலைவிட ரூ.6,000 மட்டுமே கூடுதல் விலையில் வந்துள்ளது. அதேநேரத்தில், ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடலில் புதிதாக GX வேரியண்ட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், ஏற்கனவே இருந்த ஹைப்ரிட் பேஸ் வேரியண்ட்டைவிட தற்போது ரூ.2.77 லட்சம் குறைவான விலையில் ஹைபிரிட் மாடலை வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது.
முந்தைய மாடலில் VX வேரியண்ட்டிலிருந்துதான் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், முந்தைய VX வேரியண்ட்டைவிட ரூ.2,000 மட்டுமே கூடுதல் விலையில் புதிய VX வேரியண்ட் வந்துள்ளது. அதேபோன்று, முந்தைய மாடலின் ZX(O) வேரியண்ட்டைவிட ரூ.15,000 மட்டுமே கூடுதல் விலையில் அதற்கு இணையான புதிய ZX வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
எனவே, விலையிலும் மிகவும் கவனமாக வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தாத வகையில் டொயோட்டா நிர்ணயித்துள்ளதும் வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கிறது. மொத்தத்தில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக டெயோட்டா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தொடர்ந்து தக்க வைக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications



